ஆயுள் அதிகரிக்க சில டிப்ஸ்கள்!
ஆயுளை அதிகரிக்கும் பழக்கங்கள்
உடனே ஆபீஸ் போவதை நிறுத்திவிடலாமா என்று கேட்காதீர்கள். அதை நிறுத்தினால் சோறு கிடைக்காது. அதை தவிர்த்து பிற விஷயங்களை செய்யவேண்டியதைத்தான் சொல்லுகிறோம். கேளுங்கள்.
வியர்வைக் குளியல்
ஆஸ்பெட்டாஸ் ஷீட் போட்ட குளியல் அறையைத்தான் மேன்ஷனில் கட்டுகிறார்கள். துண்டைக் கதவில் போட்டுவிட்டு ஜட்டியுடன் அப்படியே உட்கார்ந்துவிடுங்கள். குபீரென வெப்பத்தில் வியர்க்கும். ஆம் . பிளான் அதுதான். நன்கு வியர்த்தால் உடலின் அழுக்குகள் கழிவுகள் வெளியேறிவிடும். பிறகு ஹமாம் போடாமலேயே குளிக்கலாம். ஆயுளும் அதிகரிக்கும் என ஜமா இன்டர்னல் மெடிசின் இதழ் 2015 இல் அறிக்கை வெளியிட்டது. ஏறத்தாழ 2000 பின்லாந்து ஆட்களிடம் செய்த ஆய்வு அறிக்கை முடிவு இது. வியர்வையால் இதயத்துடிப்பு அதிகரிப்பதை எளிய உடற்பயிற்சி என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
தியானம்
வேதாத்ரி தொடங்கி கைலாசா நித்தியானந்தா வரையிலும் சொல்வது இந்த ஒன்றைத்தான். நமக்கு கண்ணை மூடினால் தியானத்தை தவிர அத்தனையும் வருகிறது என்பதால் இதை எங்கே சென்று முறையிட. விடுங்கள். அப்படி செய்தால், சிறிதுநேரம் மூளை, மனது ஆகியவற்றின் கொதிப்புகள் அடங்கும். யோசிப்பது குறையும். அதுபோதாதா வாழ்நாள் அதிகரிக்க.....
ஆங்க்ரி பேர்டு ஆகாதே!
இடதுசாரிகளுக்கு கம்யூனிஸ்ட் மாதிரி பேசாத என்றால் கோபம் வருகிறது. பாஜக காரன் மாதிரி பேசாத என்றால் வலதுசாரிகள் வேல், சூலத்தோடு பாய்வார்கள். இந்த மாதிரி சூழலில் உடலில் ஐஎல் - 6 என்ற ஹார்மோன் சுரக்கிறது. இதுதான் கோபத்தின் அனலை உடலின் ரத்தத்தில் கலக்கச்செய்வது. இதனால்தான் அவை உடலின் நோய்களாக பின்னர் மாறுகின்றன. எனவே கோபம் என்றாலும் அழுகை என்றாலும் சரி, வீட்டுக்குப் போய் கதவைச் சாத்திவிட்டு அழுது தீர்த்துவிடுங்கள். இல்லையெனில் கஷ்டம்தான்.
கூடுதலாக ஆல்கஹாலை இரு டம்ளர்கள் ஆண்களும், ஒரு டம்ளர் பெண்களும் எடுத்துக்கொள்ளலாம்.இதனால் மனச்சோர்வைக் குறைக்கலாம் என்கிறது மேற்குலக ஆய்வு. போரம் மாலில் எலைட் கடையில் குவியும் கூட்டத்தைப் பார்த்தால் இதனை நம்பித்தானே ஆகவேண்டும்.
ஸ்மார்ட் நண்பன்
நண்பன் பழனிச்சாமி மாதிரி ஸ்மார்ட் போன் அனைத்தையும் காது கொடுத்து கேட்காதுதான். ஆனால் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டிக் டொக் என மக்களோடு இணைந்து இருக்க அவைதானே உதவுகின்றன. உங்களின் பிரச்னையை பிறரிடம் பகிர இத்தளங்கள் உதவி அதன் வழியாக காசு பார்க்கின்றன. நமக்கு கிடைக்கும் நன்மை புறணி பேசியாவது மனநலம் தேறுவதுதான். இதனால் போனை சூதானமாக பயன்படுத்தி வெல்லுங்கள்.
இறைச்சியைக் குறையுங்கள்.
சாப்பிடுவது பற்றி எது சொன்னாலும் சர்ச்சையாகும் என்பதால், இறைச்சியின் அளவை மட்டும் குறைத்துக்கொள்ளுங்கள் என்று மட்டும் சொல்கிறோம். குறிப்பாக சிவப்பு இறைச்சியின் அளவை குறையுங்கள். அவை உடல் உறுப்புகளுக்கு நிறைய வேலைகளை வைக்கின்றன.
காபி, டீ பருகுங்கள்
லியோ, நரசுஸ், சத்யா காபி ஏதாவது ஒன்றை தினசரி மூன்று கப்களுக்கு மிகாமல் உங்கள் நண்பர்களோடு வண்ணத்திரை கசமுசாக்களை பேசியபடியே குடிக்கலாம். ஆன்டி ஆக்சிடன்டுகள் நிரம்பியதால் இவை உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
கட்டிப்புடி வைத்தியம்.
கண்டிப்பாக உங்கள் காதலி, மனைவி ஆகியோரிடம் மட்டுமே இதனை செய்யவேண்டும். காதல் நிரம்பிய மனைவிக்கு நீங்களோ, இல்லை அவர் உங்களுக்கோ மசாஜ் செய்துவிட்டால் உடலில் நோய் பாதிப்புகள் குறையும். இதில் முக்கியம் செய்யும் வேலை அல்ல. பிரியத்தோடு செய்யும் குணம்தான் முக்கியம். அன்போடு அடிக்கடி கட்டிப்பிடிப்பதும் அவசியமான மனப்பதற்றத்திற்கு மருந்து.
நன்றி - டைம்