வாழ்க்கையை அழித்த இளம் வயது பாலியல் வல்லுறவு - ரிச்சர்ட் ராமிரெஸ்
அசுரகுலம்
ரிச்சர்ட் ராமிரெஸ்
1980களில் ரிச்சர்ட் பயமுறுத்தாத ஆட்களே கிடையாது. பதினான்கு மாதங்களில் இவர் கொலை செய்வதில் காட்டிய வேகம் போலீசையே யார் இவன் என தேட வைத்தது. பதிமூன்று பேருக்கு சொர்க்க வாசல் டிக்கெட் போட்டவர். ஐந்து பேரை கொலை செய்ய முயற்சித்து நரகத்தின் வாசலை விஆர் படமாக காட்டினார்.
டைஹார்ட் படத்தில் குற்றவாளிகளை கைது செய்ய கார்கள், ஹெலிகாப்டர் சகிதமாக வருவார்களே அப்படி சினிமா போல வந்து ராமிரெசை மீட்டார்கள். எங்கிருந்து? மக்களிடமிருந்துதான். அப்போது ராமிரெசை கொலைகாரன் என அடையாளம் கண்டனர் மக்கள். உடனே தெலுங்கு இயக்குநர் போயபட்டி சீனு போல யோசித்து அருகே கிடந்த இரும்பு குழாய்களை எடுத்து கண்டமேனிக்கு வெளுக்கத் தொடங்கினர்.
சீரியல் கில்லருக்கும் வலிக்கும்தானே? அதைப் பார்த்த போலீஸ், உடனே ஓடிப்போய் காப்பாற்றினர். சட்டம் தன் கடமையைச் செய்யவேண்டாமா? நல்லவேளை என்னைக் காப்பாற்றினீர்கள் என போலீசுக்கு நன்றி சொன்னார் ராமிரெஸ்.
ராமிரெசின் க்ரைம் வாழ்க்கை 13 வயதிலிருந்து தொடங்கியது. பெரிய அப்பாடக்கர், டகால்டி ஆள் எல்லாம் கிடையாது. சிம்பிளாக வழிப்பறி திருடர் அவ்வளவுதான். கொலைகாரர் ஆனபின்பு அவர் சொன்ன வார்த்தைகள் உங்களுக்காக ....
”எனக்கு கொலை என்றால் பிடிக்கும். ஒருவரைக் கொன்று அவரின் ரத்தம் வெளியேறுவதைப் பார்ப்பேன். துப்பாக்கியால் தலையில் சுட்டு ரத்தம் வெளியேறி மெல்ல அவர்கள் சாவதை பார்ப்பேன். அதுதான் எனக்கு மகிழ்ச்சி தந்தது. இல்லையெனில் கத்தியால் அவர்களின் உடலை துண்டாக ரத்தம் தெறிக்க வெட்டுவேன். அவர்களின் முகம் வெளிறிப்போவது எனக்கு சந்தோஷம் தந்தது. நான் ஒரு பெண்ணிடம் அவள் வைத்திருந்த பணத்தைக் கேட்டேன். அவள் தர மறுத்தாள். அவள் உடலை வெட்டி அவள் கண்கள் இரண்டை தனியாக தோண்டி எடுத்தேன்’’ என்றான்.
டெக்சாசின் எல்பாசோவில் பிறந்து வளர்ந்த ராமிரெசுக்கு அவரது தந்தையே வினையாகிப் போனார். அவரே ராமிரெசை பாலியல் ரீதியாக சுரண்டினார். அதோடு அவனை கிடைத்த வாய்ப்பில் எல்லாம் அடித்து நொறுக்கினார். சைக்கோ அப்பாவிடமிருந்து தப்பிய ராமிரெஸ், சகோதரன் மிகேலிடம் தஞ்சமடைந்தார். இவர் இன்னொரு வகையில் சைக்கோ. வியட்நாம் போரில் பங்கேற்றவர். பெண்களை சித்திரவதை செய்து சந்தோஷப்படும் டரியல் மனிதர்.
நாம் செய்வதை அடுத்தவர்களுக்கு காட்டினால்தானே மனம் ஆறும்? அதைத்தான் மிகேல் செய்தார். தான் போரில் சித்திரவதை செய்து கொன்ற வியட்நாம் பெண்களை புகைப்படம் எடுத்து வைத்திருந்தார். தலையற்ற, முண்டமான புகைப்படங்கள் பயந்து நடுங்கிய ராமிரெசின் உடல் நடுக்கத்தை போக்கின. மெல்ல உணர்ச்சிகள் அவரிடம் மறைந்து இதயம் எஃகு போலானது. மிகேல், தன் மனைவியை சுட்டுக்கொன்றார். பதிமூன்று வயதில் இதெல்லாம் நடந்தால் ஒருவரின் எதிர்காலம் எப்படி இருக்கும் சொல்லுங்கள்.
சிறுவயதில் பாலியல் ருசி கண்ட ராமிரெஸ் மெல்ல எல்எஸ்டிக்கு அடிமையானார். போதைக்குள்ளாகும் ஆட்களுக்கு உடலின் ஆதி உணர்வுகள் பிரமாண்டமாக எழுவது இயல்புதானே? செக்ஸ் மீதான வெறி அவருக்குள் பீறிட்டு எழ, அப்போதே வல்லுறவுக்கு முயற்சித்தார். ஆனால் அதற்கு அந்தப்பெண் செட் ஆகவில்லை. இதனால் கோர்ட்டில் வழக்கு நிற்கவில்லை. பெண், அதற்கான ஆதாரங்களை உறுதியாக தரவில்லை என்பதுதான் காரணம். ஆனால் ராமிரெஸ் தான் என்னசெய்யவேண்டும் என தெளிவாக முடிவெடுத்துவிட்டார்.
1984 ஜூன் 28 அன்று 74 வயது பாட்டி வின்கோவை போட்டுத்தள்ளினார். கழுத்தை அறுத்து வல்லுறவு செய்து என போலீசுக்கு அதைப் பார்த்து ஒரு நிமிடம் திக்கென ஆகிவிட்டது. அடுத்தடுத்து நடந்தவை வேற லெவல். அடுத்த சில மாதங்கள் ஓய்வெடுத்த ராமிரெஸ் 1985ஆம் ஆண்டு மார்ச் 17 அன்று மரியா ஹெர்னான்டஸ் என்ற பெண்ணின் வீடு புகுந்தார். அந்த பெண் தப்பினாலும் அவரின் இணையர் டாயல் மாட்டிக்கொண்டார். அவரைப் போட்டுப் பிளந்தார்.
அடுத்து சில மாதங்களுக்குப் பிறகு வின்சென்ட், மேக்சைன் என்ற தம்பதிகளை துப்பாக்கியால் சுட்டார். மேக்சைன் என்ற பெண்மணியின் இரு கண்களையும் பிடுங்கி வெளியே எடுத்தார். ராமிரெஸ் வெறும் செக்ஸ் ஆசை மட்டும் கொண்டவரல்ல. போகுமிடங்களிலுள்ள பொருட்களையும் திருடிக்கொண்டு வந்துவிடுவார். பின்னே தொழிலை மறக்கலாமா? விரைவில் லாஸ் ஏஞ்சல்ஸ் முழுக்க இரவுக் கொலைகாரன் என்ற பெயர் பேசப்படத் தொடங்கியது. சாத்தானை வழிபடத் தொடங்கிய ராமிரெஸ் அம்முறையில் கொலையினை வடிவமைத்தார். வீடுகளை உடைத்து உள்ளே செல்பவர், பெண்ணை அடித்து வல்லுறவு செய்து சித்திரவதைக்குள்ளாக்கி இறுதியில் ரத்தம் பீறிடக் கொல்வார்.
போலீஸ் பிணங்களைப் பொறுக்க வந்ததே ஒழிய குற்றவாளியைப் பிடிக்கவில்லை என பத்திரிகைகள் எழுத, மக்களும் அதனை அப்படியே நம்பினர். இதனால் கதவு லாக்கர்கள், ஜன்னல் கம்பிகள், துப்பாக்கிகள் விற்பனை நகரில் உயர்ந்தது. அதேசமயம், ராமிரெஸின் வண்டி நம்பர் பிளேட் கிடைத்து அதனை போலீஸ் தேடிக்கொண்டிருந்தது. அவரின் கொலை முயற்சியில் சிலர் தப்பித்தார்கள். அவர்கள் சொன்ன தகவல்படி தோராயமான படம் ஒன்று ரெடியாகி பத்திரிகையில் வெளியானது.
அப்புறம் என்ன அதை வைத்தே பிடித்துவிட்டனர். இந்தியாவில் நடக்கும் முஸ்லீம் கும்பல் கொலை போன்ற முயற்சி. போலீஸ் எப்படியே காப்பாற்றினர். விஷ வாயு தண்டனை கிடைத்தது. கிடைத்த எல்லா வழக்குகளையும் ராமிரெஸ் தலையில் சுமத்தி நடந்த வழக்கு, அதிக செலவு வைத்தது. 50 ஆயிரம் பக்க ஆவணங்கள் வழக்குரைஞர்களை அயர வைத்தது. விசாரணை,வாய்தா என செல்ல இருபத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. மரணதண்டனை விதிக்கும்போது கூட ராமிரெசுக்கு பெரிய பயம் ஒன்றும் இல்லை. நீதிபதியைப் பார்த்து உங்களை நான் டிஸ்னிலேண்டில் சந்திக்கிறேன் என்றார். பின்னர், புற்றுநோயால் 53 வயதில் இறந்துபோனார்.
வின்சென்ட் காபோ
நன்றி - ஆல்தட்இஸ் இன்ட்ரஸ்டிங்