லவ் இன்ஃபினிட்டி: சோறு முக்கியம் ப்ரோ!





Estilo Afro-Latino – Latinx Xicanx Pride / Wall Art / Digital Print / Cultural Art / Erte Art Deco T
etsy/pinterest



22

லவ் இன்ஃபினிட்டி

குமார் சண்முகம்

தொகுப்பு: லவ் ரஞ்சன். சதீஸ் நிர்வானா




வினோத் நல்லவர்தான். ஆனால் தான் இப்படி இருக்கிறோமே என்று நினைக்கும்போது பொங்கி விடுவார். கூட நாம் இருந்தால் எரிமலை லாவா நம்மீது கொட்டிவிடும் இல்லையா? அதேதான் நடந்தது.

எனக்கு எப்போதும் சாப்பாடு என்பதைவிட படிப்பு என்பது மீது தனிக்கிறுக்கு இருந்தது. அதற்காக வேலராம மூர்த்தி, பூமணி என்று யோசிக்காதீர்கள். நண்பர்கள் கொடுப்பதை எனக்கு படிக்கலாம் என்று நம்பிக்கை தரும் நூல்களை படிப்பேன். இதனால் ஏற்படும் அவமானங்களை, கிண்டல்களைப் பற்றியெல்லாம் அணுவளவும் கவலைப்படாதிருந்தேன். அது அப்போது.


அன்று நன்றாகத்தான் விடிந்தது. சரியாக வியாழக்கிழமைகளில் அதுவும் ஒன்று. நான் கையில் இருந்த வேலை செய்து கிடைத்த பணத்தை சாப்பிட்டு, டீ குடித்தும் கரைத்திருந்தேன்.

கூடவே தங்கியிருந்த வினோத் அண்ணாவின் நண்பர், சாரங்கிநாதன். என்ன வேலை, ஏதோ பிசினஸ் செய்து நஷ்டமாகி விரக்தியில் இருந்தார். அங்கே வினோத் அண்ணாவின் வீட்டில் ஒருவாரமாக டென்ட் அடித்துவிட்டார். என்னைப்போலவேதான். ஆனால் முடிந்தவரை ஒரு வார்த்தை பேசுகிறாரா என்றால் கிடையாது. சாப்பிடும்போது மட்டும் பார்க்கலாம். மற்றபடி ஜோதிட புத்தகங்களை படித்துகொண்டிருப்பார். டிவி ஜோதிடர்களின் நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருப்பார். என்ன ஆசை அவருக்கு, டிவி ஜோதிடர் ஆவதே அவரது வாழ்க்கை லட்சியம்.

பொதுவாக நண்பரின் வீட்டுக்கு செல்கிறீர்கள் என்றால் என்ன செய்வீர்கள்? வேலையை நீங்களும் ஏதோவொன்று ஏற்று செய்வீர்கள் அல்லவா? சாரங்கி, பூப்போட்ட லுங்கியைக் கூட அவுந்திருச்சு கொஞ்சம் கட்டிவிடேன் என்று பிறரைக் கேட்கும் சொகுசு மனிதர். சில நாட்கள் நானும் கூட நினைத்தேன். சோறு ஊட்டிவிடக்கேட்பாரோ, லுங்கியை கட்டிவிடவேண்டுமோ என்று. நல்லவேளை பேரிடரிலிருந்து நான் தப்பித்தேன்.

இதற்கிடையில் மைதிலியின முகம் வேறு மாலைவேளைகளில் நினைவில் அட்டையாய் ஊர்ந்தது. அப்படி நினைவில் வரும்போது பச்சையம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள பாலத்தில் சென்று உட்கார்ந்துவிடுவேன. மாலை வெயிலின் சூடு மெல்ல புட்டத்தை சுட்டு இடுப்புவரை ஏறும்.

2


அன்று டீக்குடிக்க சில்லறைக்காசுகளைப் பொறுக்கி சென்றோம். தொப்பி பாபு, டீக்கு பணம் கொடுத்தார். என்ன அதற்காக அவரின் கலை ஆர்வப் பேச்சுக்கு காது கொடுத்தே ஆகவேண்டும். இல்லையெனில் என்ன நைனா என நையாண்டி செய்ய தொடங்கிவிடுவார். ஆள் பார்க்க நீட்டான ஆள் மாதிரி தெரிந்தாலும் ஈகோ விஷம் அதிகம். வினோத் அண்ணாவிற்கு சில உதவிகளைச் செய்து கொடுத்து அவரை காக்கை இயக்கத்திற்கு பயன்படுத்திக்கொளவதே அவரின் பிளான்.

இதனை கவிக்குமார் மகிழ்வுடன் ஆதரித்தார். காக்கை அமைப்பின் ஊடக ஒருங்கிணைப்பு இவர் பொறுப்பு. என்ன வேலை ஐடி காரர்களிடம் போய் அவர்களை குற்ற உணர்வுக்கு உள்ளாகும்படி பேசுவது, அமைப்புக்கு விலையின்றி வேலை செய்யும் ஆட்களை உருவாக்குவது,   அதோடு நிதியையும் சேர்த்துப் பெறுவது. இதைத்தான் அவர்கள் செய்துகொண்டிருந்தார்கள். எனக்கு இது கட்டக்கடைசியில்தான் தெரிய வந்தது. அப்போது எனக்கு அவசியமாய் ஒரு வேலை தேவைப்பட்டது. அதற்கு வேலை செய்த அனுபவம் வேண்டுமே? இதழியல் படித்திருந்தால் கூட டக்கென ஒரு சம்பளம் பேசி போயிருக்கலாம். ஆனால் நான் படித்த படிப்பிற்கு எங்கு போய் பத்திரிகை வேலை வாங்கலாம் என்றும் தெரியவில்லை.


வியாழக்கிழமை அன்று, கையிலிருந்த இருபது ரூபாயை செலவழித்து விகடன் வாங்கிவிட்டேன். சாரங்கி, சப்ஜாடாக தக்காளியைக் கூட மிச்சமின்றி சாப்பிட்டாரே ஒழிய நயா பைசாவுக்கு ஊறுகாய் கூட எங்களுக்கு வாங்கித் தரவில்லை. வினோத்துக்கு அறிமுகமானவரின் அண்ணனாம். இடி அமீனின் தம்பி மாதிரி இருந்தார். நிச்சயம் ஓராண்டுக்கு முன்பு சிரித்திருக்ககூடும்.


என்னடா, இவரு மரியாதைக்கூட கையில இருக்கிற ஒரு ரூவாயைக்கூட தரமாட்டேங்கிறாரு. நாம என்ன காமதேனுவா, இவருக்கு குடுத்திட்டே இருக்கறக்கு என புலம்பிவிட்டார் வினோத். ஆனாலும் எதுவும் மாறவில்லை.

சாப்பாட்டிற்கான காய்கறிகளை அரிந்துகொடுத்துவிட்டு விகடன் படிக்க உட்கார்ந்தேன். குழம்பு, ரசம் என்றாலும் வினோத் மறக்காமல் காசு போட்டு வாங்கும் சமாச்சாரம் காராபூந்தி, மிக்சர், முறுக்கு என ஏதோவொன்று இருக்கவேண்டும். இல்லையெனில் அவரை ருத்ரனாகவே பார்க்கவேண்டும். எனக்கு அது எப்படி தெரியும்?

சாப்பிடும்போது தெரியவில்லை. பாதியில் திடீரென சிப்ஸ், முறுக்கும ஏதாவது இருக்குதா என்றார்.

இல்லைண்ணே எதுவுமே வாங்கிட்டு வரலியே

ஏன்டா?

அண்ணே, அரிசி, தக்காளிக்குத்தான் பணம் இருந்தது.

அப்போதும் சாரங்கி அமைதியாக சாப்பிட்டுக்கொண்டே இருந்தார்.

உனக்கு விகடன் வாங்கறக்கு மட்டும் பணம் இருக்குது, நூறு கிராம் காராபூந்தி வாங்கியிருந்தா நல்லா இருந்துருக்குமே என்றார்.


நீங்க முதல்லேயே சொல்லிருந்தா யாருகிட்டயாவது காசு வாங்கியிருக்கிலாமே?

போடா, நான் இப்படியெல்லாம் முறுக்கு, மிக்சர், பூந்தி இல்லாம ஊரில் சாப்பிட்டதேயில்லை

என்று சொல்லும்போதே கண்ணில் கண்ணீரின் தடம் தெரிந்துவிட்டது. எப்போதும் ஆக்ரோஷமாக ஒவ்வொன்றுக்கும் பதில் பேசும் புகைப்படக்காரர்தான் அழுகிறாரா என்று எனக்கு தெரியவில்லை.

நான் எது பேசினாலும் அவர் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று தெரிந்துவிட்டதால், நான் பதில் பேசவில்லை.


சாரங்கி டிவியில் தெரிந்த பிம்பத்திலேயே மனம், உடல் இரண்டையும் குவித்திருந்தார். அவரின் காதுள்ள கல் சித்திரம் விரைவிலேயே டிவி ஜோதிடர் ஆகிவிடுவார் என்பதற்கு சாட்சி.

அவர் மீதான கோபத்திற்கு நான்தான் கடத்தியா?

பின் மெல்ல சாப்பிட்டு கைகழுவியபின், என்னை அழைத்தார் வினோத் அண்ணா.

டேய் தம்பி குவாவாடிஸ் வரை வேலை இருக்கு. வண்டில ஏறு

சரிண்ணே

வண்டி போளூர் சாலையில் சீறத்தொடங்கியது.


(காதல் சொல்லுவேன்)