லவ் இன்ஃபினிட்டி: காதலை இப்படியும் சொல்லலாம்!
vicky m\pinterest |
24
லவ் இன்ஃபினிட்டி
குமார் சண்முகம்
தொகுப்பு: ககன்சிங், சசாங் கௌர்
உண்மையில் பிருந்தாவிடம் இரண்டு மாதங்களாக பேசவில்லை. திடீரென அவளிடம் பேசவேண்டுமென தோன்றியபோது, காக்கைகள் அமைப்பில் அதிகாரப் போட்டி தொடங்கியிருந்தது. ஓர் அமைப்பு, புகழ்பெறாதவரை காசு கிடைக்காதவரை யாரும் அதனைத் தலையில் தூக்கி திரியமாட்டார்கள். ஆனால் புகழடைந்து விட்டால் ஏற்றிய கிரீடத்தை கீழிறக்குவது கடினம். நான், என்னால் என்ற வார்த்தைகளை மெல்ல பல நாக்குகளிலிருந்து வரத்தொடங்கியவுடன் அங்கு இடத்தை காலிசெய்துவிட்டேன்.
அங்கிருந்தபோது போனில் டவர் கிடைப்பது கடினம். எனது சாம்சங் குரு, எப்போது முடங்கும் என்றே தெரியாத நிலையில் இருந்தது. இதனால் அங்குள்ள போஸ்ட் ஆபீசில் அஞ்சல் அட்டைகளை வாங்கி வீட்டுக்கு அம்மாவுக்கு மட்டும் கடிதம் எழுதி வந்தேன்.
அப்போது நான் தங்கியிருந்த இடத்தின் முகவரியை எழுதி அனுப்பினேன். ஏன் அப்படிச் செய்தேன். அப்பன் நம்ப வேண்டுமே? அதற்காகத்தான். அதை பிருந்தா வாங்கியிருப்பாள் என்று எனக்கு எப்படித் தெரியும்?
சாரங்கியோடு சமாளித்து நாட்களை ஓட்டுவதே சிரமமாகிக்கொண்டிருக்க, இந்து பத்திரிகை பழனிச்சாமி பார்சலோடு மேலேறி வந்தார். வினோத், நம்மாழ்வாரின் வீடியோக்களை தொகுத்துக் கொண்டிருந்தார்.
ஏப்பா, வினோத்து உனக்கு கொரியர் வந்திருக்குப்பா என மலர்ச்சியோடு வந்து நின்றார். கூட அவர் வீட்டு குழந்தைகளும் பரவசத்தோடு வினோத் வாங்கிய கொரியரைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதன் பெறுநர் வேறுயாருமல்ல, நான்தான். பிருந்தாதான் அனுப்பியிருந்தாள்.
பார்த்த உடனே டேய் தம்பி உனக்குத்தாண்டா என்று சொல்லிவிட்டு பழனிச்சாமியிடம் சில வார்த்தைகள் பேசி அனுப்பினார். டிவி பார்த்துக்கொண்டிருந்த சாரங்கி, டிவி ஜோதிடரின் அரிய சொல் முத்துக்களை நோட்டில் குறித்து வைத்துக் கொண்டிருந்தார். வினோத் அண்ணாவின் வீடு மூன்று தடுப்பாய் பிரிந்திருந்தது. முதல் தடுப்புச்சுவரில் அவரின் கணினி அறை, இரண்டு டிவி உள்ள ஹால், மூன்றாவது படுக்கை அறை, சமையல் அறை.அதைத்தாண்டி சென்றால் பூஜை அறை சிறியதாக இருந்தது. அவர் வீட்டின் கதவைத் திறந்தால் வீட்டில் சமையல் அறை முதலில் கண்ணில் படும்.
கடிதத்தை எடுத்துக்கொண்டு மாடிக்குப் போனேன்.
நீ இப்படி முரட்டு முட்டாளா இருப்பேன்னு நான் நெனச்சுக்கூட பார்க்கல. உன்னோட கேர்ள் ஃப்ரெண்ட மறக்கறக்கு அறுபது நாள் தேவைப்பட்டது. ஆனா, அதற்கப்புறம் கூட என்னைக் கூப்புடத் தோணுல. நீ விரும்பற பொண்ணு பங்காரம், அப்ப உன்னைத் தேடி வந்த நான் என்ன அகங்காரமா?
எனக்கு வேலை இருக்கு. நீ தங்கியிருக்கிற இடத்துக்கு வந்தாலும் கூட என்னால வேல செஞ்சு உன்ன காப்பாத்த முடியும். சும்மா காசுன்னு சொல்லிட்டு இருந்தீன்னா.. சத்தியமாக இதயம் வெடிச்சுத்தான் சாவ. பாரு, இதுக்குத்தான் முன்னாடியே உன்ன நான் வீட்டுக்குக்கெல்லாம் கூப்பிட்டேன். அப்பவே பட்டாச பத்த வெச்சியிருந்தீன்னா, உன்ன கல்யாணம் பண்ணறதுக்கு ஒரு ஆதாரத்த ரெடி செஞ்சிருக்கலாம்.
ஆனா நீ என்னடான்னா, நேர்மை அப்படின்னெல்லாம் பேசுற. நான் உன்னோட இடத்துல இருந்தன்னா, நிச்சயம் இதுக்கு செகண்ட் ஒப்பீனியன் எல்லாம் கேட்டுட்டு இருந்திருக்க மாட்டேன். அந்த நேரத்தை சந்தோஷமாக செலவழிப்பேன். ஓகே உன்னோட அந்த தன்மை எனக்கு பிடிச்சிருந்துது. ஆனா, நீ வேலை, சம்பளம்னு காலத்தை தள்ளிப்போடறதைப் பார்த்தா, மாசாமாதம் வர்ற பீரியட்டை நீ நிறுத்தமாட்டயோன்னு தோணுது. இன்னும் அஞ்சே அஞ்சு பீரியட்தான் உனக்கு டைம். அதுக்கு மேல நீதான் என் தற்கொலைக்கு காரணம்னு சொல்லிட்டு, ஊஞ்சலூர்ல வந்து ரயில்ல விழுந்துருவேன் பாத்துக்க. நீ சொல்றதுக்கு பம்மறதுனால நானே சொல்லிறேன். ஸ்ட்ரிக்ட்லி ட்ரூலி ஐ லவ் யூ.. இந்த எழுத்து மட்டும் பெரிதாக பிரஷில் எழுதியது போல இருந்தது.
உன்
பிருந்தா.
எழுதியது எல்லாம் ஓகே. நல்ல அப்சர்வேஷன்தான். இந்தளவு என்னை கவனிச்சு விகடன் போல மார்க் போட்ட ஒரே பொண்ணு இவதான் என்று நினைத்தபோது அடித்த காற்றில் கடிதம் படபடத்தது. ஐ லவ் யூ என்ற வார்த்தையை மூக்குக்கு அருகில் கொண்டு வந்து பார்த்தேன். ரத்தக் கவிச்சி. அட சண்டாளி முண்டை. நரம்பைக் கீது அறுத்துக்கிட்டாளா.. ஆகா கன்ஃபார்மா கொடுமுடி ஸ்டேசன்ல பஞ்சாயத்து இருக்கு மாப்ளே ன்னு மனக்குரல் கேட்டது. இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் உடம்பு இருக்கிற சைசுக்கு குத்தினா, நம்ம பாடி தாங்குமா என்று யோசித்தபோதுதான். கடிதத்தின் பின்புறம் குறிப்பு ஒன்று கண்ணில் பட்டது.
லூசு ரொம்ப பயப்படாதே. மணிக்கட்டு நரம்பெல்லாம் அறுக்கல. பீரியட் ரத்தத்தை எடுத்து எழுதினேன். வீணாப் போறதுதானே செரி உபயோகமாக இருக்கட்டும்னு. மரியாதைய வீட்டுக்கு வந்து பேசு. இல்லன்னா, சம்பு கிட்ட நான் வந்து பேசியிருவேன்.
எனக்கு பயத்தில் உள்ளாடையிலேயே இரண்டு சொட்டு சிறுநீர் கசிந்துவிட்டது. இப்படி தீவிரமா லவ் பண்ணுவான்னு தெரியலையே. ஏதோ வீடியோ பார்த்துட்டு வந்து கட்டிப்பிடிக்கிறான்னுதானே நெனச்சேன். மனதுக்குள் புலம்பல் அதிகமாக, கவிக்குமார் தலையை கைகளால் சீவியபடியே மாடிக்கு வந்தார்.
தம்பி
அண்ணே
சாப்பிட்டியாப்பா?
நீங்க?
இப்பத்தான் சாப்பிட்டேன்.
வினோத்தான் பண்றான். நீயும் போய் சாப்பிடு. நைட் இதழ் சம்பந்தமாக ஒரு வேலை இருக்கு. செஞ்சிடலாம். நாளைக்கு நாம சாயந்திரம் புக்கை பிரஸ்ஸூக்கு அனுப்புறோம். ஓகே.
அந்த புக்கை தயாரிக்கும்போது, காக்கை அலுவலகத்திற்கு வாரத்திற்கு இருமுறைதான் போவேன். கரண்டு கிடையாது. வாடகைக்கு விட்டவருக்கு இதுவரை மூன்று மாத வாடகை பாக்கி. பீஸ் கட்டையை பிடுங்கி வைத்துவிட்டார். நான் இரவில் பெரும்பாலும் பழைய அலுவலகத்திற்கு போய் தூங்குவேன். அங்கு ஒரு சிறப்பு என்னவென்றால், சீக்கடி கடிக்கிறது என அடித்தால் பதினைந்து கொசுக்கள் அடிபட்டு வீழும். வீட்டின் குடித்த தண்ணீர் ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்தது போல. அப்படி ஒரு முக்கல் நாற்றம்.
மெழுகுவத்திகள்தான் படிப்பதற்கு துணை. சில செட்டுகளை வைத்து அந்த மாதத்தை ஓட்டினேன். திடீரென ஓனர உள்ளே லைட் தெரிந்தால், கதவைத் தட்டி வாடகை கேட்பார். ஒரே பதில்தான். கவிக்குமார் சென்னையில் இருக்கிறார். வந்தவுடன் வாங்கிக் கொள்ளுங்கள்.
எந்த உணர்ச்சியுமில்லாத பீ ஆமை முகம் வீட்டு ஒனருக்கு, கண் இரப்பைகள் கீழே தொங்க, பெரிய பச்சைமிளகாய் மூக்கு. நங்கென்னு குத்திவிடலாம் என எனக்கு உண்மையாகவே நிறைய முறை தோன்றிவிட்டது. இருந்தாலும் அவருக்கு சுமாரான ஒரு ஸ்லீவ்லெஸ் போடும் நாற்பது வயது மனைவி இருந்தார். இதனால், பொதுநலன் கருதி வன்முறையை கைவிடும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த நிலையில் பிருந்தா எழுதிய வாசகங்களை நினைத்துப் பார்த்தால் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.
(காதல் சொல்லுவேன்)