மாற்றுத்திறனாளி தங்கையைக் காப்பாற்றத் துடிக்கும் பாச அண்ணன்! வீரபத்ரா 2006 - பாலகிருஷ்ணா, சதா, தனுஸ்ரீ தத்தா

 














வீரபத்ரா 2006
தெலுங்கு
பாலகிருஷ்ணா
இயக்குநர் - ஏ.எஸ். ரவிகுமார் சௌத்ரி
வசனம் மருதுரி ராஜா 
இசை - மணி சர்மா 






முரளி கிருஷ்ணா, தனது சொந்த ஊரிலிருந்து ஹைதராபாத்திற்கு வருகிறார். தனது சகோதரியை நல்ல கல்லூரி தேடி படிக்க வைப்பதுதான் நோக்கம். அவரது சகோதரி யார் என முரளி கிருஷ்ணா  வாழும் காலனி மக்களே தேடும்போதுதான் அவரது பின்புல வரலாறு தெரிய வருகிறது. அவருக்கும் சிறையில் கொலைக்குற்ற தண்டனை அனுபவிக்கும் பெத்திராஜூக்கும் பெரும் பகை உள்ளது. அவரது ஆட்கள் முரளி கிருஷ்ணாவைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். இதுதான் கதை. 

பாலகிருஷ்ணா படம் முழுக்க யாரையோ ஒருவரைக் காப்பாற்றிக் கொண்டே இருக்கிறார். காலனி மக்களைப் பாய்ந்து பாய்ந்து காப்பாற்றுவதே போதுமானது. படம் நெடுக அவர் முழு முயற்சியாக மனிதர்களைக் காப்பாற்றுகிறார். ஆனால் படத்தைக் கைவிட்டுவிடுகிறார். இயக்குநரும் படப்பிடிப்பின்போது அப்படியே டீக் குடிக்க போய் பிரியாணி சாப்பிட சென்றுவிடுகிறார்கள் என்றுதான் நினைக்கவேண்டும். பிரகாஷ்ராஜ், ஷாயாஜி ஷிண்டே ஆகிய நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் நடிக்கவேண்டாம் என கடுமையாக ஆணையிட்டுவிட்டார்கள் போல. அவர்களும் நிறைய காட்சிகளில் சமாளித்து நடிக்கிறார்கள். பிரகாஷ் ராஜூக்கு படத்தில் எந்த பங்கும் இல்லை. மதுப்பாட்டிலை வைத்தே சமாளிக்கிறார். கடைசி காட்சியில் தன் குணத்தை கைவிடாமல் முரளி கிருஷ்ணாவை பிடித்து தர பேரம் பேசும் காட்சி நன்றாக இருக்கிறது. வேறு ஒன்றும் சொல்ல இல்லை. 

படம் எதை நோக்கி பயணிக்கிறது என பார்க்கும் நமக்கே புரிவதில்லை. படத்தில் ஒரே ஆறுதல், வேணு மாதவ், பிரம்மானந்தம் வகையறாக்களின் காமெடிதான். பெத்திராஜ் தான் முரளி கிருஷ்ணாவின் குடும்பத்தை நிர்மூலமாக்கி, அவரது சகோதரியையும் காலை உடைத்து முடமாக்குகிறார். இதற்கு முரளி கிருஷ்ணா நிதானமாக 2.30 மணிநேரம் சதா, தனுஸ்ரீ தத்தா ஆகியோருடன் கெட்ட ஆட்டம் போட்டு பிறகுதான் பழிவாங்குகிறார். கிளைமேக்ஸ் பெரிய ட்விஸ்டாகவெல்லாம் இல்லை. எப்படா படம் முடியும் என்ற நிலைக்கு கொண்டு வந்துவிடுகிறார் இயக்குநர். பாலைய்யா தன்னால் முடிந்தளவு படத்தில் உழைத்திருக்கிறார். ஆனாலும் எந்த பிரயோஜனமுமில்லை. 

படத்தில் சதாவுடனான காதல் காட்சிகளை நகைச்சுவை என நினைத்து இயக்குநர் எடுத்திருக்கிறார். ஐய்யோடா சாமி... அதற்கு தனுஸ்ரீ காட்சிகளே பரவாயில்லை. படத்தில் அடிக்கடி பாலைய்யா கண்களை உருட்டி முழிப்பார். நமக்கும் படம் பார்த்தபிறகுதான் அப்படித்தான் இருக்கிறது. 

அழுகையோ அழுகை

கோமாளிமேடை டீம் 












கருத்துகள்