மகளின் காதலனின் மேல் தந்தைக்கு உருவாகும் அதீத வன்மம்! தனா 51

 





















தனா 51
சுமந்த், சலோனி அஸ்வானி, முகேஷ் கண்ணா

இயக்குநர் சூரிய கிரண்

இசை சக்ரி 







தனா போலீஸ் ஆகவேண்டும் என துடிக்கும் இளைஞர். தினத்தந்தி ஸ்டைலில், வாலிபர். அந்த முயற்சியில் இருக்கும்போது கமிஷனர் அந்த ஊரிலுள்ள ரௌடிகளை பிடிக்க தனாவை ரௌடி போலீஸ் ஆக வற்புறுத்துகிறார். தனாவும் அதன் உள்ளர்த்தம் அறியாமல் ஒப்புக்கொள்கிறார். ஆனால் இறுதியில் அவரது வாழ்வை அழிக்கும் சூழ்ச்சி புரிந்துகொள்ளும்போது காலம் கடந்திருக்கிறது. காதலும் அவரது கையை விட்டு போய்விட்டது. இந்த சூழலில் அவர் என்ன செய்கிறார், கமிஷனரை எப்படி பழிவாங்குகிறார் என்பதே கதை. 

படத்தின் சுமந்தின் எனர்ஜிக்கு எதுவுமே ஈடு கொடுத்து நிற்பதில்லை. செய்யும் விஷயங்களை யோசிக்காமல் செய்வது போல தெரிந்தாலும் அதன் பின்னணி ஸ்ட்ராங்காக இருக்கும் என்பதுதான் தனாவின் பலம். இப்படி இருப்பவனை யாருக்குத்தான் பிடிக்காது. கல்லூரியின் முன்னாள் மாணவன் என்றாலும் அங்கு நடக்கும் ராக்கிங், சீர்கேடுகளை தட்டி கேட்டு உதைத்து திருத்துவது தனாவின் வாடிக்கை. 




இப்படி இருக்கையில் அந்த கல்லூரியில் புதிதாக படிக்க வருகிறாள் லட்சுமி. தனா செய்யும் நல்ல விஷயங்களைப் பார்த்து அவளுக்கு அவனைப் பிடிக்க தொடங்குகிறது. அதனை அவள் சொல்ல நினைக்கையில் அதுபற்றி எந்த கவலையுமின்றி தனா இருக்கிறான். ஆனால், மகளைப் பற்றி இன்னொரு ஆன்மா கவலைப்படுகிறது. அவர்தான் மகேஷ் சந்திரா. லட்சுமியின் அப்பா. அவரைப் பொறுத்தவரை மனைவி இறந்தபிறகு மகளை பொறுப்பாக வளர்க்க நினைக்கிறார். மகள் தன்னோடு அனைத்து விஷயங்களையும் பகிர்ந்துகொள்வாள் என நம்புகிறார். ஆனால், அப்பாவுக்கான இடம் வேறு. கணவனுக்கான இடம் வேறு என்பதை அவர் புரிந்துகொள்வதில்லை. இதனால் நண்பர்களான தனாவையும் லட்சுமியையும் காதலர்கள் என புரிந்துகொள்கிறார். தனக்கும் தன் மகளுக்கும் வந்த தனாவை என்ன செய்யலாம் என நயவஞ்சமாக திட்டம் போட்டு தனாவை மகளிடமிருந்து பிரிக்கிறார். 

தனாவைப் பொறுத்தவரை திட்டத்தை மகேஷ் சந்திரா வாயாலே கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்தாலும், எப்போதும் போல அதையும் தான் வெல்வேன், லட்சுமியை இதுவரை தோழியாகத்தான் நினைத்தேன். இனி அப்படியில்லை. அவள்தான் என் மனைவி என சவால் விட்டுவிட்டு ரௌடிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட சிறைக்கூடத்திற்கு செல்கிறான். இந்த இடத்திலிருந்து அவனால் தப்பிக்க முடிந்ததா, அனைத்து ரௌடிகளும் மனம் திருந்தி இயல்பு வாழ்க்கைக்கு சென்றார்களா இல்லையா என்பதே இறுதிக்காட்சி. 

படத்தின் அறிமுக காட்சி நன்றாக இருக்கிறது. படத்தை முழுக்க தூக்கி சுமப்பது, சுமந்த் மட்டுமே. படம் முழுக்க குறையாத உற்சாகம் ஊக்கத்துடன் வருகிறார். தான் செய்யும் விஷயங்களுக்கு உள்ள பின்னணி காரணத்தை முதலில் நண்பர்கள் லட்சுமிக்கு விளக்குகிறார்கள். ஆனாலும் கூட இறுதிக்காட்சியில் கூட தனாவின் குணத்தை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை என்பதே பரிதாபம். மனித உணர்ச்சிகள் அப்படிப்பட்டவைதானே? சூரிய கிரணின் இயக்கம் ஒன்றும் மோசம் கிடையாது. 

திணிக்கப்பட்ட நகைச்சுவை காட்சிகள் பொருந்தவில்லை. காதல் காட்சிகள் இருவருக்குமான நெருக்கத்தை உணர்த்தும் படி உருவாகவில்லை. லட்சுமி, தனாவைப் பார்க்கும்போது தெய்வத்தை பார்த்த பக்தனின் பாவம்தான் தெரிகிறது. முகேஷ் கண்ணா இந்தி நடிகர் என்றாலும் நயவஞ்சகமாக தன் மகளின் பாசத்தை தான் மட்டுமே பெறவேண்டும் என நினைத்து செய்யும் திட்டங்கள் அபாரம். முடிந்த வரை நடிக்க முயன்றிருக்கிறார். ஆனால், கொஞ்சம் வேகமாக நகர்ந்து நடித்திருந்தால் நன்றாக இருக்கும். நேர்மை என நண்பனைக் கூட நம்ப வைத்து மனதில் உள்ள வன்மத்தை தீர்த்துக்கொள்ள அஞ்சாத மனிதர் என பாத்திர வார்ப்பு சிறப்பு. 

சக்ரியின் பாடல்களில் மட்டுமே இருவருக்குமான நெருக்கம் என்பது சாத்தியமாகிறது. 

ஹால்டிக்கெட்டில் ரோல் நம்பர் இல்லை!

கோமாளிமேடை டீம் 






 



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்