விரட்டும் இறந்தகாலத்தால் தவிக்கும் இளம்பெண்! - கெஹ்ரயான் - சாகுன் பத்ரா

 






கெஹ்ரயான்
இந்தி
இயக்கம் சாகுன் பத்ரா
தீபிகா படுகோன், சித்தானந்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே


அலிஷா, டியா ஆகியோர் சிறுவயதில் ஒன்றாக வளர்கிறார்கள். ஆனால் அப்போது அவர்கள் குடும்பத்தில் நடக்கும் விரும்பத்தகாத விஷயம் காரணமாக, அலிஷாவின் குடும்பம் நாசிக்கிற்கு இடம்பெயர்கிறது. ஆனால் அங்கு அலிஷாவின் அம்மா தற்கொலை செய்துகொள்கிறார். இதற்கான காரணம் என்ன என அலிஷா தனது வாழ்க்கையில் நடக்கும் மோசமான சம்பவம் ஒன்றின் பின்னர் அறிவதே கதை. 

அலிஷாவிற்கும் டியாவிற்குமான உறவு என்னவானது என்பதையும் சின்ன திருப்பமாக காட்டி படத்தை நிறைவு செய்திருக்கிறார்கள். 

கடந்தகாலம் ஒருவரை துரத்தி வேட்டையாடினால் அவர் என்னென்ன துயரங்களை சந்திக்க வேண்டியிருக்கும், சற்றும் யோசிக்காமல் அப்போதைய பொழுதைப் பற்றி மட்டுமே யோசித்து சந்தோஷத்தை தேடினால் வாழ்க்கை என்னவாகும் என்பதை சாகுன் பத்ரா கதையாக எழுதி அதை நான்கு பேர்களுக்கு மேல் சேர்ந்து செம்மையாக்கி திரைக்கதை ஆக்கியிருக்கிறார்கள். 

படத்தில் சிறப்பாக நடித்திருப்பவர் என தீபிகாவையும் சித்தானந்த் சதுர்வேதியையும் கூறலாம். பிற்பகுதியில் நஸ்ரூதின் ஷா நம் கவனத்தை கவர்ந்து விடுகிறார். இத்தனைக்கு படம் நெடுக்க இறுக்கமான முகத்துடனே இருப்பார். அதற்கான காரணத்தை அறிந்து தீபிகா அழுதபடி உரையாடும் காட்சி பிரமாதமானது. கெஹ்ரயான் என்பதற்கு ஆழம் என்று அர்த்தம். படம் நெடுக கடல் காட்சிகளை அலை அடித்துக்கொண்டிருப்பதைக் குறியீடாக காட்டுகிறார்கள். 

அலிஷா யோகா சொல்லிக்கொடுக்கும் மையம் ஒன்றை நடத்துகிறாள். அதன் அடுத்தகட்டமாக எட்டு லட்சம் செலவழித்து ஆப் ஒன்றை உருவாக்குகிறாள். ஆனால் அது அவ்வளவு சரியாக வரவில்லை. இந்த நேரத்தில் அவளது காதலன் அதாவது ஒன்றாக வாழும் நேரத்திலும் உதவி செய்வதில்லை.அவன் நாவல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறான். இதனால் வீட்டுச்செலவுகள் முழுக்க அலிஷா தான் செய்யவேண்டியிருக்கிறது. இந்த நேரத்தில் அவள் தனது வாழ்க்கையை தோழி டியாவோடு ஒப்பிட்டுப் பார்க்கிறாள். அவள் வசதியாக இருக்கிறாள். தனது காதலன் ஜெயன் ஓபராயோடு திருமணம் ஆகப்போகிறது. அதற்கான விழாவுக்கு அழைக்கிறாள். அதுதான் படத்தில் நடைபெறும் அனைத்து விஷயங்களுக்குமான மையப்புள்ளி. 

தீபிகாவிற்கும் அவரது காதலருக்குமான சண்டைகளை, ஊடல்களை பயன்படுத்தி ஜெயன் ஓபராய் உள்ளே வருகிறார். அவர் அலிஷாவின் தோழி டியாவின் காதலன். இப்படி சிக்கலான உறவு காரணமாக அலிஷா பாதிக்கப்படுகிறாள். உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும்தான். ஏறத்தாழ இந்த படம் சுஜாதாவின் இப்போதும் பெண் என்ற நாவலை நினைவுபடுத்துகிறது. நாவலில் பஸ்சில் வரும் பெண், பாலியல் சீண்டலால் தூண்டப்பட்டு உடலில் கருப்பை சார்ந்த சிக்கலை சந்திப்பாள். இப்படி கதை தொடங்கும். இறுதியில், இதே சம்பவம் அப்படியே சைக்கிள் சுழற்சியாக அவளது மகளுக்கும் நடப்பது போல கதை செல்லும். 

அலிஷாவிற்கு அம்மா என்றால் உயிர். ஆனால் அவள் அம்மா, அப்பாவின் தொழில் முயற்சி வெற்றி பெறாத காரணத்தால் தற்கொலை செய்துகொண்டதாக நினைத்து அப்பாவின் மீது கோபம் கொண்டிருப்பாள். 

ஆனால் நடந்த உண்மை வேறொன்று. அதை தெரிந்துகொள்ளும்போது அவளது அம்மாவின் நிலையில் அலிஷா இருப்பாள். அவளுக்குத் தெரியாமலேயே பெரிய வலையில் சிக்கிக்கொண்டிருப்பாள். இது அவளது எதிர்காலத்தையே அழிக்குமளவு சிக்கலாக மாறும் என்பதை இயக்குநர் கவனப்படுத்தியிருக்கிறார். 

இறந்தகாலம் விடாது

கோமாளிமேடை டீம் 











கருத்துகள்