உலகின் டாப் சண்டைப்பட நடிகர்களில் நானும் ஒருவன்! - வித்யுத் ஜாம்வால்

 

















வித்யுத் ஜாம்வால்

இந்தி நடிகர் 


நீங்கள் இதுவரை நடித்து வந்த படங்கள் அனைத்துமே சண்டைப்படங்கள்தான். இப்போது உணர்ச்சிகள் சார்ந்த படங்களை தேர்ந்தெடுக்கிறீர்கள். ஏன்?

பதினொரு ஆண்டுகளாக நான் கற்ற விஷயங்களை படத்தில் பயன்படுத்தியுள்ளேன். சண்டை படங்களிலிருந்து இப்போது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் படங்களுக்கு மாறியிருக்கிறேன். இப்போது படத்தை உருவாக்கும் முறைகளை கற்றுக்கொள்ள தொடங்கியிருக்கிறேன். எனக்கு பிடித்த விஷயங்களை படக்குழுவிடம் சொல்லுவேன். இப்போது நடித்துள்ள குதா ஹஃபீஸ் 2 படத்தில் கூட மூன்று சூஃபி பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனக்கு சூஃபி இசை பிடிக்கும் என்பதால் நான் கூறிய ஐடியா தான் இது.

சண்டைப்பட நடிகராகத்தான் நிறைய படங்கள் நடித்துள்ளீர்கள். உங்களை எப்படி நீங்கள் புதுப்பித்துக்கொள்கிறீர்கள்?

நான் மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றவன். பல்லாண்டுகளுக்கு முன்னர் கற்றாலும் கூட அதனை இன்னும் பயிற்சி செய்துகொண்டிருக்கிறேன். எனது படங்களிலும் நான் இதை மேம்படுத்தி பயன்படுத்துகிறேன். ஆனால் எப்போதும் இக்கலையை வைத்து ஒருவரை அடிக்கவேண்டும் என்று நினைத்ததே இல்லை. குதா ஹபீஸ் 2 படத்தின் இயக்குநர் ஃபாரூக் கதையை சொன்னபோது என்னால் ஒருவரை அடிக்கவேண்டும் என்பதை பொருந்திப் பார்க்க முடியவில்லை. ஏனெனில் நிஜத்திலும் நிழலிலும் கூட ஒருவரை தற்காப்பு கலை மூலம் காயப்படுத்த நான் நினைத்ததில்லை. ஆனால் கதைப்படி பாத்திரம் உணர்ச்சிவசப்பட்டு தாக்குதல் நடத்துவதாக இருந்தது. எனவே, என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு நடித்தேன். 

புதிதாக திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறீர்கள். இதில் எது மாதிரியான மையப்பொருளைக் கொண்ட படங்களை தயாரிக்க நினைத்துள்ளீர்கள்?

கடந்த பதினோரு ஆண்டுகளாக நான் நிறைய திறமையான ஆட்களை பார்த்துள்ளேன். அவர்களுக்கு சரியான வாய்ப்பின்றி காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவே படநிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. சங்கல்ப் ரெட்டியின் ஐபி 71 என்ற படம் இப்படித்தான் உருவாகி வருகிறது. இவரைப் பற்றி கூறியவர்கள் ஆணவம் பிடித்தவர் என்று கூறினார்கள். எனக்கு தனிப்பட்ட ரீதியான கருத்தெல்லாம் முக்கியமில்லை. அவர் அமைதியாக தனது வேலையைப் பார்த்து வருகிறார். நம் மனதிற்கு சரி என்றால் ஒருவருடன் வேலை பார்க்கலாம். அதில் எந்த பிரச்னையும் இல்லை. 

சண்டை காட்சிகளை நீங்கள் அடுத்தநிலைக்கு கொண்டு செல்ல நினைக்கிறீர்களா?

இன்று உலகில் உள்ள டாப் சண்டைப்பட நடிகர்களில் நானும் ஒருவன். உலகளவில் இந்திய தற்காப்பு கலைகளை நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் சண்டைக் காட்சிகளை கயிறுகள், மாற்று நடிகர் என வைத்து எடுத்தனர். எனது படங்களில் சண்டைக்காட்சிகளை முடிந்தளவு இயல்புநிலை கெடாமல் எடுக்க  மெனக்கெடுகிறேன். அதற்காக உழைத்து வருகிறேன். திறமையானவர்களைக் கண்டுபிடித்து அவர்களுடன் வேலை செய்யவேண்டும் என்பதே எனது கொள்கை. அவ்வளவுதான். 







 



கருத்துகள்