எத்தியோப்பியாவின் சிறை அவலங்கள்!










நேர்காணல்

"கடந்தகால வன்முறைகள் உலகின் கவனம் பெறுவது முக்கியம்"

ஃபெலிக்ஸ் ஹோர்ன், கிழக்கு ஆப்பிரிக்க செய்தியாளர்.
தமிழில்:.அன்பரசு


எத்தியோப்பாவிலுள்ள ஓகடன் சிறையில் நடைபெறும் திரைமறைவு கொடூரங்களைப் பற்றி யாரும் பேசுவதில்லை. புதிய பிரதமராகியுள்ள அபி அஹ்மது, ஓகடன் சிறையில் சீர்திருத்தங்கள் நடைபெறும் என்று கூறியுள்ளார். இதற்கு முன்னோட்டமாக அரசியல் கைதிகள் சிலநூறு பேர்களை விடுதலை செய்துள்ளார் அஹ்மது.

திடீரென ஏன் ஓகடன் சிறைகுறித்து பேசுகிறீர்கள்?

எத்தியோப்பியாவின் சோமாலி பகுதியில் நடைபெறும் மனித உரிமை மீறல்களைக் குறித்து முன்னரே ஆராய்ச்சி செய்து வந்தோம். இச்சிறை கைதிகள் பலரும் சித்தரவதை செய்து கொல்லப்பட்டுள்ளதால், ONLF எனும் ஆயுதக்குழுவுக்கு இங்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. இக்குழுவுக்கு ஆதரவானவர்களை வாரண்ட் இன்றி கடத்தி வந்து தீவிரமாக தாக்குவதே இச்சிறையில் முக்கியப்பணி.

எத்தியோப்பியாவில ஆய்வு அல்லது மனித உரிமைக்குழுக்களை அனுமதிக்காத நிலையில எப்படி அறிக்கையை உண்மையென நம்புவது?

பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக சந்தித்து பேசி அறிந்த உண்மைகள்தான் இவை. முன்னாள் கைதிகள், சிறை காவலர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் என அனைவரையும் சந்தித்து அறிக்கை தயாரித்தோம். இதில் சிலர் மட்டுமே எத்தியோப்பியாவில் இருந்தனர். பத்திற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்தவர்களையும் தொடர்புகொண்டு பேசினோம்.ONLF குழுவைச் சேர்ந்தவர்கள் என உறுதியானால் நீங்கள் சிறையிலிருந்து வெளிவருவதே கனவுதான்.

சோமாலி பகுதி அதிபரான அப்தி முகமது ஓமரின் அடக்குமுறையை எதிர்த்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. உடனே அவர்களின் சொந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டு சித்தரவதைக்குள்ளாக்கப்பட்டனர். எனவே ஓகடன் சிறை கொடூரங்களைப் பற்றி பேச நினைத்த அனைவரும் ஒடுக்குமுறையால் மௌனமாக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்வை காப்பாற்றிக்கொள்ள பேச மறுத்துவிட்டனர் என்று கூறுகிறீர்கள். அப்போது யார்தான் உங்களிடம் பேசியது?

அரசு அதிகாரிகளிடம் பேசினோம் குறிப்பாக நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் லியு காவல்துறை அதிகாரிகள். 2011 ஆம் ஆண்டு வெளியான வீடியோவில் சிறை அதிகாரிகள் கைதிகளை சித்தரவதைக்குட்படுத்தியதையும் வல்லுறவுக்கு உள்ளாக்கியதையும் ஒப்புக்கொள்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஓரோமோ போராட்டம் தொடங்கி பல ஒடுக்குமுறைகள் எத்தியோப்பியாவில் நிகழ்ந்துள்ளன. புதிய பிரதமரின் நிர்வாகம் எப்படி பிரச்னைகளை கையாளும் என நினைக்கிறீர்கள்?

 ஓகடன் சிறையில் லியூ காவல்துறை செய்த வன்முறை நிகழ்வுகளை உலகம் அறிவதற்கு முந்தைய பத்தாண்டுகளில் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். ஏறத்தாழ ஒரு மில்லியன் மக்கள் வன்முறை நிகழ்வுகளால் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த ஆய்வு அறிக்கை, வன்முறைகளை எத்தியோப்பியா இனியும் சகித்துக்கொள்ளாது என்ற செய்தியை உலகிற்கு கூறுகிறது.

வன்முறை ஆய்வை எந்நேரத்திலாவது கைவிட்டுவிட நினைத்திருக்கிறீர்களா?

எத்தியோப்பியாவிலுள்ள சோமாலி பகுதி உள்ளூர் மற்றும் உலகினருக்கே ரகசியமான பலரும் அறியாத பகுதி. அங்கு பெரும் வன்முறை, வல்லுறவுகள் நடந்தது அருகிலிருந்த மக்களுக்கே தெரியவில்லை என்பது அநீதியல்லவா? பல பெண்களுக்கு ஓகடன் சிறையில் பிரசவமாகி அங்கேயே அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டார்கள் என்ற செய்தியை அறிந்தபோது நடுங்கிப்போனேன் வேலை சவாலாக இருந்தபோதும் கைவிட நினைத்ததில்லை.

நன்றி: Audrey Kawire Wabwire,hrw.org