மௌன ஆளுநர் விடைபெற்றார்!




Image result for urjit patel caricature


ஏறத்தாழ நிதித்துறை வல்லுநர்கள் எதிர்பார்த்த செய்திதான். ஆச்சரியப்பட ஏதுமில்லை. தனது பணிக்காலம் நிறைவடைவதற்குள் ராஜினாமா செய்யும் முதல் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல்தான்(கடந்த 40 ஆண்டுகளில்). ரிசர்வ் வங்கி வரலாற்றில் நான்காவது ராஜினாமா.  பல்வேறு கண்டனங்களை பெற்ற உர்ஜித் படேல் இறுதியாக திடமான முடிவை எடுத்திருக்கிறார். யெஸ் ஓலை கொடுத்துவிட்டார்.

ரிசர்வ் வங்கியிடமிருந்த உபரி தொகையை அரசிடம் வழங்க சொல்லி வரலாற்றிலேயே மிக நீண்ட சந்திப்பை பாஜக அரசு ஏற்பாடு செய்த செய்தியை அனைவரும் செய்தி வழியே அறிந்திருப்பீர்கள். இப்போது புதிய பொருளாதார ஆலோசகர் பதவியேற்கும் அதேதருணம் 24 ஆவது ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் 'தனிப்பட்ட' காரணங்களுக்காக பதவி விலகியிருக்கிறார்.

தனக்கு வளைந்து கொடுக்காத முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனை கடுமையாக வசைபாடி(மேலைநாட்டு அறிவுப்படி செயலாற்றுகிறார்!) வேலையிலிருந்து விலக்கியது பாஜக அரசு. உடனே உள்நாட்டு அறிவோடு செயலாற்றுவார் என நிலையில் 2016 ஆம் ஆண்டு செப்.5 அன்று பதவி ஏற்றார். அரசின் நெருக்கடியைப் பொறுக்க முடியாத நிலையலி உர்ஜித் படேல் பதவி விலகியிருக்கிறார் என்பதே உண்மை. விரைவில் டிச.14 அன்று ரிசர்வ் வங்கி கூட்டம் கூடவிருக்கிறது. அநேகமாக இவர் அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளில் பேராசிரியராக பணியாற்றி ஓராண்டுக்குப் பின் நெருக்கடி பற்றி சிறப்பான நூலை படைப்பார் என நம்பலாம்.

அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட சீர்திருத்தம் என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட பேரழிவுகளை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தார் உர்ஜித் படேல். பிரதமர் மோடிக்கு விசுவாசமானவர் என்றாலும் ரிசர்வ் வங்கி போர்டில் குருமூர்த்தி போன்ற ஆர்எஸ்எஸ் ஆட்களை நியமித்து குடைச்சல் கொடுத்தது அவருக்கு தூக்கத்தை பறிபோகச்செய்திருக்க கூடும். நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி இரண்டும் மக்களுக்காக உழைப்பவை போன்ற தோற்றத்தில் இருந்தாலும் அவை கார்ப்பரேட் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் ஆகியோரின் பிரச்னைகளை பற்றி மட்டுமே கவலைப்படுபவை என்பதை மறக்க கூடாது. விரால் ஆச்சார்யாவின் குரல் இதையொட்டி எழுந்ததுதான். அரசின் ஆளுகைக்கு உட்பட்ட எந்த நிறுவனங்களும் தன்னாட்சி என்பது குறிப்பிட்ட சில முடிவுகளை எடுக்க மட்டும் உதவும். மற்றபடி முழுக்க யோசித்த அத்தனை விஷயங்களையும் அமுல்படுத்திவிட முடியாது. விதி 7 யை பயன்படுத்தாமல் போர்டு உறுப்பினர்களை தனக்கேற்றாற்போல தேர்ந்தெடுத்தே மத்திய அரசு ரிசர்வ் வங்கியை கட்டுப்படுத்த முடியும்.



"தனிப்பட்ட காரணங்களுக்காக ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை விட்டு விலகுகிறேன். பெருமை மிகுந்த பதவியை வகிக்க முடிந்ததற்கு உதவிய, ஆதரவுக்கரம் நீட்டிய ரிசர்வ் வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். போர்டு உறுப்பினர்கள் மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள், ஊழியர்களின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகிறேன்" என பிரிவுச்செய்தியை பதிவு செய்துவிட்டு கிளம்பிவிட்டார் உர்ஜித் படேல்.  இனியேனும் நிம்மதியாக குற்ற உணர்வின்றி உர்ஜித் உறங்கட்டும். விடுங்கள்.

நன்றி: எகனாமிக் டைம்ஸ்