மனிதர்களும் விலங்குகளும் இணையும் புள்ளி! - ஸ்மால்ஃபூட்
மேஜிக் சினிமா
Smallfoot
மிகோவின் உலகில் அனைத்தும் கற்கள்தான். கற்களால்தான் அவர்களின் உலகே இயங்குகிறது என கிராமத்தின் தலைவர் அவர்களை நம்ப வைக்கிறார். ஆனால் பனிகிராமத்தின் சில கி.மீட்டர்களுக்கு கீழே மனிதர்கள் வாழும் நகரம் உள்ளது. ஆனால் அதனை கிராமத்தலைவர் திட்டமிட்டு மறைக்கிறார். உண்மையை மிகோ கண்டுபிடித்தாலும் அதனை ஊராருக்கு சொல்லக்கூடாது என அவனை மிரட்டுகிறார் கல் கிராம தலைவர். அதற்கு காரணம் என்ன? தான் சொல்லிய உண்மைக்கு புறம்பாக மிகோ மாறுவதற்கு பின்னாலுள்ள பிரச்னைகள் என்ன என்பதை ஆடல், பாடல் கொண்டாட்டத்துடன் சொல்லும் படம்தான் ஸ்மால்ஃபூட்.
ஸ்பானிய அனிமேட்டர் - திரைக்கதை எழுத்தாளர் செர்ஜியோ பாப்லோஸ் எழுதிய யெடி ட்ராக்ஸ் என்ற நூலை தழுவி படம் உருவாகியுள்ளது.
சேவல் கூவி சூரியன் உதிக்கிறது என கூறுவார்களே, அதேபோல மிகோவின் தந்தை தலையில் கல்லை கட்டி இரும்பு பலகையில் தலையால் வேகமாக முட்டி சூரியனை எழுப்புவதாக நினைத்து கொண்டிருக்கிறார். ஆனால் ஊர் முழுக்கவே அப்படி நம்ப வைத்திருப்பது அவர்களின் தலைவர்தான். ஆனால் அவரின் மகள், அதிலிருந்து வேறுபட்டு தன்னையொத்த இளைஞர்களை திரட்டி அறிவியல் மையம் அமைத்து கிராமத்தின் பிரச்னைகளை தாண்டி யோசித்துக்கொண்டிருக்கிறாள். அப்போது விமான விபத்தை பார்க்க அவனுக்கு பிரச்னைகள் தொடங்குகின்றன.
மனிதர்களும், விலங்குகளும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழவேண்டும் என்ற செய்தியின் நோக்கம் மதிப்புமிக்கது. பாடல்கள், அனிமேஷன் என அனைத்தும் உங்களை பெரும் கொண்டாட்டத்திற்கு தயார் படுத்துகின்றன. அதிலும் மிகோவை புரிந்து கொண்டு டிவி காம்பியர் மிகோவின் உடல்போல பொம்மையை அணிந்துகொண்டு போலீசில் தானாக மாட்டிக்கொண்டு மிகோவை காப்பாற்றும் காட்சி கிளாசிக்.
இறுதியில் கிராமத்தலைவரின் மனதிலிருந்த பயத்தை போக்கி கிராமத்தினர் மனிதர்களோடு இணைவது நெகிழ்ச்சியான கிளைமேக்ஸ். படம் முழுக்க பனி, சூரியன் என இயற்கையோடு நாம் இருப்பதுபோல கதை அமைவது அருமை. வெகுளித்தனமாக மனிதர்களை பார்த்து பின்னர் போலீஸ் அவர்களை துரத்த மிகோ நண்பர்கள் கூட்டம் பயந்து ஓடுவது அமெரிக்கர்கள் - செவ்விந்தியர்கள் உள்ளிட்ட விஷயங்களை நினைவுபடுத்துகிறது. மொத்தத்தில் சொல்ல வந்த விஷயத்தை பொழுதுபோக்கு விஷயங்களோடு கூறியிருக்கிறார்கள்.
- கோமாளிமேடை டீம்