அறையில் சுயாதீனச்சமையல் செய்தபோது - மயிலாப்பூர் டைம்ஸ்!




Image result for bachelor illustration




மயிலாப்பூர் டைம்ஸ்!

சுயாதீன சமையல்


மயிலாப்பூரில் நீங்கள் கரண்டி பிடிக்காமலிருக்க நிறைய இதயங்கள் உதவும். ஜன்னல் கடை, பாரதி மெஸ், தேரடி பஜ்ஜிக்கடை, காளத்தி ரோஸ்மில்க், செந்தில்நாதன் மெஸ் என நிறைய உணவுக்கடைகளும், தின்பண்டக் கடைகளும் நிறைந்துள்ளன. எல்லாம் எதற்கு வாங்கித் தின்று இந்தியாவை வளர்த்தத்தான்.

டீ என்ற வார்த்தையை இங்கு கேட்க முடியாது. எங்கெங்கு காணினும் காபிதான். மகாத்மா காந்தி சிலையை ஒட்டி இப்போது கோத்தாஸ் காபிக்கடை வேறு தொடங்கியிருக்கிறார்கள். அம்பிகா சிறப்பங்காடியை ஒட்டி இயங்குவது லியோ காபி, முதலில் மோசமாக இருந்த காபி நேற்று குடித்தபோது இனித்தது. உபயம் யார் நமது தினகரன் குழும முன்னாள் தாயாதிகள்தான்.

வந்த நண்பர்களுக்கு  மயிலாப்பூரை கிரிவலம் கூட்டிச்சென்றேன். ஒருகட்டத்தில் நண்பர்,  தம்பி எங்களை எங்கே கூட்டிட்டிப்போற என்றார். ரைட் அதுதான் நான் விடைபெற்றுக்கொள்ளும் இடம் கூட. கபாலி காலில் விழுந்தா வாழ்க்கை நல்லா இருக்கும்ணே என்று சொல்லி கைகுலுக்கு ஜப்பானிய முறையில் இடுப்பு வளைத்து வணங்கி விடைப்பெற்றேன்.

ஜப்பானிய முறை வணக்கம் சிறப்பானதுதான். ஆனால் என்னவோ இம்முறையில் வணக்கம் செய்யும்போதெல்லாம் லிப்ஸ்டிக் போட்ட ஆன்டிகள் மீது மோதி விடுகிறேன். என் புட்டத்தால் இடிபட்ட மாமி பார்த்த எரிப்பு பார்வையில் ஜப்பான் எரிமலை கூட சும்மா..... பொதுவாழ்க்கையில் இதுபோன்ற விபத்துகள் சகஜம்தானே... இத்தனை விஷயங்களையும் சுலபமாக ஏற்க உதவுவது சுயாதீன சமையல்தான். முழுக்க பரிசோதனைகள்தான்.

சுயமாக சமையல் செய்து பல்லாண்டுகள் ஆகின்றன. மயிலாப்பூரில் சகோதரரின் காதலிகளோடு ஜாலியாக பேசியபடி பருப்புக் குழம்பை தார் போலாக்கிய கதையை இன்றும் என்னுடைய எதிரிகள் ஊரில் சொல்லி சிரித்து வருகிறார்கள். என்ன காரணம் என்றால் என்னுடைய வெகுளித்தனம்தான். இரண்டு நிமிடத்தில் ஒருவரை நம்பி, கைத்தொழில் கதைகள் முதல் மனக்காயம்பட்ட கண்றாவி புராணங்களைச் சொல்லிவிடுவேன்.


அக்காதலிகளில் நிச்சயம் நான் செய்த துவரைப்பருப்பு குழம்புக் களியை, நினைவுகூர்ந்து  நிச்சயம் தன் குழந்தைக்குச்சொல்லி சோறூட்டுவார்கள். ஜோக்கர் படத்தில் பீனிக்ஸின் ஸ்டாண்ட் அப் காமெடி கனவு நிறைவேறவில்லை. எனக்கு லைவ்வாக நிறைவேறி விட்டது. அந்த சமயத்தில் ரூமில் கவி என்ற நண்பர் இருந்தார். பன்னாட்டு வங்கிப் பணியில் ஜாகை. அடுத்தவரை மட்டம் தட்டுவது அவருக்கு இலந்தை வடை சாப்பிடுவது போல. வெள்ளிக்கிழமை அரக்க பறக்க வந்து வீக் எண்ட் குழம்பு வைப்பார். சட்டி முழுக்க தழும்ப வைத்தால் வெள்ளி இரவு, சனி, ஞாயிறு என அப்படியே தோசைகளில் ஆறாகப் பாயும்.

அன்று அவர் சுடும் தோசைகளுக்கு கட்டாயமான ஒரே குழம்பு அதுதான். அவர்தான் எனக்கு குழம்பு பக்குவத்தை சொல்லித் தந்தார். ஆனால் இதில் முக்கியமானது. சமையலைச் செய்யும் மனிதர்களின் மனப்பக்குவம். சமையலில் நொடி நேரம் தப்பினால் சோறு கரிந்துவிடும். அதையும் தனிச்சுவை என்று வடபழனி துணை இயக்குநர் என்னிடம் சட்டியைப் பிடிங்கித் தின்ற போதுதான் தெரிந்தது. ஆத்தாடி கோவில்பட்டி சாத்தூர்னா இப்படித்தான் இருப்பாய்ங்களோ......

சரி விடுங்க சோறு முக்கியம்ல. அதற்காகத்தானே பெரும்பாடு பட்டு நான் சென்னை வந்தேன். கவி செய்யும் வேலைக்கு எப்போதும் போல எடுபிடி வேலைகளை நான் செய்து வந்தேன். வெங்காயம் அரிவதிலும் சைஸ் உள்ளிட்ட துல்லியங்களை கவி வகுத்திருந்தார். அதனை நான் மீறும்போது காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை நீக்கியவுடன் இம்ரான் கான் கதறினாரே அதைப்போல அலறினார்.

உஸ்தாத் ஹோட்டல் போல சாப்பாடு எதற்கு செய்யப்படுகிறது என்பதை உணருவது முக்கியம். இதனால்தான் சிலர் செய்யும் சோறு மணக்கிறது. ஆனால் அதனைச் செய்பவர்கள் அழுக்காக தெரிவார்கள். உண்மை புரியாமல் நாம் விலகிப்போவோம். அதனை உணர்வதற்கான வாய்ப்புதான். நாமாக செய்து நாமாகவே சாப்பிடுவது. பசியில் சாப்பிடும் சோற்றின் ருசி தெரியும் என்பதால், நான் பிறருக்கு சமைப்பது என்ற ஹோதாவில் இறங்கவே இல்லை. நமக்கு நாமே என்று  சமைப்பது எனக்கே பிரமிப்பாக உள்ளது.

அண்மையில் வாங்கிய எலக்ட்ரிக் அடுப்பை பெண் தோழியைப் போல கையாள வேண்டும் என்று ஹாஸ்டல் நண்பர் பரிந்துரைத்தார். நான் மேனுவலைப் படித்ததால் வந்த வயிற்று எரிச்சல் அது. அவருக்கு பெண்தோழி இருக்கிறார் என்று விளம்பரம் வேறு. பிளஸ் மைனஸ் , இட்லி, தோசை, சப்பாத்தி என ஆப்ஷன்கள் ஏராளமாக இருந்தன. அதில் சொன்ன எதையும் நான் செய்யப்போவதில்லை என்றதும் பகீரென்றது. ஆகா.... அவசரப்பட்டு வாங்கீட்டமோ என்று உள்ளுக்குள் பதற்றம். 

எப்படியோ ஒருமுறை சோறு பொங்கி அதைக் கருக்கி கைப்பிடி சோற்றை தூக்கி குப்பையில் போட்டபின் பயம் போய்விட்டது. அதாவது, அடுத்தமுறை கவனமாக ஒரு டம்ளர் அரிசிக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும் என்று மனதில் பதிந்துகொண்டேன். ஆனால் அரிசிக்கு அரிசி நீர் அளவு மாறும் என இரண்டாம் முறை சோறு குழைந்தபோது தெரிந்துகொண்டேன். இதில் உருளைக்கிழங்கை வேக வைக்கும்போதும்  வேகவைத்தல் விதியை நினைவுக்கு கொண்டு வந்தேன். விதி, பாதியில் வேலை செய்யவில்லை.

எப்படியோ மற்றவர்களுக்கு சோறு பொங்கும் போது இந்த கேனத்தனங்கள் நடக்கவில்லை. காபிக்கு மெட்ராஸ் கஃபேயும், சோறுக்கு பாரதி மெஸ்ஸும் இருக்கும்போது விதி என்னை என்ன செய்யும்? இறையருள் காக்க என்று சொல்லிக்கொண்டே வெண்டைக்காயை  கடையில் வாங்கினேன். அடுத்த ட்ரையல் அண்ட் எரர் மேட்டர் வேண்டுமே. வாங்கி நீர் ஊற்றி வணக்கவா என்று தாயிடம் கேட்க, குமட்டிலே குத்தீருவேன் என பதில் வந்தது. வார்த்தைகளில் வயலன்ஸ் என்றாலும் காரியத்தில் தாய் கெட்டிக்காரர் என்பதால் மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ் சொல்லி, சொல்லு தாயி என்றேன்.

அவர் கூறியபடி செய்தால், ஆந்திரா மெஸ்ஸில் வெண்டைக்காயை குடல் போல அப்பளம் போல வறுத்திருப்பார்கள் அல்லவா அந்தப் பதத்தில் வந்து சேர்ந்தது. முன்னாடியே எடுத்தால் பச்சை வாசம் அடிக்குமோ என்று பயந்ததால் ஏற்பட்ட விளைவு. இறுதியில் அதனை அப்படியே எடுத்து தின்றால் அசல் அப்பளம் போல இருக்கிறது. அடப்பாவி, அதானி வில்மர்  கெடுத்துட்டானே என எண்ணெய்யைப் பார்த்தால்... அத்தனைக்கும் காரணம் நான்தான். வறுவறுவென எதையோ நினைத்துக்கொண்டு...வறுத்ததில் வெண்டைக்காய் பொரியல், திசைமாறி அப்பளமாகி விட்டிருக்கிறது. டேஷில் வேறு எதையும் நிரப்பாதீர்கள். எழுத்து வேலைகளை நினைத்துக்கொண்டு இருந்தேன்.

சோதனைகள் எனக்கு வேதனையாக முடிந்தாலும் முடிந்தளவு அடுத்தவர்களுக்கு பிரச்னையாகவில்லை என்றளவில் ஓகேதான். சுயாதீன சமையலில் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன. முக்கியமாக கேஸ் அடுப்பிலும், எலக்ட்ரிக் அடுப்பிலும் சமைப்பது, பதம் பற்றி கவனம் தேவை. இரண்டு  ஒரே மாதிரியான வெப்பத்தை பாத்திரங்களுக்கு அளிப்பதில்லை. இன்னொன்று எலக்ட்ரிக் அடுப்பு அத்தனை சமையல்களுக்கும் ஏற்றதில்லை. எது பொருந்துமோ அதனை மட்டும் எடுத்து பாத்திரங்களை வாங்கி சமைக்க வேண்டும். ஆப்ஷன் இருக்கிறது என எகிறி அடித்தால், டெஸ்ட் மேட்ச் போல விக்கெட் போய்விடும். அதாவது, எலக்ட்ரிக் அடுப்புக்கு மோட்சம் கிடைத்துவிடும்.

நன்றி: குபேந்திரன் பண்ணைப்பசுமைக்கடை, விநாயகர் காய்கனிக்கடை, ஐஸ்வர்யா சீனா பஜார், ஃபோரம் விஜயா மால், லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்.










பிரபலமான இடுகைகள்