மாதவிடாய் கழிவுகளை என்ன செய்வது?
மாதவிடாய் கழிவுகள் ஏற்படுத்தும் ஆபத்து!
இந்தியாவில் மாதவிடாய் நாப்கின் கழிவுகள் 12.3 பில்லியன் டன்கள் அளவுக்கு தேங்கியுள்ளதாக மாதவிடாய் சுகாதார அமைப்பு (Menstrual Hygiene Alliance of India (MHAI)) தகவல் தெரிவித்துள்ளது.
தற்போதுதான், மாதவிடாய்க்கு நாப்கின் பயன்படுத்தும் விழிப்புணர்வு இந்தியாவில் பரவி வருகிறது. நாப்கின் பயன்படுத்துவதன் மூலம் பெண்களின் ஆரோக்கியம் மேம்படுவது சிறப்பானது. பயன்படுத்திய நாப்கின் கழிவுகளை என்ன செய்வது என்பதில் குழப்பம் நிலவி வருகிறது. வீட்டுக் கழிவுகள் போல தூக்கி எறியப்படும் நாப்கின்கள், தொற்றுநோய்களை மக்களுக்கு ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
நாப்கின்கள் ஆபத்து!
ஜெர்மனியைச் சேர்ந்த வாஷ் யுனைடட்(Wash United) நிறுவனத்தின் துணை அமைப்பான மாதவிடாய் சுகாதார அமைப்பு தகவல்படி, தற்போது இந்தியாவில் மாதவிடாயை எதிர்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை 33.6 கோடி. இதில் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் நாப்கின்களைப் பயன்படுத்தும் பெண்களின் அளவு 36 சதவீதம்(12.1 கோடி).
பெண்களால் ஓராண்டில் பயன்படுத்தப்படும் தோராய நாப்கின்களின் எண்ணிக்கை, ஓராண்டுக்கு 12.3 பில்லியன்கள்(1 பில்லியன் - 100 கோடி). பிரச்னை இதனை பெண்கள் பயன்படுத்துவதல்ல; இயற்கையாக மட்கும் தன்மை இல்லாதவை இந்த நாப்கின்கள். இவற்றை எப்படி மறுசுழற்சிக்கு உட்படுத்துவது என்பதுதான் அரசுக்கும் தலைவலியாக மாறியுள்ளது.
மாநிலங்களின் செயற்பாடு
இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்கள் இந்த பிரச்னையில் தடுமாறி வருகின்றன. புனே மற்றும் பெங்களூரு நகரங்கள் மட்டும் மாதவிடாய் நாப்கின்களை சிறப்பாக அணுகி மறுசுழற்சிக்கு உட்படுத்தி உள்ளன. 2016 ஆம் ஆண்டு திடக்கழிவை மேலாண்மை செய்வது தொடர்பாக இந்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. ”மாதவிடாய் நாப்கின்கள் உள்ளூர் மக்களுக்கு ஏற்ப தயாரிக்கப்பட வேண்டும். பெண்களுக்கு சுகாதாரத்தை உறுதி செய்யும் அதேசமயம் அவை சூழலை மாசுபடுத்தாது இருப்பதும் அவசியம்” என்கிறார் கூன்ச் (Goonj) தன்னார்வ அமைப்பின் இயக்குநரான அன்சு குப்தா.
நாப்கின்கள் மட்காததற்கு காரணம், நிறுவனங்கள் இதில் பகுதிப்பொருளாகச் சேர்த்துள்ள பிளாஸ்டிக்தான். இந்த பிளாஸ்டிக் கலப்பு, இயற்கைச் சூழலையும் கெடுப்பதோடு, பெண்களின் உடல்நலனையும் பாதிக்கிறது. பிறகழிவுகளையும் மாதவிடாய் கழிவுகளையும் எப்படி பிரிப்பது என நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள் தடுமாறி வருகின்றன. நாப்கின்களை மருத்துவம் அல்லது பிளாஸ்டிக் கழிவு என இரண்டில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்து குறிப்பிடும் தேவை அரசுக்கு உள்ளது.
தற்போது அமலிலுள்ள திடக்கழிவு மேலாண்மைச் சட்டப்படி(2016), மாதவிடாய் கழிவுகள், டயாப்பர்கள், ஆணுறைகள், மாதவிடாய் ரத்தத்தை துடைக்கும் பஞ்சுகள் ஆகியவற்றை வீட்டுக் கழிவுகளாகவே கருதுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, இதுதொடர்பான விதிமுறைகளை வகுத்து பிற துறைகளின் ஒருங்கிணைப்பைப் பெற்றால் மாற்றங்கள் சாத்தியமாகலாம்.
தகவல்:Downtoearth
வெளியீட்டு அனுசரணை: தினமலர் - பட்டம்