உலகிலேயே ஆபத்தான மன அழுத்தம் தரும் வேலைகள் இவைதான்



மன அழுத்தம் தரும் வேலைகள்


அனைத்து வேலைகளும் இன்று மன அழுத்தம் உருவாக்குவதை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. மாடர்ன் டைம்ஸில் சார்லி சாப்ளின் தொழில் வளர்ச்சியை பகடி செய்திருப்பார். அதுபோலவே இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. பணியாளர்கள் வேலை பற்றிய உறுதியின்மையை சட்டங்கள் மூலம் ஏற்படுத்தி வருகிறது. அதோடு இரவிலும் பணியாற்றலாம் என்று தொழிலதிபர்களுக்கு பேராசை ஏற்படுத்துகிறது. பென்சன் போன்ற வசதிகளையும், அரசின் பொறுப்பையும் மறுத்து வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்ல, சாதாரண தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் பதற்றம் கூடி இதயத்தின் லப்டப் அடுத்த சீட் நண்பருக்கும் கேட்குமளவு பிரச்னை ஆகிறது.


கேரியர்காஸ்ட் வலைத்தளம் மன அழுத்தம் தரும் வேலைகளை பட்டியலிட்டுள்ளது. அவற்றில் சில வேலைகளைப் பார்ப்போம்.

விமான பைலட்

உயரமான இடத்தில் வேலை என்றாலும், இயந்திரத்தில் ஒரு நட், போல்டு கழன்றாலும் சாம்பல் கூட கிடைக்காது. ஆனாலும் சம்பளம் ரிஸ்குக்கு ஏற்றபடி ஜாஸ்தியாக தருகிறார்கள். ஒரு லட்சம் டாலர்கள் சம்பளம் தருகிறார்கள்.

ஹேர் ஸ்டைலிஸ்ட்

ஊர்நாட்டில் அம்பட்டன், பண்டிதர் என்பார்கள். விதம் விதமான படங்களைப் பார்த்து அப்டேட்டுடன் இருந்தாகவேண்டும். அப்போதுதான் புள்ளிங்கோ கட்டிங் எல்லாம் வெட்ட முடியும். திரைப்படம், கால்பந்து என நாற்புறமும் கண்களை நீட்டி காதுகளை உஷாராக வைத்திருந்தால்தான் சலூன் கடை நிரம்பும். இல்லையெனில் பாழுங்காட்டில் பஞ்சாபி தாபா கடை திறந்து உட்கார்ந்திருப்பது போல்தான் உட்காரவேண்டும். ஞாயிற்றுக்கிழமை ஒவ்வொரு முடியிலும் கரெக்ஷன் சொல்லும் ஆட்களையும் பார்த்து வந்தவர்கள் மன அழுத்தம் இல்லாமல் இருப்பது அரிது.


ராணுவ பணி

கீழ்ப்படிவது மட்டுமே இதில் முக்கியம். அதை வைத்துத்தான் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இல்லையெனில் பரம் வீர் சக்ரா வுக்கு பரிந்துரைக்கப்படும். சாப்பாட்டில் பருப்பு இல்லை, சப்பாத்தியில் கோதுமை இல்லை என்று புகார் கொடுப்பவர்களுக்கு இன்றும் தண்டனை வழங்குகிறார்கள்.  எப்போதும் பயிற்சி, பனி, தனிமை என வாழும் வீர ர்கள் மனநிலை குலையும் வாய்ப்பு அதிகம். சிந்திக்க கூடாது என்று வலியுறுத்தப்படும் பணியில் இதெல்லாம் நடக்க வாய்ப்புள்ளதுதானே?


கார் ஓட்டுநர்

ஏன் ஹெல்மெட் போடாமல் ஓட்டறே என்று காசு பிடுங்கும் ட்ராபிக் போலீஸ், மாற்றுப்பாதையில் போகச்செல்லும் வழிகாட்டிப் பலகைகள், ஒருவழிப்பாதை குளறுபடிகள் என தினந்தினம் அப்டேட்டாக இருக்கவேண்டும். வேலை இருக்கிறதோ இல்லையோ தெருவில் குழிதோண்டும் பிஎஸ்என்எல் ஆட்கள், வசையாடும் மோட்டார்வாசிகள், முந்தும் இன்னோவா ஆன்டிகள் என பலவற்றையும் சந்தித்து ஓலா, ஊபரில் கமிஷன் வாங்கி வீடு சேரும்போது முடிகொட்டத் தொடங்கும், இதயத்துடிப்பு ஏறி இறங்கும். மன அழுத்தம் பிறக்காதா பின்னே?

தீயணைப்புத் துறை

இவர் டென்ஷன் ஆகாவிட்டால் மக்களுக்கு ஐசியூ நிச்சயம். பெரும்பாலும் தீக்காயம் பட்டவர்கள் பிழைப்பது கடினம் என்பதால், தோல் தீயும் முன்பு காப்பாற்றுவது அவசியம். விருந்தினர் போல வாசல் வழி செல்ல முடியாது. வீர ர்கள் இந்த முயற்சியில் உயிர்பிழைப்பதும் சவாலான ஒன்றுதான்.


நன்றி - டைம்