குப்பை பொறுக்கினால் வடகிழக்கு மாநிலம் ஒளிரும்! - தி பட்டி புரொஜெக்ட்
வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒளிதரும்
பெங்களூரு இளைஞர்கள்! - ச.அன்பரசு
சாதாரணமாக வீட்டில் கிடக்கும் பிளாஸ்டிக் பைகளை
காலாவதியான எலக்ட்ரிக் பொருட்களை என்ன செய்வோம்? பிளாஸ்டிக்
பொருட்களை எடைக்கு போடுவோம். ஸ்வட்ச் பாரத், சுகாதாரம் ஆகிய வார்த்தைகளை ஜபித்தபடி குப்பையை குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு
இந்திய குடிமகனாக கடமையை ஈடேற்றுவோம். ஆனால் பெங்களூருவைச் சேர்ந்த
ராஜிவ் ரத்தோட்டுக்கு குப்பை மிக முக்கியமான பொருள். காலையில்
எழுந்ததும் அவரின் முதலும் முக்கியமுமான வேலை, குப்பை பொறுக்குவதுதான்.
புத்தியெல்லாம் பிசகவில்லை. நன்கு படித்த இளைஞர்தான். ராஜிவ் குப்பை பொறுக்க காரணம்,
வடகிழக்கு மாநிலங்களிலுள்ள ஏழை பழங்குடிகள்தான். கார் மூலம் பெங்களூருவின் தெருக்களை சல்லடையாக சலித்து குப்பையில் எலக்ட்ரிக்
பொருட்களை பொறுக்கி மூட்டை கட்டி வீட்டுக்கு எடுத்துவரும் ராஜிவ் அதனை வடகிழக்கு மாநில
மக்கள் மின்சாரம் பெற பயன்படுத்துகிறார். The Batti Project என்ற
பெயரில் திட்டத்தை தன் நண்பர் மெர்வின் கவுன்டினோவுடன் இணைந்து தொடங்கி 4 டன் இ-கழிவுகளை விற்று கிடைத்த பணத்தில் 248 ஏழை பழங்குடி குடும்பங்களுக்கு மின்வசதிகளை செய்து கொடுத்துள்ளனர்.
இ-கழிவுகளை பல்வேறு
தன்னார்வலர்களிடமிருந்து பெற்று அங்கீகாரம் பெற்ற மறுசுழற்சி நிறுவனங்களிடம் விற்று
தொகையை திரட்டுவது தி பட்டி திட்டத்தில் முதல் பணி. பின்னர் வடகிழக்கு
மாநில கிராமங்களில் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து சோலார்
பல்புகள் அடங்கிய பட்டி கிட்டை விலையின்றி வழங்குகின்றனர். "2011 ஆம் ஆண்டு தொடங்கிய தி பட்டி ப்ராஜெக்ட்டில், மின்வசதியை
பெற்றுத்தருவது எங்களது பிளானில் இல்லை. 2010 ஆம் ஆண்டு அருணாச்சலப்
பிரதேசத்துக்கு சென்றபோது, அங்குள்ள நிலைமையைப் பார்த்து மின்வசதி
ஐடியா கிடைத்தது. ஏழு நாட்கள் நடந்துசென்றால்தான் சாலையைக் கண்ணில்
பார்க்கமுடியும் நிலையிலிருந்த கிராமத்தைக் கண்டு நொந்துபோனேன்" என்கிறார் ராஜிவ் ரத்தோட். பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி
செய்வதோடு அவற்றை கலைப்பொருட்களாக்கியும் விற்று பணம் திரட்டுகிறது இவரின் தி பட்டி
புரொஜெக்ட் குழு.
சில ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர் மெர்வினுடன் காந்திகிராம்
எனும் தொலைதூர கிராமத்திற்கு சென்று வந்த அனுபவம், கிராம
மனிதர்களுக்கு ஏதேனும் பயனுள்ள வழியில் செய்யத் தூண்டியிருக்கிறது. "2011
ஆம் ஆண்டு நானும் நண்பர் மெர்வினும் திரும்ப காந்திகிராம் கிராமத்துக்கு
செல்ல விரும்பினோம். ஆனால் முன்பு சென்றது போல வெறுங்கையுடன்
அல்ல; நூறு சோலார் பல்புகளை வாங்கிச்சென்று மக்களுக்கு விலையின்றி
விநியோகித்தோம்" என கண்கள் ஒளிர பேசுகிறார் ராஜிவ் ரத்தோட்.
தி பட்டி திட்டத்திற்காக ராஜிவ் பணமாக பெறுவதை விட இ-கழிவாக பெறுவது முக்கிய உத்தியாக வெற்றியடைந்திருக்கிறது. "தங்களிடம் குறிப்பிட்ட அளவு சேர்ந்துள்ள இ-கழிவுகளை பெற்றுக்கொள்ள
அழைப்புகள் இடைவிடாமல் வந்தபடி இருக்கின்றன. மக்கள் தங்களிடமுள்ள
ஏதேனும் ஒன்றை எங்களுக்கு வழங்க நினைக்கையில் குப்பை எனும்போது மறுக்காமல் வழங்கிவிடுகிறார்கள்"
என்னும் ராஜிவ் ரத்தோடின் லட்சியம் அருணாசலப்பிரதேசத்தின் கிழக்கு காமெங்
மாவட்டத்திலுள்ள ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு மின்வசதியை முழுமையாக
ஏற்படுத்தி தருவதேயாகும்.
(இடது)ராஜிவ் தன் நண்பருடன். |
ஒளிவிளக்கு!
கிழக்கு காமெங் மாவட்டத்திலுள்ள நியிஷி, ஆகாஷ், மைஜிஸ், புரோய்க்ஸ் ஆகிய
பழங்குடிகளுக்கு மின்வசதிகளைப் அமைத்து தரவே ராஜிவ் ரத்தோட் முயற்சித்து வருகிறார்.
இவர்கள் குடும்பங்களுக்கு வழங்கும் விலையின்றி வழங்கும் மின்விளக்கு
பெட்டியில் என்ன இருக்கிறது? சோலார் பேனல்(20வாட்), பேட்டரி(20 ஆம்ப்),
3 எல்இடி பல்புகள் மற்றும் ஹோல்டர்கள், ஸ்விட்சுகள்,
5 மீ, 7மீ, 9 மீ நீள கேபிள்கள்,
சார்ஜ் கன்ட்ரோலர்.
மேலும் தகவல்களுக்கு http://batti.in/