எவரெஸ்டில் சாதனை சமையல்!



Image result for vineet bhatia



எவரெஸ்டில் சாதனை சமையல்!-.அன்பரசு


Image result for vineet bhatia




தங்கம், வெள்ளி என எதுகொடுத்தாலும் போதாது போதாது என்பவர்கள் இதற்கு மேல் முடியாது என சொல்லி சரண்டர் ஆவது உணவில் மட்டும்தான். அப்படி பல்லாயிரக்கணக்கான வயிறுகளை திருப்தியுடன் குளிர்வித்து தன் சமையல் சாதனைகளையும் நீட்டித்துக்கொண்டே செல்கிறார் லண்டனின் புகழ்பெற்ற சமையல்கலைஞரான வினீத் பாட்டியா.

லண்டனின் செல்வாக்கான மனிதர்களின் லிஸ்டில் தவிர்க்க முடியாத சமையல் ஆளுமை. 30 ஆண்டு கிச்சன் அனுபவத்தில் பிரபலங்களின் நாக்குகளை தன் கைமணத்திற்கு அடிமையாக்கியவர். மிட்செலின் ஸ்டார் அந்தஸ்து பெற்ற ஒன்பது ஹோட்டல்களை நடத்தும் சமையல்கலைஞர் வினீத் பாட்டியா செய்யும் சமையல் எக்ஸ்பரிமெண்டுகளுக்கு வானமே எல்லை. தற்போது இவர் தொட்டுள்ளது எவரெஸ்ட் சிகரத்தை. எவரெஸ்டில் சமையல் செய்வதுதான் வினீத்தின் அடுத்த சவாலே சமாளி டாஸ்க்.


Image result for vineet bhatia



மும்பையில் நடுத்தரக்குடும்பத்தில் பிறந்த வினீத்திற்கு விமானப்படையில் சேர்வதுதான் கனவு. எழுத்து தேர்வில் ஜெயித்தவருக்கு உடற்தகுதி மைனஸாக, விரக்தி அடைந்தவரின் வாழ்க்கையை அவர் பிடித்த சமையல்கரண்டி கரையேற்றியது. 1985-1988 காலகட்டத்தில் சமையல் மற்றும் வணிகம் படித்துவிட்டு வந்தவரை ஓபராய் ஹோட்டல் ஜூனியர் பயிற்சியாளராக ஏற்று பட்டை தீட்ட,1993 ஆம் ஆண்டு லண்டனிலுள்ள கென்சிங்டனிலுள்ள ஸ்டார் ஆஃப் இந்தியா ஹோட்டலில் பணியாற்றத் தொடங்கினார். அங்குள்ள சமையல் சூழலை மாற்றி, பின் மெனுவை மாற்றியவர் அதன்பிறகு திரும்பி பார்க்கக்கூட நேரமில்லாமல் விறுவிறுவென முன்னேறத் தொடங்கினார்.  
2009 ஆம் ஆண்டு லண்டனில் 1000 செல்வாக்கு மனிதர்கள் பட்டியலில் முதன்முதலாக இடம்பிடித்தார் வினீத் பாட்டியா. தன் இரண்டு ரசோய் ஹோட்டல்களுக்கும் மிட்செலின் ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றுள்ளதோடு சிறப்பான ரெசிபி, உபசரிப்பு மூலம் அதனை தக்கவைத்திருக்கிறார். "நல்ல நோக்கத்திற்கான இப்பயணத்தில் எவரெஸ்ட் கீழே உணவு சமைத்து பரிமாறவிருக்கிறோம். மிட்செலின் ரேட்டிங் கொடுத்த தரத்தை நான் தயாரிக்கவிருக்கும் உணவில் மனப்பூர்வமாக உணர்வீர்கள்" என நம்பிக்கை பெருக பேசுகிறார் வினீத்.

Image result for vineet bhatia with heart for india foundation




இந்திய உணவுகளை விதவிதமாய் தயாரிக்கவேண்டும் என்று ஆசைப்பட்ட வினீத்திற்கு நிராகரிப்பைக் கடந்து சுதந்திரச்சிறகு கொடுத்த நகரம் லண்டன். 2001 ஆம் ஆண்டு தனது ஸைகா உணவகத்திற்கும், பின்னர் ரசோய் ஹோட்டலுக்கும் அக்கௌரவம் கிடைக்குமாறு தீவிரமாக உழைத்தார். லண்டனிலுள்ள ரசோய் உணவகத்தின் பட்டர் சிக்கன், கிரேவிக்கு ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் அடிமை என்றால் வினீத்தின் கைமணத்தை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

வினீத் அவருடைய மகன் வருல் ஆகியோரோடு சமையல் குழு 3,365 மீட்டர் தொலைவு பயணப்பட்டு லுக்வாவிலிருந்து நேபாளத்திலுள்ள எவரெஸ்ட் கேம்பிற்கு செல்லவிருக்கிறது. சுவாசிக்க ஆக்சிஜன் கிடைக்கவே தடுமாறும் இடத்தில் அங்குள்ள பொருட்களை வைத்து வினீத் கிரியேட்டிவிட்டியாக சமைக்கப் போகிறார் என்பது கின்னஸ் சாதனையில் உள்ள மறைமுக சவால்.


வினித்தின் நல்லநோக்கம் என்ன? இந்த நிகழ்வு மூலம் கிடைக்கும் நன்கொடை பெண் குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு செலவிடப்படவிருக்கிறது."இந்நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் தொகை சென்னையிலுள்ள heart for foundation அமைப்பு பராமரிக்கும் 2,500 குழந்தைகளுக்கு செலவிடப்படுகிறது. எனவேதான் பயணம் கடினமாக இருந்தாலும் நல்ல நோக்கத்திற்காக நம்பிக்கையோடு முயற்சிக்கிறோம்" புன்னகைத்து பேசுகிறார் வினீத். வெறும் நம்பிக்கையை வைத்து எவரெஸ்ட் அருகே கூட போகமுடியாது என்பதை வினீத்தும் அறிவார். அதனால்தான் ஐம்பத்தி ஏழு வயதையும் பொருட்படுத்தாது தினசரி மூன்று மணிநேரம் பத்து கிலோ எடையை இடுப்பில் கட்டி இழுத்து பயிற்சி செய்து வருகிறார். "வாழ்க்கை மீது புகார் சொல்லி புலம்புவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. சமூகத்திற்கு என்னால் முடிந்ததை கொடுக்க விரும்புகிறேன்" எனும் வினீத் கின்னஸ் சாதனை என்பது நோக்கத்தின் ஒரு அம்சம்தான் என்பதில் கறாராக இருக்கிறார். கடந்த ஆண்டில் 83 நாட்கள் மட்டுமே வீட்டில் வசித்துள்ளார் வினீத் என்பது வியப்பான செய்தியல்ல. நேர்த்தியான ஹோட்டல்களை தொடங்குவதோடு, புதுமையான ரெசிபி உணவுகளை சமைத்து அடுத்தடுத்த சாதனை மைல்கல்களை தொட்டு பயணிக்கிறார் சூப்பர் செஃப் வினீத் பாட்டியா.
Image result for vineet bhatia with heart for india foundation

மிட்செலின் அங்கீகாரம்!

1900 ஆம் ஆண்டு எட்வர்டு மற்றும் ஆண்ட்ரே மிட்செலின் சகோதரர்கள் தொடங்கிய பிரெஞ்சு டயர் தயாரிப்பு நிறுவனமே மிட்செலின். வாகனங்கள், டயர்கள் குறித்த வழிகாட்டி நூலை தயாரித்தவர்கள் பின்னர் அதில் வரைபடம், மெக்கானிக்குகளின் கடைமுகவரி, பெட்ரோல் பங்குகள், உணவகங்களையும் இணைத்து வெளியிட்ட வழிகாட்டியை 35 ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு இலவசமாக விநியோகித்தனர். 1904 ஆம் ஆண்டு பெல்ஜியத்திற்கான வழிகாட்டியை வெளியிட்ட மிட்செலின் 1922 ஆம் ஆண்டு முதல் தன் வழிகாட்டி நூலுக்கு 2.15 டாலர் விலை நிர்ணயித்தது. 1926 முதல் உணவகங்களை மதிப்பிட ரகசியக்குழுவை நியமித்து அவர்களின் விமர்சனத்தைப் பொறுத்து உணவகங்களுக்கு ரேட்டிங் அளித்து வருகிறது மிட்செலின். மூன்று கண்டங்களில் 30 நகரங்களிலுள்ள 30 ஆயிரம் உணவகங்களை மதிப்பிட்டு ரேட்டிங் அளித்து வரும் மிட்செலின் சிவப்புநிற வழிகாட்டி நூல்கள் 30 மில்லியன் பிரதிகளுக்கும் மேலாக விற்றுவருகிறது.


ஸ்டார் ரேட்டிங்!


உணவின் தரம், பணத்திற்கான மதிப்பு, நிலையான தரம் ஆகிய 3 அம்சங்களே மிட்செல் ஸ்டார்ரேட்டிங்குக்கானவை. தரமான ருசியான பர்சைக் கடிக்காத உணவுகளை குறிப்பிட 1997 ஆம் ஆண்டு முதல் R என்ற ரேட்டிங்கோடு நாக்கை சப்புக்கொட்டும் படத்தையும் மிட்செலின் வெளியிட்டது.  

பிரபலமான இடுகைகள்