சோற்றின் கதை!
சோற்றின் கதை!
'வீட்டு முறை உணவகம்' மேற்கண்ட வாசகத்தை மிகவும் கவனத்துடன் அணுகவேண்டும். இல்லையெனில் நாலு இட்லியை சாப்பிட்டு இலையை எடுத்துப்போட்டு தட்டை கழுவிக் கொடுத்துவிட்டு வந்த தோழர் அன்பரசின் நிலை ஏற்பட்டுவிடும். அன்பரசை பொறுத்தவரையில் உர்ரென மூஞ்சியை வைத்திருந்தாலும் எதையும் மென்மையாக குரலில் பேசுவதில் எந்த டீலிலும் ஏமாந்து போவது அவர்தான் என நிச்சயமாக அன்பரசின் பாக்கெட் காசைப்போட்டு கற்பூரம் அணைத்தே சத்தியம் செய்து சொல்வேன்.
திருவண்ணாமலையில் அண்ணல் அன்பரசு, நம்மாழ்வார் வித்வான்களுடன் ஜால்ரா போட்டுக்கொண்டிருந்த காலமது. அங்கு அவரின் அழைப்பின் பேரில் ஒருமுறைதான் சென்றிருக்கிறேன். வேட்டி கட்டிக்கொண்டு அண்ணாமலையாரின் நெருப்பு தலத்தில் கருகிப்போன பீட்ருட்போல தெரிந்தார். அங்கு மீட்டர் குமார் என்பவரின் வீட்டுக்கு அருகில் உணவகம் ஒன்று பட்ஜெட்டில் நன்றாக இருக்கும் என அழுக்குவேட்டி சித்தர் சொல்லியதை இவரும் அப்படியே நம்பிவிட்டார். கையிலும் இரண்டு மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் என்றுதான் காசு இருந்திருக்கிறது. கூட்டிக்கழித்து கணக்கு பார்த்த அண்ணல், மூணு இட்லி போதாதா இந்த பாடிக்கு என கடைக்கு சென்று இரண்டு நாள் வாங்கி சாப்பிட்டார். மூன்றாவது மூணு இட்லி என்றுகேட்க கூட்டிக்கொண்டிருந்த சீவமாரைக் கூட போட்டுவிட்டு ஓனரின் தாய் பாய்ந்துவிட்டாள். "வாழை போட்டு இட்லி போடறோம். மூணு இட்லி சாப்பிட்டு போனீன்னா நாங்க எப்படி கடை நடத்தறது?" என்று கேட்க அண்ணலுக்கு வெயிலைத்தாண்டியும் வேர்த்துப்போனது. பின் நாலு இட்லி ரூ. 20 க்கு சாப்பிடுவது என ஆனது. பக்கத்தில் பஸ்டிப்போ இருப்பதால் கூட்டம் அலைமோதும். எளிமையாக இருந்தால் நல்ல மெஸ் என்றார். ஒருமுறை அங்கிருந்த சூரத்தனத்தை பார்த்ததும் ச்சீ என்று ஆகிவிட்டது.
சாப்பிடும்போது ஒனரின் ஒரு ஆண்டு குழந்தை ஓடிவந்து இலையை இழுப்பது, தண்ணீரை வாய் வைத்து குடிப்பது, மடியில் படுப்பது என நித்திய தொல்லைகளை பொறுத்து காலை போஜனத்தை முடித்து தன் எழுத்துப்பணியை தொடர்ந்து வந்தார் அண்ணல். பின் நம்மாழ்வார் கேங்கை தொலைத்து தலைமுழுகிய பின்புதான் உருப்பட்டார் என்பதை அவரே தன் சுயசரிதையில் எழுதுவார் என நம்புகிறேன்.
மயிலையில் பெரும்பாலும் பில் வாங்கிப் போட்டுக்கொண்டு எக்கேடோ கெட்டுப்போடா என சோறு போடுவது வழக்கம். அதிலும் காளத்தி அன்னப்பூர்ணா உணவகத்தின் தரம் வேறு லெவல். சப்பாத்தி இரண்டு வாரத்திற்கு முன் சுட்டது போல் என்றால் குருமா மாதங்களைத் தாண்டும். கபாலி கோயிலின் முன்னும் பின்னுமாக இந்த ஹோட்டல் நிறுவனத்திற்கு மூன்று உணவகங்கள் உண்டு.
சைவ அசைவ உணவகங்களில் சாப்பிட நிறைய சகிப்புத்தன்மை வேண்டும். ஒரே கரண்டியை பலதுக்கும் போட்டு வேற்றுமையில் ஒற்றுமையை அங்கேயே நிகழ்த்தி காட்டுவார்கள். தள்ளுவண்டி சரவணன் அப்படி ஒருவர் அமிர்தாஞ்சன் ஸ்டாப்பில் இற்ங்கினால் பரோடா வங்கி அருகே விருப்பம் இருந்தா சாப்புடு என பட்டினத்தார் முகபாவத்துடன் ஜிம் பவுன்சர் போல நிற்பார் சரவணன். நாற்பது ரூபாய்க்கு சோறு போடும் ஆத்மா. ஆனால் அவருக்கே விருப்பம் இருந்தால் மட்டுமே கடை திறப்பார். கடைக்கு அடிக்கடி லீவ் உண்டு. முட்டை, மீன், மாட்டுக்கறிக்குழம்பு, மீன்குழம்பு என நீங்கள் சாப்பிட விரும்பும் அனைத்தும் இவர் கடையில் உண்டு. சாப்பிடும்போது மேலிருந்து கத்தி மிரட்டும் காக்கை, சரசரவென விழும் இலைகள், பக்கத்து கட்டிட கழிவறை மூடியிருப்பது ஆகிய விஷயங்கள் சாதகமாக அமைந்தால் உங்கள் கையிலுள்ள உணவின் ருசியை நீங்கள் உணரலாம்.
சரவணன் அண்ணனின் கடை இருக்கும் பிளாட்பாரத்தில் பிரியாணி கடைகள், நிறைய உண்டு. இவற்றை தினந்தோறும் எதிர்பார்க்க கூடாது. சில நாட்கள் இருக்கும். சில நாட்கள் இருக்காது. மயிலாப்பூர் ஆழ்வார்கடைக்கு அருகிலுள்ள கடை ஸ்ட்ரைக் தவிர பெரும்பாலான நாட்கள் மூன்று வேளையும் உங்கள் வயிற்றை ஏமாற்றாது. ஆனால் உணவின் தரம் ரூபினி பாமாயிலை சார்ந்து இருப்பதால் பூரி சாப்பிட்டு ஆரோக்கியத்தை காப்பதெல்லாம் நீங்கள் வாங்கி வந்த வரம்தான். பெரும்பாலும் பிளாட்பாரத்திலுள்ள கடைகள் ரூபினி பாமாயிலை கருக கருக கதறவிட்டு பயன்படுத்துபவையே.
நேக்கு எல்லாமே க்ளீனா இருக்கணும் கேட்டேளா என்று கறார் கட்டினால் டீ, காபி, வடை, சமோசாவுக்கு மெட்ராஸ் காபி ஹவுஸூம், டிபனுக்கு ஐயர்ஸ் டிலைட்டும் சரணம் என தஞ்சமடையலாம். சாப்பிடும் தரத்தில் மீல்ஸ் வேணும் என்றால் தாராளமாக விவேகானந்தர் காலேஜூக்கு முன்புறமாக உள்ள தெருவில் ஹோட்டல் சைவத்தை தேர்ந்தெடுக்கலாம். வெரைட்டி ரைஸையும் ருசியாக சமைத்து பரிமாறுபவர்கள், மீல்ஸிலும் ஹிட் அடிக்கிறார்கள். ஆனால் அடிக்கடி பிளட் பிரஷர் அதிகமாகி அவசரப்படுவார்கள் என்பதால் குழம்பில் சோறு, பாயசத்தில் பொரியல், ரசத்தில் கூட்டு என சிதறிக்கிடக்கும். அறுபது ரூபாயில நேர்த்தியாக சாப்பிடும இடம். ஆனால் இடம் கட்டை. காம்ரேட் இங்கு சாப்பிடப்போகும் எல்லா முறையும் ஏதேனும் ஒரு கிண்ணத்தை தவறவிட்டு ரெய்னா போல கேட்ச் செய்ய முயற்சித்து பரிதாபமாக பிரேம்ஜியாய் தவறவிடுவது வழக்கம். இனிப்பை மட்டும் இரண்டு கிண்ணம் வாங்கி சாப்பிட்டுத்தான் பர்சையே தொடுவார். வரிவிளம்பரத்திற்கும்தான் மூன்று ரூபாய் என பேப்பரை படிக்கும் கூட்டத்தின் பினாமி அவர். இப்போதைக்கு இதுபோதும் பின்னர். சோற்று புராணத்தை வலம் வருவோம்.