பசவ புன்னையா(1914-1992)
பசவபுன்னையா(1914-1992)
சுந்தரய்யா போலவே பசவ புன்னையாவும் நிலங்களை வைத்திருந்த செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவர். குண்டூரில் சட்டமறுப்பு இயக்க போராட்டத்தில பங்கேற்றவருக்கு பகத்சிங் ஆதர்ச ஆளுமை.
ஆந்திரா கிறிஸ்துவ கல்லூரியில் படித்த பசவ புன்னையா, அங்கு சந்தித்த தோழர்களான ராஜேஷ்வர் ராவ், நாகிரெட்டி, ஹனுமந்த ராவ், சுந்தரய்யா, என்.ஜி.ரங்கா, அஜய் கோஷ், எஸ்.ஏ. டாங்கே, பி.சி ஜோசி ஆகியோரின் நட்பினால் கம்யூனிசத்தின் அடிப்படைகளை கற்று லெனின், சோசலிசம் என படிப்படியாக முன்னேறினார்.
1935-1952,1953 காலகட்டங்களில் நடந்த விவசாய போராட்டம் முதல் மொழிவாரி மாநில போராட்டம் வரையில் தீவிரமாக பங்கேற்ற பசவபுன்னையா, மக்களை கடவுள் மறுப்பாளர்களாக மாற்ற நினைக்கவில்லை. கர்மா, சித்தாந்தம் ஆகியவற்றில் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தவர் காங்கிரஸ்காரர்களுடனும் வேறுபாடு காட்டாமல் நட்பு பாராட்டிய மனிதர்.
மொழிவாரி மாநிலங்களை பிரிப்பதை ஏற்றுக்கொண்ட புன்னையா மதரீதியான பிரிவினை தன் ஆயுள் இறுதிவரை ஏற்கவில்லை. முஸலீம் லீக் கட்சியை தீவிரமாக எதிர்த்தவர் பாகிஸ்தான் கோரிக்கையை கடுமையாக ஆட்சேபித்தார். 1947 ஆம் ஆண்டு இந்தியா பெற்ற சுதந்திரத்தை உண்மையான சுதந்திரமல்ல என துணிச்சலான சொன்ன இடதுசாரி பசவ புன்னையா.