பெண்களால் புனிதம் கெடுகிறதா?
விசா பெற சோஷியல் பதிவுகள் முக்கியம்!
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல
விசா அப்ளை செய்தவர்கள், சோஷியல் தளங்களில் உஷாராக கருத்துக்களை
பதிவிட்டால் மட்டுமே அந்நாடுகளை எட்டிப்பார்க்க முடியும். என்னாச்சு?
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளிலுள்ள குடியேற்ற
அதிகாரிகள் தற்போது விசாவுக்கு விண்ணப்பிப்பவரின் சமூக வலைதளங்களையும் கண்காணித்து
தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இல்லை என உறுதிப்படுத்தியபிறகே விசா வழங்குவது என முடிவெடுத்துள்ளனர். மேலும் உங்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால் ஸ்மார்ட்போன், லேப்டாப் ஆகியவற்றையும் திறந்து பார்க்க அவர்களது நாட்டு சட்டப்படி அனுமதி உண்டு. அமெரிக்க குடியேற்றத்துறை இதுவரை சந்தேகவலையில் மாட்டியவர்களின் இருநூறு எலக்ட்ரானிக்
பொருட்களை சோதித்துள்ளதை பெர்ரி ஆப்பிள்மேன் அண்ட் லெய்டன் எனும் சட்ட அமைப்பின் அறிக்கை
உறுதிப்படுத்தியுள்ளது. எனவே வெறுப்பு வாதம், பிரிவினை என கருத்துகளை பதிவிட்டால் உங்கள் பேரன்களுக்கு கூட அமெரிக்கா செல்லும்
பாக்கியம் கிடைக்காது உஷார்!
2
சூழலுக்கு உதவும் பேப்பர் பேனா!
உத்தரப்பிரதேசத்திலுள்ள ஆசிரமத்தில் சூழலுக்கு இசைவான
முறையில் காகித பேனாக்களை தயாரித்து மக்களுக்கு வழங்கி வருவது பிரபலமடைந்து வருகிறது.
உத்தரப்பிரதேசத்திலுள்ள கண்டேஷ்வரி ஆசிரமத்தில் காகிதம்
மூலம் பேனாக்களை உருவாக்கி பயன்படுத்த தொடங்கியுள்ளனர். "பிளாஸ்டிக், சூழலை மாசுபடுத்துவதால் காகித பேனாக்களை பயன்படுத்தும்
முயற்சியை மக்களின் ஆதரவுடன் தொடங்கியுள்ளோம். பேனாக்களை தயாரித்து மக்களுக்கு விலையின்றி வழங்கி வருகிறோம். திட்டத்தை விரிவுபடுத்த நன்கொடையையும் மக்கள் வழங்கி வருகிறார்கள்" என்கிறார் ஆசிரமத்தைச் சேர்ந்த கிருஷ்ண பிகாரி. பழைய தினசரிகளில் பேனாக்களை தயாரிக்கும் தன்னார்வலர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆசிரமம்
ஊக்கத்தொகையையும் வழங்குகிறது. வேலைவாய்ப்பு கிடைப்பதோடு சூழலையும்
பாதிக்காதவண்ணம் செயல்படும் ஆசிரமத்தின் முயற்சிக்கு மக்களிடம் பாராட்டுகளும் வாழ்த்துகளும்
கிடைத்துள்ளன.
3
குழு தற்கொலை!
டெல்லியைச் சேர்ந்த
புராரி குடும்பத்தினர் சொர்க்கம் கிடைக்க செய்த கூட்டுத் தற்கொலையை அடுத்து ராஞ்சியிலும்
அதேபோல பரிதாப தற்கொலைகள் நிகழத் தொடங்கியுள்ளன.
ஜார்க்கண்டின்
ராஞ்சியில் தனியார் கம்பெனி ஊழியரான தீபக்குமார் ஜா, தன் வயதான பெற்றோர், சகோதரர், அவரின் மனைவி, இரு குழந்தைகள்
என ஏழு நபர்களும்
கூட்டுத்
தற்கொலை செய்துகொண்டது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தற்கொலைக் குறிப்புகள்
கிடைக்காததால் இறப்பிற்கான காரணமும் போலீசிற்கு தெரியவில்லை. "தனியாக தொழில்தொடங்கும்
திட்டத்திலிருந்த தீபக்குக்கு கடன்தொல்லை இருந்தது. அதோடு சகோதரர்
ரூபேஷூக்கும் வேலையில்லை" என துப்பு கொடுத்துள்ளார் வீட்டு ஒனரான மிஷ்ரா. சகோதரர்கள் சீலிங்
பேனில் தூக்குபோட்டும், பிறர் படுக்கையிலும் இறந்து கிடந்துள்ளனர். ஜார்க்கண்டில்
ஹாசர்பாக் தற்கொலைக்கு அடுத்து நிகழ்ந்துள்ள இரண்டாவது கூட்டுத்தற்கொலை நிகழ்வு இது.
4
கேரளாவில் பெண்கள் படை!
கேரளாவில் பெண்களை மட்டுமே கொண்ட போலீஸ் பட்டாலியன் உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்க பெண் மேற்பார்வையாளர்களின் உதவியுடன் உருவாக்கப்பட்ட முதல் பேட்ச் பெண்
சிங்கங்களின் படை இது.
என்எஸ்ஜி படையினரைப் போல வனம், ஆயுதம், தீவிரவாத எதிர்ப்பு பயிற்சிகளை அளித்து 44 பெண்களை தயாராக்கி உள்ளனர். இருநூறுக்கும் மேற்பட்ட பெண் வீரர்களிலிருந்து
மேற்சொன்ன எண்ணிக்கையில் பயிற்சியளித்து சிறப்பாக செயல்பட்ட பெண்களை தேர்ந்தெடுத்துள்ளனர். படைத்தலைவர் நிஷாந்தினி தலைமையேற்க புதிய பெண்கள் பட்டாலியனுக்கு பேரிடர்
மேலாண்மை, களறி, யோகா, கராத்தே, நீச்சல்பயிற்சி, கணினிப்பயிற்சி ஆகியவற்றில் தேவையான பயிற்சிகள் கடந்த ஒன்பது மாதங்களாக அளிக்கப்பட்டது. அண்மையில் முதல்வர் பினராயி விஜயன், போலீஸ்துறை தலைவர் லோக்நாத் பெஹ்ரா ஆகியோரின் முன்னிலையில் பெண்களின் படை அணிவகுப்பு
நடைபெற்றது.
5
பெண்களால் புனிதம் கெடுகிறதா?
நாடெங்கும் பெண்களை கோயில்களில் அனுமதிப்பது குறித்து
சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. இந்நிலையில் உ.பியில் பெண் எம்எல்ஏ விசிட் செய்த கோயில் கங்கை நீரால் சுத்தம் செய்யப்பட்டுள்ள
செய்தி பரபரப்பாகி வருகிறது.
உ.பியின் ஹமிர்பூர் மாவட்டத்திலுள்ள பள்ளிக்கு
நோட்டுப்புத்தகங்களை வழங்க பாஜக கட்சி எம்எல்ஏவான மனிஷா அனுராகி வந்தார். மகாபாரத கால துறவி தூம்ரா ரிஷியின் ஆசிரமம் மற்றும் கோவிலை விசிட் செய்து ஆசிர்வாதம்
பெற்றார். பெண்களை அனுமதிக்காத ஆசிரமத்தில் எம்எல்ஏ என்பதால் மனிஷா
அனுமதித்த கிராமத்தினர், அவர் சென்றபின் கங்கை நீரால் ஆசிரமத்தை
கழுவிவிட்டு துறவியின் சிலையையும் அலகாபாத்திலுள்ள கங்கை ஆற்றில் தூய்மைப்படுத்த முடிவெடுத்துள்ளனர்."இது அரசியலமைப்பு அனுமதித்த உரிமைகளின் படி பெண்களை அவமானப்படுத்தும் செயல்" என மனிஷா அனுராகி எம்எல்ஏ கொதித்துள்ளார்.