குப்பைலாரியில் சுதந்திரதின வாழ்த்து!
அமெரிக்காவின் பிடிவாதம்!
அமெரிக்கா உலகெங்கும் தனது அகதிகொள்கைக்காக
கண்டனங்களைப் பெற்றாலும் பெற்றோர்களையும், குழந்தைகளையும் பிரிக்கும் பிடிவாதத்தை இன்னும்
கைவிடவில்லை.
இரண்டாயிரத்து 500 க்கும் அதிகமான
குழந்தைகளை சட்டவிரோதமாக குடியேறியதாக கூறி பெற்றோர்களிடமிருந்து பிரித்து தனித்தனி முகாம்களில்
தங்கவைத்திருந்தது அமெரிக்காவின் குடியுரிமைத்துறை. இச்செயல்பாடு, உலகநாடுகளின் தலைவர்களாலும் மக்களாலும்
விமர்சிக்கப்பட குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட தொடங்கினர். ஆனாலும்
565 குழந்தைகளை அரசு இன்னும் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கவில்லை என தகவல் கசிந்துள்ளது.
பெற்றோர்களால் குழந்தைக்கு ஆபத்து என 180 குழந்தைகளையும், அமெரிக்காவுக்கு வெளியே உள்ளனர்
என்று கூறி 366 குழந்தைகளையும் குடியுரிமைத்துறை அலுவலகம் வெளியே விடாமல் வைத்துள்ளது.
குழந்தைகளை பெற்றோர்களிடம் விரைவாக சேர்க்க பல்வேறு மனித உரிமை அமைப்புகள் அமெரிக்காவில்
பொதுநல வழக்கு தொடர்ந்து போராடி வருகின்றன. அமெரிக்கா வாழ்வதே அகதிகள்தானே!
2
குப்பைலாரியில் இனிப்பு!
மத்தியப்பிரதேசத்தின் ஜோபத்
நகரில் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி இந்தியாவின் 72 ஆவது சுதந்திரதினத்தை நகர அதிகாரிகள் புதுமையாக
சிறப்பித்தனர். எப்படி தெரியுமா? இனிப்புகளை
விநியோகம் செய்தது குப்பை லாரியில் என்பதுதான் விசேஷம்.
போபால் நகரிலிருந்து 350 கி.மீ தொலைவில் அமைந்துள்ள
ஜோபத் நகரில் 2500 பள்ளி மாணவர்களுக்கு நகர நிர்வாகம்,
குப்பை லாரியில் இனிப்புகளை கொண்டு வந்து வழங்கியது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
உள்ளூர் நிர்வாக அமைப்பான ஜோபத் நகர் பரிஷத், இனிப்புகளை
குப்பை லாரியில் கொண்டு வந்து விநியோகித்த வீடியோகாட்சி சமூகவலைதளத்தில் வெளியாக,
காட்சியைக் கண்ட பலரும் உவ்வே வராததுதான் குறை. கார்ப்பரேஷன் தலைவர் மீது பலரும் புகார் கொடுக்க விரைவில் அவர் மீது துறைரீதியான
விசாரணை தொடங்கவுள்ளது. சுதந்திரத்தை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்களோ?
3
கேரளாவைக்
காப்பாற்றிய இஸ்ரோ!
வரலாறு காணாத கனமழை, வெள்ளப் பேரிடரால் உருக்குலைந்து போயுள்ள கேரளாவை மீட்க
இஸ்ரோவின் ஐந்து செயற்கைக்கோள்கள் உதவி புரிந்துள்ளன. தோராயமாக 370 க்கும்
மேற்பட்ட மக்கள் வெள்ளத்திற்கு பலியாகியுள்ளனர்.
மத்திய அரசின் ஐநூறு கோடி நிதியுதவியோடு பிற மாநில அரசுகளும் நிதியுதவியோடு
பேரிடர் மீட்புக்குழுவினரையும் கேரளாவுக்கு அனுப்பி வருகின்றனர். இதில் இஸ்ரோவின்
ஓசேன்சாட் -2, ரிசோர்ஸ்சாட்-2, கார்ட்டோசாட்-2, 2ஏ, இன்சாட் 3டிஆர் உள்ளிட்ட
செயற்கைக்கோள்கள் தொலைத்தொடர்புகள் முடங்கிய கேரளாவின் உண்மை நிலையை இந்திய அரசு
அறிய உதவியுள்ளன.
இன்சாட் 3டிஆர், அட்வான்சான தட்பவெப்பநிலையை(காற்று, ஈரப்பதம்)
கணிக்கும் திறன் கொண்ட செயற்கைக்கோள். பாதிக்கப்பட்ட பகுதிகளை அட்டகாச
துல்லியத்துடன் படமெடுக்கும் திறன் கொண்டவை கார்ட்டோசாட் மற்றும் ரிசோர்ஸ்சாட்
செயற்கைக்கோள்கள். "ஐந்து செயற்கைக்கோள்களில் பதிவான தகவல்களிலிருந்து
வெள்ளபாதிப்பு பகுதிகளை கண்டறிந்து தகவல்களை தொகுத்து வருகிறோம்" என்கிறார்
மத்திய வானிலை ஆய்வு மைய அதிகாரியொருவர். மனிதநேய உதவிகள் அவசியத்தேவை.
4
நற்குடிமகன் விருது!
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை
காப்பாற்ற அனைவருக்கும் ஆசைதான். ஆனால் போலீசின் டார்ச்சர்களும், இழுத்தடிப்புகளுக்குமே
மக்களை பெருமளவு பயமுறுத்தி வருகிறது. இப்பயத்தைக் களைய இந்திய அரசு விபத்தில் உதவுபவர்களை
ஊக்கப்படுத்த நற்குடிமகன் விருதை(ஜீவன் ரக்ஷா பதக்) வழங்க ஆலோசித்து வருகிறது.
விபத்து ஏற்பட்டு ஒருமணிநேரத்திற்குள்
ஒருவரைக் காப்பாற்றும் கோல்டன் நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்தால் 50 சதவிகித உயிர்களை
காப்பாற்றமுடியும். கடந்தாண்டில் மட்டும் 1.46 லட்சம் உயிர்கள் சாலை விபத்துகளால் பறிபோயுள்ளன.
“விபத்துகளில் உயிர்களை காப்பாற்றுபவர்களுக்கு தேசியளவிலான விருதளிக்க உள்துறை அமைச்சர்
ராஜ்நாத்சிங் அவர்களிடம் கோரிக்கை வைத்து ஒப்புதல் பெற்றுள்ளோம். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு
உதவும் நபர்களுக்கு லீகல் பிரச்னை இருக்காது” என நம்பிக்கை தருகிறார் போக்குவரத்துத்துறை
அமைச்சர் நிதின் கட்கரி.
சுரங்கம், நீர், நெருப்பு ஆகியவற்றில் பாதிக்கப்படும் மக்களுக்கு
உதவுபவர்களுக்கு ரக்ஷா பதக் எனும் விருதை இந்திய அரசு வழங்குகிறது. இதில் சர்வோத்தம்
ஜீவன் ரக்ஷா பதக், உத்தம் ஜீவன் ரக்ஷா பதக், ஜீவன் ரக்ஷா பதக் ஆகிய மூன்று பிரிவுகள்
உண்டு.