இரண்டாயிரம் ரூபாய்க்கு ஆதார் அட்டை!
சமூக விழிப்புணர்வுக்கு கிகி சேலஞ்ச்!
மும்பையின் விரார் ஸ்டேஷனில் மின்ரயில்களில் அபாயகரமான
ஸ்டன்டுகளை செய்து வந்த இளைஞர்களை பிடித்து கிகி சேலஞ்சிற்கு எதிரான விளம்பரத்தை ரயில்வே
உருவாக்கியுள்ளது.
நிஷாந்த் ஷா, துருவ் ஷா, ஷியாம் ஷர்மா எனும் மூன்று ரோமியோக்கள் மின்ரயில்களில்
செய்த ஸ்டன்டுகளுக்காக ரயில்வே போலீஸ் கைது செய்தது. இவர்களின் ஸ்டன்ட் வீடியோக்களுக்கு மட்டும் ஒரு கோடி ரசிகர்கள் இணையத்தில் உண்டு. பிரபலம் என்றாலும் ரூல்ஸ் மீறினால் போலீஸ் காப்பு மாட்டாமல் விடுவார்களா? ரயில்வே கோர்ட்டில் ஆஜர்படுத்தியபோது, மூன்றுநாட்கள் ரயில்வே ஸ்டேஷனை தூய்மைபடுத்துவதோடு, காலை 11 மணி முதல் 5 மணிவரை ரயில்வே விபத்து விழிப்புணர்வை கிகி சேலஞ்சிற்கு எதிராக செய்ய உத்தரவாகியுள்ளது. "இந்நடவடிக்கை மூலம் கிகி சேலஞ்சின் ஆபத்தை மக்கள் புரிந்துகொள்வார்கள்" என்கிறார் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் அனுப் சுக்லா.
2
குண்டர்களுக்கு நோ புரமோஷன்!
ராணுவத்தில் தொந்தி ஆபீசர்களுக்கு புரமோஷன் கிடையாது என
ராணுவ அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.
அண்மையில் வெளியான ஏசிஆர் அறிக்கையில் ராணுவ வீரர்களின்
தற்காலிக புகைப்படங்களை ஒட்டி அனுப்பக்கோரியுள்ளனர். இதில் அவர்களின் உடலின் ஃபிட்னஸை அறியும்விதமான தலை முதல் கால்வரையும் இடது அல்லது
வலது புறம் நிற்கும் படங்களையும் ஒட்டவேண்டும் என்பதுதான் முக்கிய நிபந்தனை. வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் ராணுவ அதிகாரிகளுக்கு உடல்தகுதித்தேர்வு முக்கியமான
ஒன்று. இனி சாதாரண ராணுவ வீரர்களுக்கும் உடல்தகுதித் தேர்வுகளை
வைத்தே பதவியுயர்வு வழங்கப்படவிருக்கிறது. "ஆயுதப்படையினருக்கு உடல்தகுதி என்பது மிகமுக்கியமான ஒன்று. ஆண்டுதோறும் நடத்தவிருக்கும் உடல்தகுதி தேர்வு மூலம், சீரற்ற உடல்தகுதியோடு இருப்பவர்கள் நல்ல உடல்நலனை பெற ஊக்கப்படுத்தப்படுவார்கள்." என்கிறார் அமைச்சக அதிகாரி ஒருவர். தொந்தி ஆபீசர்களுக்கு இனி பிபி எகிறும்.
3
2 ஆயிரம் ரூபாயில் ஆதார்!
வங்கதேசத்திலிருந்து அகதியாக டெல்லிக்கு வந்த கொள்ளையர்
கூட்டம் வெறும் 2 ஆயிரம் ரூபாயில் ஆதார் அட்டையை ரெடி செய்தது பலரையும்
அதிர்ச்சியடைய செய்துள்ளது.
வங்கதேசத்தின் குல்னா மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இக்ரம், சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்து டெல்லியிலுள்ள சுந்தர் நகரில் போலி ஆவணங்களை
உருவாக்கி தங்கியிருந்தார். குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய இக்ரம், கான்பூரில் சிம்கார்டு வாங்க ஆதார் அட்டையைக் கொடுத்தவுடன் அதனை ட்ராக் செய்து
இக்ரம் குழுவை சுற்றிவளைத்து போலீஸ் பிடித்துள்ளது. கொல்கத்தாவிலிருந்து ரயில் மூலம் டெல்லியில் ஊடுருவி வாழ்ந்துவரும் வங்கதேசஅகதிகளின்
எண்ணிக்கை 4 லட்சத்திற்கும் அதிகம். குற்றச்சம்பங்களில் அகதிகள் ஈடுபட்டதை போலீஸ் அதிகாரி
மனிந்தர் சிங் தலைமையிலான டீம் கவனித்து வந்து இக்ரம் குழுவை கைது செய்துள்ளது. அகதிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் விலையில் ஆதார் அட்டை, ரேஷன்கார்டு உள்ளிட்டவற்றை ரெடி செய்து கொடுத்து கொள்ளை தொழில் வளர்த்த இக்ரம் 1994 முதல் பல்வேறு குற்றசம்பவங்களில் தொடர்புள்ளவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
4
பசுமை நினைவகம்!
வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு இவ்வாண்டோடு 76 வயதாகிறது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயி, வெள்ளையனே வெளியேறு இயக்க நினைவாக சுதந்திரப்போராட்ட தியாகிகளின் பெயரில் பசுமை
நினைவகத்தை உருவாக்கி பராமரித்து வருகிறார்.
மகாராஷ்டிராவின் சங்லி மாவட்டத்திலுள்ள பல்வாலி கிராமத்தைச்
சேர்ந்த சம்பத்ராவ் பவார், கிராந்தி வான் என்ற பெயரில் சுதந்திரப்போராட்ட
வீரர்களின் பெயரில் 700 க்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளார். வெள்ளையனே வெளியேறு(1942.ஆக.9) இயக்கத்தின் தங்கவிழா ஆண்டான 1992 ஆம் ஆண்டில் பவார் பசுமை நினைவக ஐடியாவை
செயல்படுத்தியிருக்கிறார். முதலில் 1,475 மரக்கன்றுகளை அரசு நிலத்தில் நட்டாலும் அரசின் வனத்துறை அதனை அனுமதிக்காமல் வெட்டி
வீழ்த்தியிருக்கிறது. பின்னர், குடும்பத்தின் ஒரே வருவாய் ஆதாரமான
4 ஏக்கர் கரும்புக்காட்டை அழித்து தியாகிகளுக்கான மரக்கன்றுகளை
நட்டுள்ள பவாருக்கு அவரது மகன் வைபவ் மட்டுமே ஆதரவாக இருந்துள்ளார்."தியாகிகள் என்றுமே இறப்பதில்லை. கிராந்தி வான் வடிவில் இங்குள்ள 700 மரங்கள் மூலம் நம் நினைவுகளிலும் பசுமையாக வாழ்கிறார்கள்" என்கிறார் புதுமை மனிதரான சம்பத்ராவ் பவார். பசுமையும் பொதுவுடைமைதான்!