சல்லீசு ரேட்டில் குழந்தைகள் விற்பனைக்கு!
பயணிக்கும் பெண்கள்!
இந்தியாவில் வேலைசெய்யும்
பெண்கள் தங்களின் பொருளாதார பலம் கூடியதால் தனியே சுற்றுலாத்தளங்களுக்கு பயணிக்கத்
தொடங்கியுள்ளனர். கடந்தாண்டுகளில்
பெண் சுற்றுலா பயணிகளின் சதவிகிதம் 75 சதவிகிதமாக உயர்ந்துள்ளது
மகிழ்ச்சிக்குரிய தகவல்.
டெல்லி, மும்பை, பெங்களூரு,
சென்னை ஆகிய நகரங்களைச் சேர்ந்த பெண்கள் சுற்றுலா செல்லும் ஆர்வத்தில்
டாப் இடங்களை பிடித்துள்ளனர். "கொல்கத்தா, புனே, குவகாத்தி, ஜெய்ப்பூர்,
விசாகபட்டினம் உள்ளிட்ட நகரங்களிலிருந்தும் சுற்றுலா செல்லும் பெண்கள்
அதிகரித்துள்ளனர்" என்கிறார் தனியார் சுற்றுலா முகவர் ஒருவர்.
பெண்கள் குழுவாக இணைந்து பயணம் சென்றாலும் பாதுகாப்பு விஷயத்தில் கவனமாக
உள்ளனர். வெளிநாடுகளில் லண்டன், சிங்கப்பூர்,
துபாய், மலேசியா ஆகிய நாடுகள் பெண்களை பெருமளவு
ஈர்த்துள்ளன. இவ்வாண்டில் 22 சதவிகித பெண்கள்
தனியே சுற்றுலா சென்று வந்துள்ளனர்.
2
ரூ.45 லட்சத்துக்கு குழந்தைகள் சேல்ஸ்!
குஜராத்தைச் சேர்ந்த குழந்தை
கடத்தல் தொழிலதிபரை மும்பை போலீஸ் அதிரடியாக கைது செய்துள்ளது. இவர் 300க்கும் மேற்பட்ட
குழந்தைகளை அமெரிக்காவுக்கு கடத்தியுள்ள கடத்தல் வரலாறு மக்களை திகைக்க வைத்துள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த ராஜூபாய்
கம்லேவாலா, 2007 ஆம்
ஆண்டிலிருந்து குழந்தைகளை அமெரிக்காவுக்கு கடத்தி 45 லட்சரூபாய்
சம்பாதித்துள்ளார்." ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த 11-16
வயதுக்குட்பட்ட குழந்தைகளை குறிவைத்து பெற்றோர்களிடம் விலைபேசி வாங்கி
வெளிநாடுகளுக்கு விற்றுள்ளனர்" என்கிறது போலீஸ் வட்டாரம்.
அமெரிக்கர்களிடம் லிஸ்ட்டை
பெற்று குழந்தைகளை விலை பேசிவாங்குவது ராஜூபாய் குழுவின் முதல்பணி. பின்னர் பாஸ்போர்ட்டுகளை வாடகைக்கு எடுத்து
போட்டோவுக்கு ஒற்றுமையாக உள்ள குழந்தைகளின் போட்டோக்களை ஒட்டி அமெரிக்காவுக்கு கடத்துவது
ராஜூபாய் ஸ்டைல். இக்குழுவை தன் சலூன் நண்பர் கொடுத்த தகவல் அடிப்படையில்
நடிகை ப்ரீத்தி சூட் அம்பலப்படுத்தினார். கைதான ராஜூபாய் குழுவினர்
இந்தியச்சட்டம் 373 பிரிவு 34 கீழ் குழந்தைகள்
கடத்தல் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
3
களேபரத்திலும் கல்யாணம்!
வெள்ள துயரில் தவிக்கும் கேரளாவின்
மலப்புரம் மாவட்டத்தில் வீடுகள் இடிந்துபோன துயரமனங்களை தற்காலிக முகாமில் நடந்த கல்யாணம்
மலர்ச்சியடைய வைத்துள்ளது.
மலப்புரம் மாவட்டத்தில் வீடுகளை
இழந்த மக்கள் தற்காலிக அரசு முகாம்களின் தங்கவைக்கப்பட்டுள்ளனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட
இளம் தம்பதிகளான அஞ்சு-சைஜூ ஆகியோர் திரிபுந்த்ரா கோவிலில் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
“வீடுகளை முற்றாக இழந்துவிட்ட நிலையில் திருமணத்தை சில மாதங்களுக்கு தள்ளிவைக்கவே முதலில்
விரும்பினோம். ஆனால் முகாமிலுள்ள மக்களின் ஆதரவில் முடிவு செய்த நாளில் திருமணத்தை
நடத்திவிட்டோம்” என துயரையும் மீறி புன்னகையுடன் பேசுகிறது உறவுகள் கூட்டம். மலப்புரம்
மாவட்டம் ஆகஸ்ட் எட்டாம்தேதி பெய்த கனமழையில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி. கேரள மாநிலமெங்கும்
எமர்ஜென்சியாக அமைக்கப்பட்ட ஏறத்தாழ 183 தற்காலிக முகாம்களில் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட
மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
4
இரட்டை இலக்கத்தில் பொருளாதார வளர்ச்சி!
1991 ஆம் ஆண்டு உலகமயமாக்கல் கொள்கை
அறிமுகமானபின் இந்தியாவின் வளர்ச்சி என்பது இரட்டை இலக்கங்களை தொடுவதே அரிய நிகழ்வு.
அண்மையில் புள்ளியியல்துறை(MOSPI) வெளியிட்ட அறிக்கையில் இந்தியா 2006-07 காலகட்டத்தில்
10.08% பொருளாதார வளர்ச்சியை பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு(காங்கிரஸ்)
ஆட்சிசெய்த காலகட்டத்தில் பிரதமராக இருந்தவர் மன்மோகன்சிங். 2004-05, 2011-2012 காலகட்ட
பொருட்களின் விலையை ஒப்பீடு செய்த தேசிய புள்ளியல்துறை கமிஷன், பொருளாதார வளர்ச்சியை
கணக்கிட்டு இவ்வுண்மையை கண்டறிந்துள்ளது. இதற்கு முன்பு 1988-89 காலகட்டத்தில் ராஜீவ்காந்தி
ஆட்சிகாலத்தில் இந்தியா 10.2 சதவிகித பொருளாதார வளர்ச்சியை எட்டியது. “தொண்ணூறுகளுக்கு
பிறகான பொருளாதார சீர்திருத்த விளைவுகளை சமாளித்து வளர்ச்சி சதவிகிதம் அதிகரித்தது
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஆட்சிகாலத்தில்தான்” என்று கூறியுள்ள அறிக்கை பொருளாதார
வளர்ச்சிக்கு ஆதரவான பல்வேறு அறிவுரைகளையும் இதில் வழங்கியுள்ளது.
5
தேசியக்கொடி யாத்திரை!
குஜராத்தின் சூரத் நகரில்
ஆயிரத்து நூறு அடி நீள பிரமாண்ட தேசியக்கொடியை ஏந்தி 72 ஆவது சுதந்திர தினத்தில் மக்கள் பேரணியாக நடந்து
ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற
ஷான் இ திரங்கா என்ற இந்த யாத்திரையில் பயன்படுத்தப்பட்ட கொடி 1,100 அடி நீளமும், 9 அடி
அகலமும் கொண்டது. அக்ராவல் அறக்கட்டளை ஒருங்கிணைத்த இப்பேரணி
5 கி.மீ தூரத்திற்கு நடைபெற்றது.
5 ஆயிரம் மீட்டர் துணியில் தேசியக்கொடியை உருவாக்க 200 பணியாளர்களின் உழைப்பும் 12 நாட்களும் தேவைப்பட்டுள்ளது.
"ஜெர்மனியிலிருந்து இறக்குமதியான இங்க்குகளை தேசியக்கொடிக்கு பயன்படுத்தியுள்ளோம்.
150 க்கும் மேற்பட்ட என்ஜிஓக்கள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியால்
'மதங்களை விட தேசம் பெரியது' என்ற குறிக்கோளை
மக்கள் மனதில் உருவாக்க இந்த யாத்திரை உதவியுள்ளது" என பூரிக்கிறார்
அக்ராவல் அறக்கட்டளை தலைவர் தீபா கடியா.