காதலர்களுக்கு சிறுநீர் தண்டனை!
காஷ்மீரி கஃபே!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான நகரில், மேவிஷ் என்ற இளம்பெண், கஃபே ஒன்றை திறந்து பிரபலமாகியுள்ளார். ஏனெனில் காஷ்மீரில் பெண் ஒருவர் தனி தொழில்நிறுவனத்தை தொடங்கி நடத்துவது இதுவே
முதல் முறை.
மேவிஷின் தந்தை புற்றுநோயால் திடீரென இறந்துவிட குடும்பத்தைக்
காப்பாற்ற மேவிஷ் கஃபேயை தொடங்கி நடத்திவருகிறார். "கஃபேயை தொடங்கியபோது பல்வேறு விமர்சனங்கள், சிரமங்கள் ஏற்பட்டன. ஆனால் இதனை தொடர்ச்சியாக நடத்தமுடியும்
என்ற நம்பிக்கை குறையவில்லை" எனும் மேவிஷுக்கு உதவியாக அவரின் தாய்
மற்றும் சகோதரிகள் உதவிவருகின்றனர். சட்டபட்டதாரியான மேவிஷ் தன் கனவை நோக்கிச்செல்ல
தன் உழைப்பை மட்டுமே நம்புகிறார். "பெண், தனக்கு தேவையான விஷயங்களை யாரையும் சாராமல் தானே பெறமுடியும் என்பதை நம்பாதவர்கள்
என்னை விமர்சனம் செய்கிறார்கள். அவர்களைப் பற்றி எனக்கு கவலையில்லை" என துணிச்சலாக பேசுகிறார் மேவிஷ். கம்பீர ராசாத்தி!
2
மக்களை பிரிக்கும் சதி!
அசாமில் அமுல்படுத்தப்பட்டுள்ள மக்கள் தொகை பதிவேடு பிரச்னையால் 40 லட்சம் மக்களின் வாழ்க்கை நிர்க்கதியாக நிற்பதே இன்று இந்தியா முழுக்க ஹாட் டாபிக். இந்தியா முழுக்க இந்த பதிவேடு முயற்சியை அமுல்படுத்தும் அபாய ஆலோசனையை மத்திய அரசுக்கு
பரிந்துரைத்துள்ளது சங் பரிவார இயக்கமான விஷ்வ ஹிந்து பரிஷத்.
அசாம் மட்டுமல்லாது மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அகதி மக்களை வெளியேற்றும் விதமாக மக்கள்
தொகை பதிவேடு(NRC) செயல்பாட்டை மத்திய அரசு தொடங்கவேண்டும் என்பது விஹெச்பியின்
கோரிக்கை. "வங்கதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லீம்கள் அசாம், மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகம் உள்ளனர். மேற்கு வங்காளத்தில் மால்டா, பிர்பும், முர்ஷியாபாத் ஆகிய இடங்களில் 37%-61% வரை அகதி முஸ்லீம்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. இவர்கள் காஷ்மீர் மற்றும் மேற்கு வங்காளத்தினிடையே பச்சை நிற தேசத்தை உருவாக்கி
வருகிறார்கள்" என இனவெறுப்பு விஷத்தை உமிழ்ந்துள்ளார் விஹெச்பியைச் சேர்ந்த
சரத் சர்மா.
3
முஸ்லீமா? உடனே வெளியேறு!!
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் வீட்டை விட்டு
வெளியேற்றப்பட்டுள்ளார்கள். எதற்காக தெரியுமா? அவர்கள் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக.
மேற்கு வங்காளத்தின் தெற்குப்பகுதியில் பிளாட்டில் தங்கி
மருத்துவக்கல்லூரியில் பணியாற்றி வந்த அஃப்தாப் ஆலம், மோஜ்தபா ஹசன், நசீர் ஷேக், ஷாகத் ஷேக் ஆகிய நால்வரும் விரைவில்
தங்கியுள்ள இடத்தை விட்டு வெளியேற கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சங்கதி அபிஜன் எனும் தன்னார்வ அமைப்பிடம் உதவிகோரியுள்ளனர். "வீட்டு ஓனரிடம் எந்த பிரச்னையுமில்லை. ஆனால் சக பிளாட்வாசிகள் எங்களை காலி செய்ய அவருக்கு கொடுத்த நிர்பந்தம் அவரை அப்படி
பேச வைத்துள்ளது. நாங்கள் சார்ந்த மதத்திற்காக வீடு தராமல் ஒதுக்குவது வேதனையாக
உள்ளது" என்கிறார் மருத்துவரான ஆலம். அரசியல் கட்சிகளின் பிரசாரத்தால் இனவாத நோய் இந்தியர்களின் இதயங்களையும் தாக்கிவிட்டதோ?
4
காதலர்களுக்கு சிறுநீர் குடிபானம்!
மத்தியப்பிரதேசத்தில்
அலிராஜ்பூரில் திருமணமான தம்பதிகளை கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்து சிறுநீரை
குடிக்க வைத்திருக்கிறது பாசக்கார குடும்பம் ஒன்று.
தனக்கு பிடித்தவரை
பெண் தேர்ந்தெடுத்து திருமணம் செய்ததுதான் இக்கொடுமைக்கு காரணம். கணவரை கம்பத்தில் கட்டிவைத்து விளாசுவதையும், அருகில் மனைவி கையறுநிலையில் அழுவதையும் அக்குடும்பத்தில்
ஒருவரே வீடியோவும் எடுத்துள்ளது குரூரத்தின் உச்சம். ஜாதி பஞ்சாயத்து தீர்ப்புப்படி, பெண்ணின் குடும்பத்திற்கு 70 ஆயிரம் ரூபாய் பணமும், இரண்டு ஆடுகளையும் கணவரின் குடும்பம்
கொடுத்திருக்கிறது. குஜராத்திலிருந்து ம.பி கிராமத்திற்கு வந்த தம்பதிகளை துப்பாக்கி
முனையில் கடத்தி முடியை வெட்டி அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.தம்பதியின் புகாரின் பேரில் பெண்ணின் குடும்பத்தினர் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.