மழைநீர் சேகரிப்பாளர் இந்திரகுமார்! - மாமனிதர் போற்றுதும்!








மழைநீர் சேகரிப்பு  மாமனிதர்!


ஆண்டுதோறும் ஜனவரி முதல் பிப்ரவரி மாதத்திற்குள் சென்னையில் குடங்களைத் தூக்கிக்கொண்டு மக்கள் அலையத் தொடங்கிவிடுகின்றனர். காரணம், சென்னை பெருநகரம் அதனைச் சுற்றியுள்ள ஏரிகளை மட்டுமே குடிநீர் தேவைக்கு நம்பியுள்ளது.

வீட்டைச் சுற்றிலும் கசிவுநீர்க்குட்டைகள், மழைநீர்  சேகரிப்புத் தொட்டிகளை அமைத்து நிலத்தடி நீரைச் சேமித்து பயன்படுத்தி வருகிறார் மழைநீர் சேகரிப்பாளரான இந்திரக்குமார். "எங்க வீட்டிலுள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்பை, எக்ஸ்னோரா அமைப்பின் நிமல் சார்தான் அமைச்சுக் கொடுத்தார். 1998 ஆம் ஆண்டில்தான்  நிலத்தடிநீர் சேகரிப்பைத் தொடங்கினேன்.  இதுவரை நாங்க தண்ணீர் பஞ்சத்திற்காக அலையும் நிலை வரலை" என்று பேசத் தொடங்கினார்.

இவர் தன் வீட்டில் மழைநீர் தேங்கும்படியான கொல்லைப்புறத்தை தாழ்த்தியும், வாசல்புறத்தை உயர்த்தியும் கட்டியுள்ளார். வாசல் வழியாக வரும் நீரை, கசிவுநீர்க்குட்டைகள் மூலமாக நிலத்தடி நீராக சேமிக்கிறார். கூடுதலாக அருகிலேயே மரங்கள் வளர்ப்பதால், மண்ணரிப்பு பிரச்னையின்றி நீர் சேகரமாவதோடு, கோடையிலும் சில்லென காற்று வீசுகிறது.

 ”எங்க வீட்டு அளவு 3200 ச.அடி. ஆண்டுக்கு சராசரியாக நூறு செ.மீ. மழை கிடைக்குதுன்னாக்கூட நாங்க இதுவரை தோராயமாக 3 லட்சம் லிட்டம் மழைநீரை சேமிச்சிருக்கிறோம்” என்று துல்லியமாகக் கணக்குச் சொல்லி ஆச்சரியப்படுத்துகிறார். இதில் 16 ஆயிரம் லிட்டர்  நீர், சாலை மூலமும், 4 ஆயிரம் லிட்டர் நீர், மழைநீர் சேகரிப்பின் மூலமும் கிடைக்கிறது. தமிழக அரசு மழைநீர் சேகரிப்பை அமலாக்குவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அதனை இந்திரகுமார் உருவாக்கிவிட்டார்.

 இவர் வீட்டிலுள்ள கழிவறைத் தொட்டியில் எந்த துர்நாற்றமுமில்லை. என்ன காரணம்? அதிலுள்ள யூரியாவை எடுக்க நீர்ப்பாசியைப் பயன்படுத்துகிறார். கழிவுநீர் தொட்டியிலுள்ள  கழிவுகளை உணவாக கொள்ள குறிப்பிட்ட பாக்டீரியாக்களைத் தயாரித்து பயன்படுத்துகிறார் இந்திரக்குமார்.

 ”வீடுகளில் கழிவறைகளில் வேதிப்பொருட்கள், அமிலங்கள் பயன்படுத்துவதற்கு பதிலாக எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகியவற்றின் தோல்களை மிக்சியில் நன்கு அரைத்து பேஸ்ட் போலாக்கி பயன்படுத்துங்கள். சூழல் கேடு குறையும்.” என்றார்.
சமையல் அறை, குளியல் அறை என தனித்தனியாகப் பிரித்து அந்நீரிலுள்ள வேதிப்பொருட்களை இந்திரகுமார் சுத்திகரிக்கிறார்.  இதன்மூலம் அதனை தூய நிலத்தடி நீராக்குகிறார்.

குளியல் அறையிலிருந்து வெளியேறும் சோப்பு நீரை கல்வாழை, சேப்பங்கிழங்கு செடிகள் மூலம் சுத்திகரிக்கிறார். இதில் சமையல் அறை நீரை சுத்திகரிப்பதில் மண்புழுக்களின் பங்கும் உண்டு. 
நிலம் மட்டுமல்ல மாடியிலும், மாடிச்சுவர் விளிம்புகளை தோட்டமாக்கி நெல், வேர்க்கடலை என பயிராக்கி ஆச்சரியம் தருகிறார் இந்திரக்குமார். தற்போது மாடியில் அதிகளவில் மூலிகைத் தாவரங்களான நித்யக்கல்யாணி, கற்பூரவள்ளி, மனோரஞ்சிதக்கொடி ஆகியவற்றை பயிரிட்டுள்ளார்.

 ”. நான் முதலில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்திட்டு இருந்தேன்.  மழைநீர் சேகரிப்புல ஆர்வமாகி இன்னைக்கு இது பத்தி பலருக்கும் வகுப்பு எடுத்திட்டு இருக்கேன். நீங்களும் நீரை அக்கறையாகச் சேமிக்கத் தொடங்கிட்டாலே, தண்ணீர் பற்றாக்குறை பேச்சுக்கே இடமில்லை ” என்றார் இந்திரக்குமார். மழைநீர் சேகரிப்பை ஆயிரம் பேர்களுக்கு மேல் சொல்லிக்கொடுத்து, பயிற்சி வகுப்புகளையும் எடுத்து வருகிறார். அலைபேசி எண்:  9941007057

பெட்டிச்செய்தி: 

2001 ஆம் ஆண்டு தமிழக அரசால், கட்டாய மழைநீர் சேகரிப்புத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்கான மழைநீர் சேகரிப்பை தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் அமைத்துக் கொடுத்தது. இதன்மூலம், நிலத்தடி நீர்மட்டம் 50 சதவீதம் உயர்ந்தது.  


2

இதில் கசிவுநீர் குட்டை முக்கியமானது. ஆறு முதல் எட்டு அடி தோண்டி அமைக்கலாம். மேலே வரும் வெள்ளநீரை ஃபில்டர் செய்ய மணல் கப்பி, அதற்கு கீழே சிறிய, பெரிய ஜல்லிக்கற்களை போடலாம். இது எளிமையானது. இன்னும் செலவு செய்வதாக இருந்தால் இதில் கீழாக நீங்கள் இணைக்கும் குழாயில் நைலான் வலைகளை அமைத்தால் நீரை இன்னும் தூய்மையாக நிலத்தடி நீராக சேகரிக்கலாம்.



ஐடியா மற்றும் உதவி - பாலகிருஷ்ணன்

வெளியீடு - தினமலர் பட்டம் மாணவர் பதிப்பு, காலைக்கதிர் மாணவர் பதிப்பு

பேட்டி எப்படி எடுத்தோம்னா.....


பொதுவாக ஒருவரைப் பற்றி எழுதியதை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்றுவதில் அவர் பணிசெய்யும் துறை சார்ந்து தெரிந்திருந்தாலே போதும். ஆனால் பேட்டி எடுப்பது அப்படியல்ல. ஒருவரைப் பேச செய்வது அவ்வளவு எளிதல்ல. அடுத்து நாம் நினைத்த எடிட்டர் சொல்லும் வரம்பில் பதில்கள் கிடைக்கவேண்டும். 

நான் முதலில் பேசியபோது மணி மதியம் 2. நம்பர் கொடுத்த நண்பர் பாரதி, பதினொரு எண்களைக் கொடுத்து ஒரு ஜீரோ குறைச்சுக்க என்றார். எந்த ஜீரோ இடதா வலதா என கேட்க டென்ஷனானார். நீயெல்லாம் ஒரு பத்திரிக்காரனா? என உசுப்பேற்றினார். 

தப்பா நம்பர் போட்டா உங்களுக்கு பேசறவன் வேறமாதிரி . என்கிட்ட பேசறவன் இந்தில பேசறான் வித்தியாசமில்லையா என்றேன். சரி அவரோடு விவாதிக்காமல் எக்ஸ்னோரா, மற்றும் விகடன் டிவியில் தேடியபோது எண் மாறாமல் கிடைத்தது. மாலை ஆறு மணிக்கு பேசியபோதும் எதுவும் மாறவில்லை. எனக்கு உலகமெல்லாம் ஏகப்பட்ட விசிட்டர்ஸ். ஐந்து நிமிஷம்தான் தம்பி. விகடன் டிவி என்னை பேமஸ் ஆக்கிருச்சு தம்பி என்றார் இந்திரகுமார். 

என்னுடைய நோக்கம், மழைநீர் சேகரிப்பு பர்சைக் காப்பாற்றுமா என்றுதான் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். மற்றபடி இயற்கை வாழ்க்கை இனிய வாழ்க்கை என்று பேசுவதையெல்லாம் பட்டத்தில் எழுத முடியாது. படத்தை வாட்ஸ் அப்பில் அனுப்புகிறேன் என்பதை மட்டுமே சொன்னார். மெயில் என்றவுடன், என்னது மெயிலா அதுக்கெல்லாம் எனக்கு நேரமில்லை என்று உடனே போனை வைத்துவிட்டார். பிறகு பத்தே நிமிடங்களில் போட்டோக்கள் வந்தன. எங்கள் டிசைன் சீஃப் கார்த்திக் ராஜ், பார்த்த நொடியே அதனை வேண்டாம் என்பார். அதே போட்டோதான் படமாக ஓவியர் மகேஸால் வரையப்பட்டது. 

பின்பு, படங்கள் நிறைய தேவை என மீட்டிங்கில் முடிவானது. உடனே பாரதி இப்போதும் உதவிக்கு வந்து ஒரு காரியம் செய்தார். அது, கவர் பேஜூக்கு கொண்டு வரலாமே என்றார். நண்பர்கள் செய்யும் காரியமா இது? நான் உடனே படங்கள் தாங்காது என்றேன். ஆனால் எடிட்டர் அதனால் என்ன படங்கள் எடுக்க ஏற்பாடு பண்ணுங்க என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். 

இந்திரகுமாருக்கு போன் செய்தால் என்ன நீங்க இப்போ போய் போட்டோ கேட்கறீங்க. இது தப்பு. எனக்கு நிறைய விசிட்டர்ஸ் வர்றாங்க. அதனால போட்டோவுக்கு நேரம் தரமுடியாது என்றார். போனையும் வைத்துவிட்டார். 

அப்புறம் வாட்ஸ் அப்பில் போனில் சொன்னதை டைப் செய்து அனுப்பினேன். உடனே ப்ளூ டிக் வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அது வருவதற்கு முன்பே போனில் இந்திரகுமார் அழைத்தார். ஷார்ப்பாக பத்து மணிக்கும் வந்துருங்க. பசுமை விகடன் டீமோட உங்களுக்கு போட்டோ எடுக்க வாய்ப்பு இருக்கு. லேட் பண்ணினா நான் பொறுப்பில்லை என்றார். 

அப்புறம் என்ன பாரதி நம்பரை எடுத்து தலைமை புகைப்படக் காரரிடம் அசைன்மெண்ட் பெற்றார். அதில் கிடைத்தவர்தான் சீனியர் புகைப்படக்காரர் முரளிதரன். பத்து மணிக்கு நேரம் சொல்லி அவர் புகைப்படம் நியோவில் அப்லோடு பண்ணும்போது மணி 11.35. அப்புறம் ஒருவழியாக நிம்மதி என்றால், டெக்ஸ்ட் அதிகம் என சுபாஷ் கையைப் பிடித்து இழுத்தார். 200 கீகளில் எப்படி அத்தனை விஷயத்தையும் சொல்லுவது. வேறுவழியில்லை. கசிவுநீர் குட்டை, அரசு சட்டம் அத்தனையும் தூக்கி கடாசினேன். 

இப்படித்தான் தினமலர் பட்டத்தின் அட்டைப்படக் கட்டுரை உருவானது. 










பிரபலமான இடுகைகள்