டெக்ஸ் வில்லர் அசத்தும் நீதியின் நிழலில்- மரணதேசம் மெக்ஸிகோ!
மரணதேசம் மெக்ஸிகோ - நீதியின் நிழலில்
இக்கதையை நிஸ்ஸி எழுத, ஓவியம் வரைந்திருக்கிறார் மேன்பிரட் ஸோம்மர்
அரிசோனாவில் உள்ள பாதர் மாத்யூவின் காப்பகத்தில் உள்ள சிறுவன் ஜூவானிடோ ஜோஸ், அடையாளம் தெரியாத ஆட்களால் கடத்தப்படுகிறான். அதுபோல நிறைய குழந்தைகள் அங்கு கடத்தப்பட்டாலும், மக்கள் யாருமே அது குறித்து பேச மறுக்கின்றனர். இந்த குற்றச்செயலுக்கு காரணம் யார் என்று டெக்ஸ் வில்லர் கண்டுபிடிப்பதே கதை.
அரசு காவல்துறையில் உள்ள ஊழல், துரோகம் என அனைத்தையும் தவிடுபொடியாக்கி டெக்ஸ் வில்லர் தன் நண்பர் கிட்டுடன் சேர்ந்து நியாயத்தை நீதியை நிலைநாட்டுவதுதான் கதை. எக்கச்சக்க ட்விஸ்டுடன் செல்லுகிற கதை.
பால் மெண்டிஸ், சுரங்க அதிபர் டான் ஓப்ரேகான் ஆகியோரின் ஆட்களைச் சந்திக்கும் இடங்கள் ரகளையாக உள்ளன. இறுதியில் சுரங்கம் மக்கள் வசம் செல்வது கம்யூனிச முடிவாக இருந்தாலும், ரசிக்க வைக்கிறது.
நீதியின் நிழலில்
செவ்விந்தியர்களுக்கும், வெள்ளையர்களுடன் பணிபுரியும் நாய் மாஸ்டர் லாபார்ஜ் ஆகியோருக்கு இடையிலான சண்டைதான் காமிக்ஸ் கதை.
டெக்ஸ் வில்லர் இருதரப்பு உறவையும் சீராக்க முயற்சிக்கிறார். அதற்கு பெரும் தடையாக ஸ்கவுட் லாபார்ஜ் இருக்கிறான். டெக்ஸ் வில்லரையே போட்டுத்தள்ள முயற்சிக்கிறான். வில்லர் மரணதண்டனை குற்றவாளி ஒச்சாலாவைப் பிடித்தாரா, அவனைக் கொல்லத் துடிக்கும் லாபார்ஜைத் தடுத்தாரா என்பதுதான் கதை.
கதை முழுக்க வில்லரைப் பாதுகாக்கும் முதுகு காவலன் கிட் கார்சன், இம்முறை காயமுற்று கறியும் உருளைக்கிழங்கு வறுவலும் சாப்பிட உட்கார்ந்து விட்டார். அதனால் முழு காமிக்ஸையும் தூக்கிச் சுமக்கும் வீர ராக டெக்ஸ் மாறிவிட்டார்.
அரச நீதி என்பதைத்தாண்டி மனசாட்சிப்படி ஒச்சாலாவைக் கைது செய்யாமல் டெக்ஸ் விட்டுவிடுகிறார். அவர்தான் டெக்ஸை லாபார்ஜின் சூழ்ச்சியிலிருந்தும் காக்கிறார். அப்போதுதான் டெக்ஸூக்கு மற்றொரு சூழ்ச்சி தெரியவருகிறது. ஒச்சாலாவைக் கொன்றால் தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்று நினைத்த அரசியல்வாதி ஒருவர் செய்த தந்திரம்தான் தனக்கான வேலை என்பதைக் கண்டுபிடிக்கிறார் டெக்ஸ். அவர் யார் என்பது கடைசி ட்விஸ்ட்.
மூளையைப் பயன்படுத்துவதால் கடும் துப்பாக்கிச்சண்டை ஏதும் கதையில் நிகழவில்லை. மனிதநேயம் கொண்ட வீரராக டெக்ஸ் பின்னி எடுக்கிறார்.
- கோமாளிமேடை டீம்