பழங்குடித் தலைவரை கொன்ற சமூக விரோதிகள் - பிரேசில் அட்டூழியம்
பிரேசிலின் அமேசான் காடுகளைப் பாதுகாக்க போராடிய தலைவர்களில் ஒருவரான லோபோ நவ.1 அன்று கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை அங்கு 135 சூழலியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
குவாஜாஜரா எனும் பழங்குடி இனக்குழு தலைவராக இருந்த பாலோ பாலினோ குவாஜாஜரா என்ற 26 வயது இளைஞர், தற்போது கொல்லப்பட்ட சூழலியலாளர் பட்டியலில் இணைந்துள்ளார். அவரையும் கொலைகார கும்பல் விட்டுவைக்காமல் கொன்றுவிட்டனர்.
அங்கு சட்டவிரோதமாக மரங்களை, விலங்குகளை வேட்டையாடும் கும்பல் லோபோவின் முகத்தில் சுட்டுக் கொன்றுள்ளது. அவரின் நண்பர் லேர்சியோவுக்கும் கடுமையான காயம் பட்டுள்ளது. லோபோ, கார்டியன் ஆப் தி ஃபாரஸ்ட் என்ற உதவிக்குழுவைத் தொடங்கி செயல்பட்டு வந்தார். அராரி போலா எனும் பாதுகாக்கப்பட்ட கானக இடத்தை இவர்கள் பாதுகாத்தனர். இதனை அழிப்பது சட்டவிரோத கும்பலுக்கு முக்கியமான லட்சியமாக இருந்தது.
பிரேசில் அதிபர் பொல்சனாரோ தேர்ந்தெடுக்கப்படும் சமயத்தில் இக்கொலைகள் அதிகரித்து வந்தது தற்செயலான ஒன்று என நியூயார்க் டைம்ஸ் வஞ்சப் புகழ்ச்சியணியாக எழுதியுள்ளது. வலதுசாரி அதிபரான பொல்சனாரோ, காடுகளை அழிப்பதில் பேரார்வம் கொண்டவர். இதற்கு வளர்ச்சி என்ற பெயரைக் கூறுவதில் கூச்சமே படமாட்டார். 2012ஆம் ஆண்டு தொடங்கி லோபோ அரசு மற்றும் கூலிப்படை யினரின் வன்முறையை சமாளித்து வந்தார். ஆனால் இம்முறை மிக கச்சிதமாக திட்டமிட்டு லோபோவை கொன்றுவிட்டனர்.
அந்த பழங்குடித் தலைவர் உயிரைவிட்டது தன் வாழ்வுக்காக, தன் இனக்குழுவுக்காக மட்டுமல்ல.... நமக்காகவும்தான்.
நன்றி: லிவ் சயின்ஸ் - பிராண்டன் ஸ்பெக்டர்