வருமுன் காப்பதில் கவனமாக இருக்கிறோமா?
giphy.com |
வருமுன் காப்பதில் கவனம் தேவை!
உலக நாடுகளின் சுகாதாரத்தை அளவிடும் சுகாதாரப் பாதுகாப்பு பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் இந்தியா 57ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவில் தொற்று நோய்களும், தொற்றா நோய்களும் ஏராளமாக மக்களைத் தாக்கி வருகின்றன. நாம் இவற்றை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோமா என்பது முக்கியமானது. இவற்றை நாம் எப்படி கண்காணிப்பது என்றால் அதற்கென பல்வேறு ஆராய்ச்சிகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் உலக சுகாதாரப் பட்டியல். இப்பட்டியலில் இடம்பெற்ற 195 நாடுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகள் முதன்மையாக உள்ளன.
இப்பட்டியலில் இந்தியா சுகாதாரம் சார்ந்த பணிகளில் 46.5 புள்ளிகளைப் பெற்றுள்ளது. முதன்மை இடம் பெற்ற மூன்று நாடுகளின் சுகாதாரப் புள்ளிகள் 75 முதல் 83 வரை உள்ளன. இப்பட்டியலுக்கான ஆய்வு, 140 கேள்விகளை உள்ளடக்கியது.
நோய்களை முன்னெச்சரிக்கையாகத் தடுப்பது, சிகிச்சை, பாதிப்புகள், மக்களின் நிலை, நிலப்பரப்பு சார்ந்த சமூகப் பொருளாதாரம் என அனைத்தையும் இதில் கவனிக்கின்றனர். ஆய்வில் வழங்கப்படும் புள்ளிகளில் குறைந்தபட்சம் 40 புள்ளிகளுக்கு மேல் வாங்கும் நாடுகள், சுகாதாரத்துறையில் ஓரளவு செயற்பட்டுள்ளன என வகைப்படுத்தலாம். அதற்கு கீழ் உள்ள நாடுகள் மிகமோசமான செயற்பாட்டைக் கொண்டுள்ளன என புரிந்துகொள்ள வேண்டியதுதான்.
“நோய்தடுப்பில் நாடுகளுக்கு உள்ள நடைமுறைத் தடைகளைக் கண்டறிய இந்த ஆய்வு உதவுகிறது” என்கிறார் பொதுக்கொள்கை வடிவமைப்பு ஆலோசகரான லியோ அப்ருசே (Leo Abruzzese). 23 சதவீத நாடுகள் மட்டுமே நோய்களை முன்னரே கண்டறிந்து தடுக்கவும், பாதிப்பிலிருந்து வேகமாக மீள்வதற்கான முயற்சிகளையும் செய்கின்றன என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்தியா, உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி, சுகாதாரத் திட்டங்களை மேம்படுத்துவது முக்கியம். இதனால், எபோலா போன்ற நோய்களுக்கு பலியாகும் மக்களின் எண்ணிக்கையை குறைக்கும் வாய்ப்பு உள்ளது.
தகவல்:DC
நன்றி - தினமலர் பட்டம்