கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் வீடுகள் - இங்கிலாந்தில் புது ரூல்!
giphy.com |
மாற்றம் தரும் பசுமை வீடுகள் !
இங்கிலாந்தில் உள்ள வீடுகளில் வெளியாகும் கார்பன் வெளியீட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது.
உலகம் முழுக்க கார்பன் வெளியீட்டுக்கு எதிரான மனநிலை உருவாகிவருகிறது. இதன்காரணமாக தனிநபரின் இயற்கைவள ஆதாரங்கள் செலவு, தொழிற்சாலைகளின் பங்கு, உணவுக்கு உதவும் பண்ணை விலங்குகள் என அனைத்தையும் சூழலியலாளர்கள் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர்.
இங்கிலாந்தில் வெளியாகும் கார்பன் வெளியீட்டுக்கு, அங்கு வாழும் மக்களின் வீடுகளும் முக்கியக்காரணம் என அரசு கண்டறிந்துள்ளது. இதன்விளைவாக, 2022க்குள் கட்டப்படும் புதிய வீடுகள் கார்பன் வெளியீடு குறைந்த பசுமை வீடுகளாக்க முயன்று வருகிறது. இங்கிலாந்தில் ஆண்டுதோறும், 2 லட்சத்து 30 ஆயிரம் வீடுகள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. இந்த வீடுகளில் அறைகளை சூடாக வைக்க கரிம எரிபொருட்களை பயன்படுத்துகின்றனர். அவற்றைத் தவிர்க்க வைக்கும் வழிகளை அரசு தேடிவருகிறது. ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளிலும் பசுமை வீடுகளுக்கான விதிகள் அமலாக இருக்கின்றன.
தற்போது வீடுகளுக்குத் தேவைப்படும் வெந்நீர் பொதுவான இடத்தில் சூடுபடுத்தப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இதற்கு எரிவாயு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு பதிலாக சூடு செய்யும் பம்புகள் வீடுகளில் பொருத்தப்பட்டு அறையை சூடு செய்வது, வெந்நீர் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்ய வைக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
வெப்பமயமாதலுக்கு எதிரான அமைப்புகள் அரசுக்கு இதுதொடர்பான அழுத்தத்தை அளித்து வருகின்றன. சூடேற்றும் குழாய், இன்டக்சன் ரக அடுப்பு, காற்று வசதிகொண்ட ஜன்னல்கள் என பசுமை வீடு அம்சங்கள் கொண்டதாக உள்ளது. அரசு பசுமை கட்டுமானங்களுக்கான அறிக்கையை வெளியிட்டாலும், கட்டுமானத்துறை கூடுதல் காலம் கேட்டுள்ளது. புதிய தொழில்நுட்பம் மற்றும் பொருட்களை வாங்குவதற்கு காலம் தேவை என்பது கட்டுமான நிறுவனங்களின் கோரிக்கை. ”இங்கிலாந்து கட்டுமானத்துறை கால அவகாசம் கேட்கிறது. ஆனால் நெதர்லாந்தில் எரிவாயு பாய்லர்களை பயன்படுத்த உடனடியாக தடை விதித்துவிட்டனர்” என்கிறார் வெப்பமயமாதல் போராட்டக்காரரான ஜென்னி ஹில். இங்கிலாந்து பசுமை வீடுகளை உறுதியான சட்டமாக மாற்றும்போது, அம்மக்களுக்கு முழு உலகமும் ஆதரவு வழங்கும் வாய்ப்பு உள்ளது.
நன்றி - New Scientist
நன்றி - தினமலர் பட்டம்