நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் நுண்ணுயிரிகள்!
giphy.com |
நகரங்களில் பரவும் நுண்ணுயிரிகள்!
பெருமளவு வலிநிவாரணிகளை மக்கள் பயன்படுத்தும்போது, நிலம், நீராதாரங்கள் அனைத்திலும் மாசுபாடு ஏற்படுகிறது. அழகுசாதனப் பொருட்கள், மருந்துகள் ஆகியவை இந்த மாசுபாடுகளுக்கு முக்கியக் காரணிகள். கழிவுநீர் கலப்பதால், நகரிலுள்ள ஏரி, குளம் ஆகிய நீராதாரங்களில் நுண்ணுயிரிகளின் பெருக்கம் அதிகரித்து வருகிறது.
நீர்நிலைகளிலுள்ள நுண்ணுயிரிகள் தொடர்பான ஆய்வு அசாமின் கௌகாத்தியில் நடைபெற்றது. இந்த ஆய்வில் நீர்நிலைகளில் வைரஸ்கள் மற்றும் மருந்துகளை எதிர்க்கும் ஈ_கோலி பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டன. பிரம்மபுத்திரா ஆற்றிலிருந்து மாதிரிகள் எடுத்து ஆராயப்பட்டு இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.
நீர்நிலைகளில் சேரும் வேதிப்பொருட்கள், உலோகம், மலக்கழிவுகள் ஆகியவை நீர்நிலையின் இயல்பான வெப்பத்தை மாற்றுகின்றன. மேலும் இவை லெவோஃபிளாக்ஸாசின் (levofloxacin), சிப்ரோஃபிளாக்ஸாசின் (ciprofloxacin), நார்ஃபிளாக்ஸாசின் (norfloxacin), கனாமைசின் (kanamycin), மோனோசல்பேட் (monosulphate), சல்ஃபாமீதோஆக்சோல் (sulfamethoxazole) ஆகிய ஆன்டிபயாடிக் மருந்துகளை, நீர்நிலையிலுள்ள நுண்ணுயிரிகள் எதிர்க்கின்றன.
”பிரம்மபுத்திரா, நகரங்களிலுள்ள நீர்நிலைகளில் சேருகிறது.
அதிலுள்ள வேதிப்பொருட்களால் தன் தனித்தன்மையை இழந்து நிலத்தையும், நிலத்தடி நீரையும் பாதிக்கிறது” என்கிறார் காந்திநகரிலுள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தைச் சேரந்த ஆராய்ச்சியாளர் மனிஷ் குமார். இந்த ஆராய்ச்சியில் இவரோடு இலங்கை, ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் பங்கேற்று உள்ளனர்.
பிரம்ம புத்திரா தவிர்த்து அசாமில் ஓடும் பாராலு எனும் நதியிலிருந்தும் நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வில் ஏரிகள், ஆறுகளிலிருந்து பெறும் மாதிரிகளில் மாசுபாடு இருந்தன. ஆனால், கழிவுநீரில் ஆர்சனிக், கோபால்ட், மாங்கனீசு ஆகிய வேதிப்பொருட்கள் அதிகம் காணப்பட்டன.
நீரில் கூடுதலான அமிலத்தன்மையோடு, ஈகோலி ரக பாக்டீரியாக்களும் அதிகம் காணப்பட்டன. மக்கள் பெருமளவில் பயன்படுத்தும் ஆன்டிபயாடிக் மருந்துகளை ஈகோலி பாக்டீரியா உறுதியாக எதிர்த்தது. இது ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்துள்ளது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆறு ஆன்டிபயாடிக் மருந்துகளை மட்டுமே ஆராய்ச்சியாளர்கள் இம்முறையில் சோதித்துள்ளனர்.
”நதிகளைப் பாதுகாக்க இதுதான் நமக்கு சிறந்த வாய்ப்பு. நீரில் கலந்துள்ள வேதிப்பொருட்களின் அளவை திட்டமிட்டு கட்டுப்படுத்தாவிட்டால், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு விடும். இதில் அரசு வேகமான நடவடிக்கை எடுக்காவிட்டால், நீரின் தரம் கெட்டுவிட வாய்ப்புள்ளது” என்கிறார் ஆராய்ச்சியாளர் மனிஷ் சர்மா.
தகவல்: http://vigyanprasar.gov.in
நன்றி - தினமலர் பட்டம்