பெர்லின் சுவரும், சீனாவின் கம்யூனிசமும்!
பெர்லின் சுவர் இடிந்து 30 ஆண்டுகள் ஆகின்றது. உலகம் முழுக்க கம்யூனிச விஷயங்களின் சரிவும் அப்போதுதான் தொடங்குகிறது. சோவியத் ரஷ்யாவின் காலத்தில் அங்கிருந்த அகிலம், உலகம் முழுக்க இருந்த கம்யூனிச அமைப்புகளை ஒருங்கிணைத்து செயல்பட்டு வந்தது. பின்னர் சோவியத் தொண்ணூறுகளில் கோர்ப்பசேவ் வந்து சோவியத்தை மறு உருவாக்கம் செய்தபோது அனைத்தும் நொறுங்கத் தொடங்கின.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி நூறாவது நிறுவன தினத்தை கொண்டாடி வருகிறது. இவர்கள் சோவியத் வீழ்வதற்கு முன்னரே அங்கு சென்று அவர்களின் கோர்ப்பசேவின் கருத்தியல் சரியானதும் முறையானதும் அல்ல என்று கூறிவிட்டு வந்தனர் என்று நண்பர் கூறியது எனக்கு நினைவுக்கு வருகிறது.
இன்றும் சீனா எப்படி உலகின் நெருக்குதல்களை சமாளித்து கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது என்றால் உள்நாட்டிலேயே பல்வேறு தடைகளை போட்டுத்தான் சமாளித்து வருகிறது. தடைகளை அன்று வேலியாக போட்டால் இன்று டிஜிட்டல் வடிவில் அரசுக்கு பாதகமான அம்சங்களை தவிர்த்து ஆட்சியை நடத்தி தனக்கேற்றபடி நாட்டை வடிவமைத்து வருகிறது சீன அரசு.
கோர்ப்பசேவ் தனது சீர்த்திருத்தங்களை பெரஸ்ட்ரோய்கா, கிளாஸ்னாஸ்ட் என்ற பெயரில் அமல்படுத்தி நாட்டைக் கெடுத்தார். சீனா, தாராள சந்தையை தனக்கேற்ற முறையில் அமல்படுத்தி நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு சென்று வருகிறது. பெர்லின் சுவர் உடைந்தது ஒருவகையில் இடதுசாரி நாடுகள், இரும்புத்திரை நாடுகள் உலகப் பொருளாதாரத்தில் இணைய வழிவகுத்தது. அதற்காகத்தான் அமெரிக்க ராணுவம் உருவாக்கிய ஆர்பா நெட் உதவியது. ஆனால் சீனா இதனையும் தனக்கேற்றபடி பயன்படுத்தி நாட்டையும் தன் கலாசாரத்தையும் காப்பாற்றி வருகிறது.
இணையத்தின் வசதிகளைப் பயன்படுத்தி ஆளும் அரசுக்கு எதிராக யாரும் சுண்டுவிரலைக்கூட தூக்கமுடியாதபடி சட்டங்களை இயற்றி வருகிறது. இன்றைய நிலையில் ஓர் நாடு பிற நாடுகளை சாராமல் இருக்க முடியாது. ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்து இந்தியா தள்ளாடுவது நாம் அறிந்ததே. ஆனால் சீனா, இன்று ஒற்றை கம்யூனிச நாடாக எப்படி வணிகத்தை அமெரிக்காவோடு போர் செய்தும் சிறப்பாக நடத்துகிறது? தனிமைப்படுத்தப்படாமல் தனது வணிகத்தை வளர்க்க அத்தனை தந்திரங்களையும் பயன்படுத்தி வருகிறது. இணையம் என்பதே உலகமயமாக்கலின் முக்கியக்கருவி. இதனை எந்த விதிகளுமின்றி நாட்டில் அனுமதித்த அரசுகள் இதன் பின்விளைவுகளை இன்று போராட்டம், கலவரம், புரட்சி என அனுபவித்து வருகின்றன.
அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ், சீனா, தனது மக்களை சட்டத்தின் பெயரால் அடக்கி ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கி வருகிறது. இது ஏறத்தாழ கிழக்கு ஜெர்மனியில் நடந்து அரசுக்கு ஒப்பானது என்று கூறினார். 1950களில் இருந்தே அமெரிக்கர்கள் சீனா, கம்யூனிச நாடு. நமக்கு இன்றோ நாளையோ பிரச்னை ஏற்படுத்துவார்கள் என பேசி வந்தனர். இன்று பனிப்போர் போல வர்த்தகப் போரை ஏற்படுத்தி உள்ளனர்.
சீனா, இந்த விஷயத்தில் இங்கிலாந்தை பின்பற்றி நடக்கிறது. ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளுக்கு கடன்களைக் கொடு. அந்நாட்டின் உற்பத்தியாளர்களை ஒழித்து நம் நாட்டின் பொருட்களை அங்கு நுழைத்து லாபம் பெறு என செயல்பட்டு வருகின்றனர். நவீன மறுகாலனியாக்கம் முறையை சீனா ஆப்பிரிக்க நாடுகளில் செயல்படுத்தி வருகிறது. இதனால் வர்த்தகப்போரில் சீனாவுக்கு பெரிய இழப்புகள் ஏற்படாது. சீனா தன் பொருட்களுக்கான சந்தையை பல்வேறு நாடுகளில் தயார் செய்துவிட்டது.
சீனாவின் திட்டம் எந்த நாட்டையும் ஒரேயடியாக லபக்குவது அல்ல. அங்குலம் அங்குலமாக அபகரிப்பது. அதற்கு நேரடியாக ஆசியாவில் தடையாக இருப்பது இந்தியா மட்டுமே. இந்தியாவில் சீனா என்று கடற்படைத்தளமோ, ஒப்பந்தம் மூலம் பொருட்களை விற்கிறதோ அன்று இந்தியா சீனாவின் கடன் வலையில் சிக்கும். மேக் இன் இந்தியா சிங்கம் அதன்பிறகு டிராகன் சொன்னதை மட்டுமே செய்து முடிக்கும் ஏவலாளாக மாறிவிடும்.
சீன பத்தி எழுத்தாளர கேரி ஹூவாங்கின் கட்டுரையைத் தழுவியது.
நன்றி - சவுத் சீனா மார்னிங் போஸ்ட்