மாண்டிசோரி முறைக்கு மாறும் அமெரிக்க கல்வி!
தொடக்க கல்விக்கு எகிறும் எதிர்பார்ப்பு!
அமெரிக்க தொழிலதிபரான ஜெஃப் பெசோஸ், ஏழைக் குழந்தைகளின் தொடக்க கல்விக்கு நூறுகோடி ரூபாய் வழங்க உள்ளார்.
இங்கு கூறப்படும் குழந்தைகளின் தொடக்க கல்வி என்பது ப்ரீகேஜி நிலையிலுள்ள குழந்தைகளை உள்ளடக்கியது. தற்போது, அமெரிக்காவில் குழந்தைகளின் தகவல்தொடர்பு, நினைவுத்திறன் ஆகியவற்றை அதிகரிக்கும் செயற்பாடுகளை மேம்படுத்த தொடங்கியுள்ளனர். இதற்காகத்தான் அமெரிக்க தொழிலதிபரான ஜெஃப் பெசோஸ் நிதியுதவி வழங்க முன்வந்திருக்கிறார்.
இச்செயல்முறையில் பொறியியல் பாடநூல்களை படித்து காட்டி மனப்பாடம் செய்யச் சொல்லுவார்களோ என பயப்பட வேண்டாம். மாதுளம்பழத்தை எடுத்து உரித்து அதன் சிவப்பாக உள்ள விதைகளை ஒரு டம்ளரில் போடச்சொல்லுவார்கள். அவ்வளவுதான். இதற்கான குறிப்பை மட்டுமே ஆசிரியர் குழந்தைக்கு கூறுவார். அக்குழந்தை என்ன செய்கிறது என்று கவனித்துக்கொண்டு இருப்பதுதான் வகுப்பில் ஆசிரியரின் பணி.
இதற்கான தேவை என்ன உள்ளது என்று பலரும் நினைக்கலாம். காரணம், காலம்தோறும் வேலைவாய்ப்புகள் மாறி வருகின்றன. இதனால் குழந்தைகளை படங்களைக் கொண்ட புத்தகங்களை அச்சிட்டு வழங்கி படித்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட முடியாது. அதனை மாற்றும் நிலையாக மாண்டிசோரி முறையில் மேற்சொன்ன பழம் உரித்தல் பாடங்களை நடத்துகிறார்கள். இதன்மூலம் குழந்தைகளின் கவனம், பிரச்னைக்கு தீர்வு காணும் திறன் ஆகியவற்றைக் கவனிக்கிறார்கள். அதனை வளர்த்தெடுக்க பல்வேறு பயிற்சிகளையும் வழங்கி வருகிறார்கள். “இந்த முயற்சிகள் சிறிய தொடக்கம்தான். இதற்கான விளைவுகளை நாம் தாமதமாகத்தான் அறியமுடியும்” என்கிறார் வர்ஜீனியா பல்கலைக்கழக மனிதவளத்துறை இயக்குநரான ராபர்ட் சி பியான்டா.
இசையை இசைத்து அதற்கேற்ப கால்களை அசைப்பது, மாதுளையின் விதைகளை சரியான இனம் கண்டு தனியே பிரிப்பது போன்ற சோதனைகள் குழந்தைகளின் சுய ஒழுங்குக்கு முக்கியம் என்கிறார்கள் மாண்டிசோரி ஆசிரியர்கள். இம்முறையில் தானாகவே கற்பதும், அதனை குறைந்த நேரத்தில் நினைவுகூர்வதையும் குழந்தைகளுக்குப் பழக்குகிறார்கள். ஒரேகான் பல்கலைக்கழகத்தில் அரசு நிதியுதவியுடன் செய்த ஆராய்ச்சியில் ஆறு விளையாட்டுகளை உருவாக்கினர். இவற்றை 276 குழந்தைகளிடம் வாரம் இருமுறை விளையாட்டுகளின் வழியாக மொழித்திறன்களை கற்பித்தனர். பின்னர் ஆய்வு செய்ததில் அவர்களின் கணிதம், மொழித்திறன் மேம்பட்டிருந்தது. 1960 ஆம் ஆண்டிலேயே குழந்தைகளின் மொழித்திறனை மேம்படுத்துவதற்கான ஆய்வுகள் தொடங்கிவிட்டன.
அதில் மிச்சிகனில் ப்ரீஸ்கூல் பெர்ரி எனும் திட்டம் முக்கியமானது. இது இன்றுவரையும் சில பள்ளிகளில் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டு வருகிறது. எதிர்காலத்திற்கு ஏற்றபடி குழந்தைகளுக்கான கல்வியை விளையாட்டின் மூலம் கற்றுத்தருவது அவசியமான ஒன்று என்பதையே கல்வி பற்றிய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
தகவல்: Scientific American
நன்றி - தினமலர் பட்டம்