மயிலாப்பூர் டைம்ஸ் - பிச்சைக்கு இரங்கேல்!


beg please GIF by Lil Dicky
giphy.com





பிச்சை கேட்பதை வள்ளுவர் மட்டுமல்ல, சங்க காலம் முதற்கொண்டு தவறு என்றுதான் கூறி வந்திருக்கிறார்கள். பிச்சையை எப்படி கூறுகிறார்கள் என்றால் தங்கம், வெள்ளி நாணயம் மட்டுமல்ல, ஒருவர் வளர்க்கும் கால்நடைகளின் தாகத்திற்கு தண்ணீர் கேட்பது கூட தவறு என்று வரையறுக்கிறார்கள். நமக்கு வந்து சேர்பவர்கள் வேறு ரகமாக இருக்கிறார்கள்.

பள்ளி தொடங்கி வேலை பார்க்கும் இடம் வரை நான் பெரும்பாலான இடங்களில் இளிச்சவாயனாகவே இருந்திருக்கிறேன். இதற்கு அர்த்தம் நான் பொருட்களை ஒருவருக்கு கொடுத்துவிடுகிறேன் என்பதல்ல. அதை தெரிந்தே செய்கிறேன் என்பதுதான்.

 இன்று பாருங்கள். எங்கள் அலுவலக வளாகத்தில் உள்ள வாடிக்கையான ஓட்டுநர் எப்போதும் பதினொரு மணிக்கு அங்குள்ள திண்ணையை யாருக்கும் தரமாட்டேன் என கிடையைப் போட்டு படுத்துவிடுவார். அவருக்கு அடுத்து இருக்கும் இடத்தில் பெண் நாய் ஒன்று படுத்திருக்கும். இல்லையென்றால்  இங்குள்ள இழுத்து மூடப்பட்ட சிறப்பு அங்காடிக்கு காவல் காக்கும் வெள்ளை நிற நாய் ஒன்று படுத்துவிடும்.

பெரும்பாலும் திண்ணைக்கு இவர்கள்தான் ஓனர்கள் போல. எனவே புதிதாக வந்து நின்ற டாடா டியாகோ கார் அருகே இருந்த தூண் அருகே உட்கார்ந்து, வாங்கி வந்த  குங்குமத்தை புரட்டிப்பார்த்துக் கொண்டிருந்தேன். பசிக்கும்ல, அதற்காக கடலை மிட்டாய் கூடவே இருந்தது.

பக்கத்தில் யாரோ வந்து நின்றதைப் பார்த்தேன். முதலில் நிழலை, பின்னர் உருவத்தை. கட்டடக் காவல்காரர். கார் டிரைவரா,?பத்திரிக்கையில் வேலை பார்க்கிறேன் என்றேன்.

அவருக்கு புரிந்ததா என்று தெரியவில்லை. ஏனோ முகத்தில்  குழப்பமாக என்னைப் பார்த்தார். எனக்கு நகரில் உள்ள முகங்களை பார்த்தாலே எரிச்சலாக வரும். காசு வேண்டும் என்பதைத்தான் இப்படி முகத்தை வைத்துக்கொண்டு மௌனமாக சொல்கிறாரா என்று நினைத்தபடி வாங்கி வந்த குங்குமத்தை படித்துக்கொண்டிருந்தேன். அவர் நகரவேயில்லை. ஒரு இன்ச் கூட நகராமல் என்னையே பார்த்துக்கொண்டு இருப்பதை உணர்ந்தேன். இதுதான் எனக்கு பிடிக்காத ஒன்று. தனியாக இருக்கவேண்டும் என்றுதான் ஓப்பன் ஆபீஸ் செட்டப்பை கடந்து கீழே வந்து நிற்கிறோம். எரிச்சலோடு பார்த்தேன்.

அவர் அப்போதும் அருகிலேயே நின்றார். எனக்கு சங்கடமாகிவிட்டது. என்னண்ணே? என்றேன்.

எந்த பத்திரிக்கை ?

நான் சொன்னது உங்களுக்கு புரிஞ்சுச்சா இல்லையா? அதான் பத்திரிக்கையில் வேலை பார்க்கிறேன்னு சொன்னேனே?

நீங்க சொல்ற பத்திரிக்கையை நான் படிச்சதே இல்லை என்ற பதில் என்னை யோசிக்க வைத்தது.
 முகத்தில் நான்கு நாள் தாடி, என்னை வேறுவிதமாக யோசிக்க வைத்தது. ஒருவேளை நைட் அடிச்ச சரக்கின் ஹேங்ஓவரில் இங்கு வந்து கடலை போடுகிறாரோ என்று நினைத்தேன்.

 இதற்கு முன்பு இங்கு நிழலுக்கு படுக்க வந்தவர், என் கன்னத்தைப் பார்த்து இந்தப் பிரச்னைக்கு எனத் தொடங்கியதும், நான் எழுந்து வேறு பக்கம் போய்விட்டேன். கஷ்டம்தான். ஆனால் எனக்கு விலையில்லா அட்வைஸ்கள் எப்போதும் தேவைப்படுவதில்லை.

இதேபோல்தான் இவரை நினைத்தேன். உட்கார இடம் வேண்டுமா? வாங்கித்தின்ன பணம் வேண்டுமா? என்ன சுத்தி வளைத்து சொல்ல விரும்புகிறார் என தெரிந்துகொள்ள நினைத்தேன். புக்கு படிச்சிட்டு தர்றேன் என இறுதியாக நோக்கத்தை சொல்லிவிட்டார்.

இனி இப்படி கிட்ட வந்து நிக்காதீங்க. புக்க நீங்களே வெச்சிக்கங்க என்று கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். பிச்சையில் இது ஒரு வகை. தனக்கு வேண்டியது கைக்கு வரும்வரை அடுத்தவரை டார்ச்சர் செய்வது. அந்த வளாகத்திலேயே நூலகம் இருக்கிறது. இருக்கிற புத்தகங்களை எடுத்து படித்தால் முடிந்தது. ஆனால் செய்யமாட்டார்கள்.

ஆனால் அனைவரும் இதேபோல் இருக்கமாட்டார்கள். தர்ம பிச்சை வேறு ரகமாக இருக்கும். கே.கே.நகரில் 12ஜி பஸ்ஸில் வரும் போது கிளை நூலகம் அருகே ஒருவர் பஸ்ஸை நிறுத்தி ஏறுவார். அந்த பஸ்ஸில் அவர் வாடிக்கையாக வருவார் போல. எனக்கு அது தெரியாது. பின்புறம் படிக்கட்டில் டிக்கெட் வாங்க வசதியாக ஏறுவதுதானே வழக்கம். அவர் முன்புறம் ஏறினார். சரி அது அவரவர் இஷ்டம் போல என்று நினைத்தேன். அப்போது நான் பஸ்சில் சில்லறை பிரச்னையால் மாத பாஸ் முறைக்கு மாறியிருந்தேன்.

கிளை நூலகம் அருகே ஏறியவர், ஒரு நொடி கூட தாமதிக்கவில்லை. பத்து ரூபா குடேம்பா, பத்து ரூபாவாம்மா என ஒவ்வொரு சீட்டாக கெஞ்சி பிச்சை எடுக்க தொடங்கினார். ஒரு வாரத்திற்கு முன்பு வெண்மையாக இருந்திருக்கும் சாத்தியம் கொண்ட  ஆடைகளை அணிந்திருந்தார்.  நான் தரவில்லை. இல்லை என்று சொல்லிவிட்டேன். ஆனால் சீட் தராமல் இருக்க முடியாது அல்லவா?  என் அருகிலேயே உட்கார்ந்துகொண்டார்.

மேற்கு மாம்பலம் இந்தியன் வங்கி அருகே இறங்கிக்கொண்டார். அதுவரையில் எப்படி உட்கார்ந்திருந்தார் தெரியுமா? இடித்துக்கொண்டும், கொண்டு வந்திருந்த பையை ஆராய்ந்துகொண்டும் இருந்தார். இதே சமாச்சாரம் பின்னர் அங்கிருந்த இரண்டரை ஆண்டுகளில் பத்துக்கும் மேற்பட்ட முறைகளில் நடந்தது. சில நடத்துநர்கள் அவரை ஏறாதே என்று தடுப்பார்கள். அப்போது ஏன் தடுக்குறீங்க என்று சண்டை போட்டு படிக்கட்டில் ஏறுவார். அப்புறம் எப்போதும் போல பத்துரூபா தர்மம் பஜனை தொடங்கும். இதேபாணியில் இன்னொருவர் கண் தெரியாது என புலம்பியபடி ஏறினார். அவரும் இதேபோலத்தான் டிக்கெட் பிச்சை கேட்டு, யாரோ ஒருவர் அவரது டிக்கெட் காசைக் கொடுக்க வலுவாக சீட்டில் உட்கார்ந்துகொண்டார்.

பின்னர் அங்கிருந்து பெண்களிடம் சாப்பாட்டிற்கான காசு வேட்டையைத் தொடங்க அவர்கள் எரிச்சலானார்கள். அந்த பஸ்சில் வருபவர்கள் அத்தனை பேரும் சின்ன சின்ன வேலைகளை செய்து சம்பாதிப்பவர்கள். ஆபீஸ் வேலை போல செய்பவர்கள் மிகச்சிலர்தானே. பேசாம வா என்று சொல்லிவிட்டு அவர்களின் கதைகளுக்கும் மூழ்கி விட்டார்கள். இந்த பிச்சைக்காரர் விடவே இல்லை. தனது கண் போனது பற்றி காழ்ப்புணர்வாக கேட்பவர் கண்ணீர் விடும்படி ஏதோவொன்றை பேசிக்கொண்டே வந்தார். எப்போது கடைசி சீட்டில் உட்காருபவன் என்பதால் எனக்கு இரைச்சல் தாங்கமுடியவில்லை. பின் அவரே ஓரிடம் சொல்லி அங்கேயே இறங்கிக்கொண்டார்.

இப்போது கே.கே. நகரில் வாழவில்லை. மின் ரயிலிலும் பிச்சைக்கார ர்களை பார்த்தாயிற்று என்ன இனி என நண்பரைப் பார்க்க நாகாத்தம்மன் கோவில் அருகே இறங்கி நடந்தேன். சரியாக நண்பரின் அறையை சமீபிப்பதற்கு நூறு மீட்டர் இருக்கும். நீலநிற சட்டை அணிந்து ஒருவர் வெளியே வந்தார். கதவை பூட்டியவர் என்னை நிமிர்ந்து பார்த்தார். அதே பத்து ரூபா தர்மம் ஆள்தான். யோசிக்கவேயில்லை. ஒரு இருபது ரூபா குடேம்ப்பா என்றவரின் முகத்தைப் பார்த்தேன். அதில் எந்த உணர்ச்சிகளும் இல்லை. கைகூப்பி கேட்டவர், பின்னர்  விடுவிடுவென நடந்து போய்க்கொண்டிருந்தார்.

இந்தியாவின் வளர்ச்சி கூட 5 ட்ரில்லியன் டாலர்கள் என சொல்லுகிறார்கள். பிச்சை கேட்பவர் போல பத்து ரூபாயிலிருந்து இருபது ரூபாயாக இப்படித்தான் வளருமோ? 

கா.சி. வின்சென்ட்