வண்டி ஸ்டார்ட்டே ஆகலீங்க- ட்ரைவ் படம் எப்படி?
ட்ரைவ்
நெட்ஃபிளிக்ஸ் திரைப்படம்
இயக்கம் - தருன் மன்சுக்கானி
இசை -பலர்
ஒளிப்பதிவு - விஷால் சின்கா
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் என்ற படத்தை இந்தி வசனங்கள் எழுதி படுமோசமாக எடுத்தால் எப்படியிருக்கும். ட்ரைவ் படம் மாதிரியேதான் இருக்கும்.
படத்தின் கதை எந்த ஆர்வத்தையும் ஏற்படுத்தவில்லை. நடித்தவர்கள் அனைவரும் விடுமுறை ஆர்வத்தில் இருப்பது போலவே இருக்கிறது. அவ்வளவு ரிலாக்சாக நடித்திருக்கிறார்கள். அதிலும் சுசாந்திற்கு வரும் சிரிப்பு, உண்மையில் அதை காசுகொடுத்து பார்ப்பவர்களை பார்த்து சிரிப்பது போலவே இருந்தது. படத்தை பார்த்து முடித்தவுடன் அது உறுதியாகிவிட்டது.
வேகமாக செல்ல வேண்டிய படம் படுமோசமாக திரைக்கதை, சுமார் நடிகர்களால் சீரியல் லெவலுக்கு கீழிறங்கி ஒருகட்டத்தில் இது படமாக, கல்யாண வீடியோவா என டவுட் ஆகிறது.
உண்மையில் இதனை எப்படி படமாக நம்பிக்கையுடன் தருன் எடுத்தார் என்று எனக்குப் புரியவில்லை. இவ்வளவு ஸ்லோவான படத்தை நெட்ஃபிளிக்ஸ் தன்னுடைய பேனரில் வெளியிட்டது திருஷ்டி பரிகாரம் என்றுதான் சொல்ல வேண்டும்.
படத்தின் ஒரே ஆறுதல், சப்னா பாபியின் அழகு. நாயகி ஜாக்குலினை விட அழகாக இருக்கிறார். நடிக்கவும் முயற்சிக்கிறார். ஜாக்குலின் முகத்தில் வஞ்சத்தை வன்மத்தை கொண்டு வரவேண்டும். மேடமுக்கு புன்னகையை தவிர வேறு எதுவும் வரவில்லை. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் மேம்.
சுசாந்த் சிங் ராஜ்புத் இந்த படத்தில் நடிப்பதை விட நிறைய சிரித்திருக்கிறார். அவருக்கு இயக்குநர் என்ன சொல்லிக் கொடுத்தாரோ, பக் பக்கென அத்தனை சிச்சுவேஷன்களுக்கும் சிரித்தே சூழலின் தீவிரத்தை காலி செய்கிறார்.
ராஷ்டிரபதி பவனில் உள்ள தங்கத்தை திருடவேண்டும். அதற்கு பிளான் போடும் காட்சியை பார்க்கவேண்டுமே சாமி. வெறுத்துவிடுவீர்கள். அப்படியொரு பிளான்.
பொம்மன் இரானி, பங்கஜ் திரிபாதி எல்லாம் எனக்கென்ன வந்துச்சு என்பதுபோல திரையில் வந்துவிட்டு போகிறார்கள். அவ்வளவுதான் செய்ய முடியும்?
பெண்கள் விளையாடும் கிரிக்கெட்டில் இரு அணியும் சிரித்துக்கொண்டே விளையாடுவார்கள். க்ரைம் கதையில் நடப்பதும் அதேதான். குற்றவாளிகள் காரில் ரேஸ் போகிறார்கள். சுமார் திட்டம் போட்டு திருடுகிறார்கள். அதைக் கண்டுபிடிக்க உளவுத்துறை தடுமாறுகிறது. இறுதியில் ராஷ்டிரபதி பவனில் கைவைக்கிறார்கள். அதிலும் போலீஸ்துறை தோல்வியைத் தழுவுகிறது. ஹாயாக தப்பிக்கிறவர்களை பேங்க் ஆப் இங்கிலாந்து அலுவலகத்தில் பிடிக்கிறார்கள்.
என்ன கதையோ, இயக்குநர் தோஸ்தானா படம் எடுத்தவர். அதுபோல தெரிந்த விஷயத்தை படம் எடுத்திருக்கலாம். தகவல்கள், படமாக்கப்பட்ட விதம் என நிறைய கற்றுக்கொண்டிருப்பார். அடுத்த முறை உருப்படியாக படம் எடுக்க வாய்ப்பு உள்ளது.
ட்ரைவ் - வண்டி ஸ்டார்ட்டே ஆகலீங்க
கோமாளிமேடை டீம்