பயம் ஏற்பட்டால் என்னாகும் தெரியுமா?
பயப்படும்போது உடலுக்குள் என்ன நடக்கிறது?
நாம் பிறந்த தில் இருந்து நம்மை அடையாளம் காட்டுவதாக இருப்பது ஒலிதான். அது அழுகையாக, வீறிடலாக முதலில் இருக்கிறது. பின்னர், அது சூழலைப் பொறுத்து மாறுபட்டு ஏற்படுகிறது. ஆண்கள் பெரும்பாலும் உடைந்து அழுவது கிடையாது. பெண்கள் அழாமல் இருக்க வைப்பது சிரமம்.
பொதுவாக அபாயத்தை பார்த்து ஏற்படும் அலறல் சத்தம் மூளையிலுள்ள அமிக்டலா பகுதியை உசுப்புகிறது. இதன் விளைவாக உடல் முழுக்க அந்த அபாயத்திலிருந்து தப்ப வேண்டும் என்று நமக்கு உணர்த்துகிறது. இதனை எப்படி உணர்வீர்கள்? பாம்பு, தேள் போன்ற கொல்லும் அல்லது கடுமையாக வலி ஏற்படுத்து உயிரிகளை அருகில் பார்த்தால் உடல் தன்னிச்சையாக தன்னை பாதுகாத்துக்கொள்ள நினைக்கும். அப்போது இதயத்துடிப்பு அதிகரிக்கும். உங்களுக்கு ஒரே விஷயம்தான் தோன்றும். அந்த இடத்திலிருந்து காயம்படாமல் நாம் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அது.
இப்போது உடலின் உறுப்புகளுக்குள் ஏற்படும் மாற்றம் பற்றி பார்ப்போம்.
கண்கள்
கண் பார்வையின் திறன் கண்ணாடி போட்டிருந்தாலும் அதிக விழிப்பாக மாறும். உயிர் பிழைக்க வேண்டுமே? இதனால் நீங்கள் பார்க்காத கவனிக்காத விஷயங்களை கண்கள் பார்த்து உணரும். பொதுவாக நாம் புதிய இடங்களுக்குச் செல்லும்போது இயல்பாகவே நமது கண்கள் அங்கிருந்து வெளியேறும் வழிகளை கண்காணிக்கும். மூளையில் பதித்துக்கொள்ளும். இவை ஆபத்தில் உதவும் என்பதால் மூளை தன்னிச்ச்சையாக இச்செயல்களை செய்கிறது.
தசைகள்
அர்னால்டு உடல் இல்லாத ரகுவரன்களுக்கும் ஆபத்தில் தசைகள் புடைத்து படையப்பா ரஜினியாக ஏதோவொன்று ஆகும் என வைத்துக்கொள்ளுங்களேன். மூச்சு விடுவது அதிகரிக்கும். இதன் விளைவாக தசைகளுக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கும். அதன் இயக்கத்திறன் கூடும்.
ஹார்மோன்
அட்ரினலின் சுரப்பு அதிகரிப்பதால் உடலில் ரத்த ஓட்டம் மின்னல் வேகம் எடுக்கும். இதனால் நெஞ்சில், வயிற்றில் சூடான துடிப்பை உணர்வீர்கள். ரத்தம் முக்கியமான இடங்களுக்கு அனுப்பப்படுவதால் பிற இடங்களில் குளிர் ஏற்பட்டது போன்ற உணர்வு ஏற்படும்.
இதற்கடுத்து நடக்கும் நிகழ்ச்சிதான் முக்கியமானது. அனைத்திற்கும் ஆற்றல்தானே அடிப்படை. எனவே உடலின் கல்லீரல், கிளைகோஜென்னை எரித்து குளுக்கோஸாக சடுதியில் மாற்றும். இதனால் உடலுக்கு ஆபத்தை எதிர்கொள்ளும் எரிபொருள் கிடைக்கும்.
உடலின் இத்தனை இயக்கங்கள் நடக்கும்போது இஞ்சின் சூடாகுமே? அதற்குத்தான் வியர்வை உதவுகிறது. வியர்வை வருவதே உடலின் சூட்டைத் தணிக்கத்தான்.
நன்றி - சைக்காலஜி டுடே