ஏழை மக்களின் வாழ்நிலையும், பொருளாதாரமும் - அபிஜித், எஸ்தர் டஃப்லோ
புத்தக வாசிப்பு
புவர் எகனாமிக்ஸ்
அபிஜித் பானர்ஜி - எஸ்தர் டஃப்லோ
ப.320
வெளியீடு 2011
இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க பல்வேறு நலத்திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. ஐந்தாண்டு காலத்திற்குள், சில அரசுகள் மட்டுமே காகிதத்தில் மசோதாவாக இருக்கும் திட்டங்கள் மக்களுக்கு பயன்படும்படி யோசிக்கின்றன. ஏன் சில திட்டங்கள் மட்டும் சிறப்பான பயன்களைத் தருகின்றன, நிலப்பரப்பு ரீதியாக என்ன பிரச்னைகளை இருக்கின்றன, உணவை விட மக்கள் பொழுதுபோக்குக்கு செலவிட தயாராக இருப்பது ஏன்? வறுமை என்ற நிலை தொடர்ச்சியாக மாறாமல் இருப்பது எப்படி, அரசு உண்மையில் இதற்காக உழைக்கிறதா? அரசு அமைப்புகளின் ஊராட்சி பங்களிப்பு மக்களுக்கு உதவுகிறதா என பல்வேறு கேள்விகளை அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ இந்த நூலில் எழுப்பியிருக்கிறார்கள்.
அரசு வேலைதான் என அலட்சியமாக காலையில் எட்டு மணிக்கு வரவேண்டிய வேலைக்கு பத்து மணிக்கு வருவது என மருத்துவப் பணியாளர்கள் உதய்பூரில் வேலை செய்கின்றனர். இதனால் அங்குள்ள மக்கள் அரசு சுகாதார நிலையத்திற்கு வருவதே இல்லை. பெண் பணியாளர்கள் எப்போது வருகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதே தெரியாத நிலையில் அங்கு மாற்றங்கள் சாத்தியமில்லை என்பதை அபிஜித் பானர்ஜி பிரமாதமாக விளக்கியிருக்கிறார்.
மக்களின் பயன்பாட்டிற்கான தொகையை அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தும் திட்டத்தை இவர் வரவேற்கிறார். ஊழல், லஞ்சம் ஒழிந்தது என பல்வேறு எடுத்துக்காட்டுகளை காட்டுகிறார். கென்யா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் செய்த ஆர்சிடி வகை ஆய்வுகள் மூலம் அதனை விளக்கியிருக்கிறார். ஏழ்மை என்பது என்ன? அரசின் பங்கு, நிலப்பரப்பு, உலகமயமாக்கம், அதன் விளைவுகள், வணிகம், உற்பத்தி ஆகியவை பற்றிய சிந்தனைகளை அபிஜித் பானர்ஜி குழுவினர் தூண்டியுள்ளனர்.
இந்தியா மட்டுமல்ல 88க்கும் மேற்பட்ட நாடுகளில் செய்த சோதனைகளின் அடிப்படையில் அபிஜித் கூறும் உண்மை நம் நெஞ்சை வேதனைப்படுத்துகிறது.
நன்றி - தோழர் பாலபாரதி