நேர்கோட்டில் செல்லும் ஆணவக்கொலை படம் - தொரசானி படம் எப்படி?
தொரசானி - தெலுங்கு
இயக்குநர் கேவிஆர் மகேந்திரா
இசை - பிரசாந்த் விகாரி
நிலக்கிழாரின் பெண்ணை, அவரின் நிலத்தில் வேலை செய்யும் ஏழை விவசாயி மகன் காதலித்தால்.... அதுதான் படத்தின் கதை. படத்தின் இடத்தை எண்பதுக்கு நகர்த்தி தெலுங்கானாவுக்கு கேமராவை நகர்த்தி விளக்குகளை செட் செய்தால் சூப்பரான விருது கிடைக்கும் ஆணவக்கொலை படம் ரெடி. அப்படித்தான் நினைத்திருக்கிறார் இயக்குநர்.
இந்த கதை லைனை சொன்னதும் உங்கள் தலைக்கு மேல் விளக்கு எரிந்து மணிச்சத்தம் கேட்டால் படத்தின் முடிவு உங்களுக்கு தெரிந்துவிட்டது என்று அர்த்தம்.
பிளஸ் பாய்ன்ட்
ஜாதிவெறி, ஆணவக்கொலைக்கு எதிரான படம் என்று இயக்குநர் சொல்லியிருக்கிறார். ஆனால் படம் முழுக்க முதலாளி, எஜமான் என ஊர் மக்கள் காட்டும் விசுவாசத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடித்த வினய் வர்மாவுக்கு நாமும் வணக்கும் வைக்கும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறோம். தேவகி பாத்திரத்தில் நடித்த சிவாத்மிகா மட்டுமே படத்தில் தேறும் ஒரே ஆள். எதைப் பற்றியும் கவலைப்படாமல் காதலித்து காதலின் உயிரைக் காப்பாற்ற அவர் போலீஸ் ஸ்டேஷனில் பதறும் பதற்றம்.. கைதட்ட வைக்கிறது. பிரசாந்த் விகாரியின் இசை சற்றே ரகுமான் போல தோன்றினாலும் சின்மயி ஸ்ரீபதாவின் குரலில் தேன் குழல் சாப்பிட்டது போல பாடல் இருக்கிறது.
மைனஸ் பக்கம்
ஆனந்த் தேவர்கொண்டா... ராஜூ என்ற கதாபாத்திரத்தில் மன முதிர்ச்சியற்றவர் போலவே வருகிறார். இவருடைய கேரக்டரை எப்படி சொல்வது? புத்திசாலியா, முட்டாளா என்ற குழப்பம் இயக்குநர் மகேந்திராவுக்கு இருந்திருக்கிறது. அதே குழப்பத்தை அவர் பார்வையாளர்களுக்கு தள்ளிவிட்டிருக்கிறார்.
உதாரணத்திற்கு... நக்சலைட்டுகள் ஊர்மக்களை திரட்டி கூட்டம் போட்டு நாம் எதற்கு போராடுகிறோம் என தொண்டைத் தண்ணி வற்ற கத்துகிறார்கள். ராஜூ முதலாளிக்கு சலாம் போட்டு வயிறு வளர்க்கும் பிராமணரிடம், நக்சலைட்டுகள் நல்லவர்களா என கேள்வி கேட்கிறார். இது அவரின் அறிவுக்கு சான்று.
கிஷோர்தான் கதைய நடத்திப்போகிறார். ஓட்டுதாடியை சகித்தாலும் காதலுக்காக முப்பது ஆண்டுகள் சிறையில் இருக்கும் கதை, அடப்பாவி சொல்ல வைக்கிறது. நல்ல நடிகனை எப்படி வீண்டித்திருக்கிறார்கள் என்று படம் பார்த்தால் புரிந்துகொள்வீர்கள். நக்சல் தத்துவமும், சாதி மறுப்பு திருமணமும் ஒன்றா? தொரசானி தலைப்புக்கு மேல் சிவப்புத்துணி பறக்கும். அதற்கான விளக்கமும் படத்தில் உண்டு. படத்தைப் பார்த்து நெகிழ்ச்சி ஆகிறீர்களா, இப்படி ஒரு படமா என நெருப்பாகிறீர்களோ அது உங்கள் விருப்பம்.
வீடியோ பாடல் கேட்டாலே போதும் என்பது எங்கள் கருத்து.
கோமாளிமேடை டீம்