வழுக்கையால் அவமானமா? பாலா சொல்லும் பாடம் அதிரடி!
பாலா
இயக்கம் - அமர் கௌசிக்
கதை - நீரன் பட், பாவெல் பட்டாச்சார்ஜி
இசை சச்சின் ஜிகார், பிராக், ஜானி
ஒளிப்பதிவு அனுஜ் ராகேஷ் தவான்
இளம் வயதிலிருந்து ஷாருக்கான் ரசிகராக உள்ளவனுக்கு இருபத்தைந்து வயதில் முடியெல்லாம் கொட்டி வழுக்கையாக மாறினால் என்னாகும்? அதேதான். அவமானம், வேலையில் பதவியுயர்வு சிக்கல், குடும்ப உறவுகளிலும் விரிசல். அத்தனையையும் கடந்து அவன் எழுந்து நிற்பதுதான் கதை. அதாவது தன் குறையை தானே உணர்ந்து ஏற்கிறான்.
பிளஸ்
இதுபோன்ற ஸ்கிரிப்டை செலக்ட் செய்து நடித்த ஆயுஷ்மான் குரானா. பிரமாதமாக நடித்திருக்கிறார் என்பதை விட கதையை புரிந்துகொண்டு நடித்திருக்கிறார். படம் பார்த்த நண்பர், இறுதியில் தன் விக்கை கழற்றி கண்களைத் துடைக்கும்போது அவரின் கண்களும் கலங்கிவிட்டது. அந்தளவு பார்வையாளர்களை தன் நடிப்போடு இணைய வைத்துவிடுகிறார். பூமி பட்னாகரும் கருப்பு கலரில் சில காட்சிகளில் அய்யே சொல்ல வைத்தாலும் நடிப்பில் திடமாக காலூன்றி நிற்கிறார்.
மைனஸ்
டிக் டொக் பெண்ணாக வரும் யாமி கௌதம். அவரின் குணம், எதிர்பார்ப்பு என்பதை ஆயுஷ்மான் புரிந்துகொண்டாலும் அவர் ஆயுஷ்மானை பிரியும் முடிவை எப்படி எடுக்கிறார் என்பது குழப்பமாகவே இருக்கிறது. மற்றபடி முழுப்படத்தையும் தோளில் சுமப்பவர் ஆயுஷ்மான்தான்.
தனது உடம்பை, தனது வழுக்கையை அவர் ஏற்க தொடங்கியபோது மாற்றங்கள் நடக்கின்றன. என்ன தனக்கு வழிகாட்டுபவர்களை நாம் சொந்தமாக்கிக்கொள்ள நினைப்போம். ஆயுஷ்மானும் அதையே செய்கிறார். அப்படி இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பெண் என்றால் காதலி, மனைவி என்ற வகையில் இல்லாமல் தோழி பிரிவிலும் சில பெண்கள் இருந்தால்தான் என்ன?
அட்டகாசமான நடிகராக ஆயுஷ்மான் உருவாகி வருகிறார். நாளை அவர் நட்சத்திரமாக மாறலாம். ஆனால் அவர் நடித்த படங்கள் என்றால் அதில் பாலாவும் முக்கியமான படமாக இடம்பெறும்.
கோமாளிமேடை டீம்