பால் மனிதர் குரியன்! - வர்க்கீஸ் குரியனின் சாதனை ’அமுல்!’
வெண்மைப்புரட்சியின் தந்தை
வர்க்கீஸ் குரியன் பிறந்த தினம் இன்று. இன்று பிராந்திய பொருளாதார ஒப்பந்தம் உள்நாட்டு வேளாண்துறையை, பால்துறையை பாதிக்கும் என்று கூறி அதனை தடுக்கின்றனர். இதேபோன்ற சிக்கலை அன்று அமுலின் தலைவரான வர்க்கீஸ் குரியன் சந்தித்தார். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்திலிருந்தும், ஐரோப்பாவிலிருந்தும் பால் பொருட்கள் இந்தியாவில் இறக்குமதியாகிக் கொண்டிருந்தன. இவை அரசுக்கு உதவினாலும் விவசாயிகளுக்கும் பால் உற்பத்தியாளர்களுக்கும் எந்த ஆதரவையும் வழங்கவில்லை.
காங்கிரசின் திரிபுவன்தாஸ் படேலின் ஆதரவில் கைரா மாவட்டத்தில் பல்வேறு ஊக்கமூட்டும் செயல்பாடுகளை குரியன் செய்தார். அனைத்தும் தன்னுடைய மேதமையை உலகிற்கு சொல்வது அல்ல. மக்களுக்கு உதவுவதாகவே அமைந்திருந்தன. கைரா பால் உற்பத்தியாளர் சங்கத்தை திரிபுவன்தாஸ் படேலின் ஆதரவுடன் வர்கீஸ் குரியன் உருவாக்கினார். இன்று அமுல் உலகின் முக்கியமான பால் பொருட்கள் விற்பனை நிறுவனமான உள்ளது. தனியார் நிறுவனம் போல செயல்பட்டாலும் கூட்டுறவு அமைப்பாக மக்களின் நலன்களுக்கானதாக உள்ளது.
1964ஆம் ஆண்டு, பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி கைரா மாவட்டத்திலுள்ள தீவனம் தயாரிக்கும் கட்டட த்தை திறந்து வைக்க வருகை தந்தார். இரவு அங்கு தங்கியிருந்து விவசாயிகளிடம் பேசி அவர்களின் தேவை என்னவென்று அறிந்துகொண்டார். அடுத்தநாள், தேசிய பால் மேம்பாட்டுத்துறை போர்டு தொடங்குவதற்கான ஆணையை வெளியிட்டார். அரசின் ஆதரவு கிடைத்தவுடன் பதினெட்டு மாவட்டங்களிலும் தொழில்திறன் கொண்ட இளைஞர்களைத் தேர்ந்தெடுத்த பணிபுரிய அனுப்பி வைத்தார். இதன்விளைவாக குரியன் தான் கண்ட கனவை நிஜமாக்கினார். அனைத்து விவசாய மக்களுக்கும் தன்னிறைவான வாழ்க்கையைத்தான் அவர் அமைத்து தர நினைத்தார். அதனை சாதித்தார்.
இன்று இந்தியாவில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பால் கூட்டுறவு சங்கங்கள் செயற்பட்டு வருகின்றன. கோடிக்கணக்கான விவசாயிகள் இதில் உறுப்பினர்களாக இருந்த பயன்பெற்று வருகின்றனர். கால்நடை வளர்ப்பு மூலம் கிடைக்கும் பணம் கிராமங்களில் முக்கியமான வருவாயும் கூடத்தான். நியூசிலாந்தில் உள்ள கூட்டுறவு சங்க சட்டங்களைப் போல உருவாக்குவது குரியன் எண்ணம். ஆனால் அதனை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. அதற்குள்ளாகவே அரசியல்வாதிகள், அதிகாரிகள் என கூட்டுறவு நிறுவனத்திற்குள் தனி ராஜாங்கம் நடத்தத் தொடங்கிவிட்டனர். அவரது இறுதிக்காலத்தில் தன்னுடைய அடையாளம் என்பது கார் என்பதாக எப்படி மாறியது என நகைச்சுவையாக குறிப்பிட்டிருப்பார் குரியன்.
இனி எதிர்காலத்தில் கூட்டுறவு அமைப்புகள் பல்வேறு நாடுகளில் போட்டியை எதிர்கொள்ளும் கட்டாயம் ஏற்படும். அப்போது கூட்டுறவு அமைப்பின் இயக்குநர்கள் நினைவு கொள்ள வேண்டியது ஒன்றுதான். யாருக்காக வேலை செய்கிறோம், நமது நோக்கம் என்ன என்பதுதான். இதில் குரியன் தெளிவாக இருந்தார். மக்களுக்கு பயன் சென்று சேர்வதற்காக அரசியல்ரீதியாக ஜெகஜீவன் ராம் போன்றவர்களை கூட விரோதித்துக்கொள்ள தயங்காத மனிதர் குரியன்.
நன்மனிதரின் நினைவைப் போற்றுவோம்.