லைட்டாக பிரச்னைகளை அணுகினால் - மேக்கிங் இந்தியா ஆசம்!
![Image result for making india awesome](https://d1u4oo4rb13yy8.cloudfront.net/24d8508b-54bd-4d37-b37e-48122f5a31c8.jpg)
மேக்கிங் இந்தியா ஆசம்
சேட்டன் பகத்
ரூபா
ரூ.160
இந்தியாவில் இல்லாத பிரச்னைகளே இல்லை. சாதி, மதம், இருக்கிறவன், இல்லாதவன், ரூபாய் சரிவு, விலைவாசி உயர்வு, சாலைவசதி, பெண்களின் கல்வியின்மை, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாமை, ஊர்களுக்கு இடையே தீண்டாமைச்சுவர் என பேசிக்கொண்டே போகலாம்.
சேட்டன் பகத் இந்த நூலில் எடுத்துக்கொண்டு பேசுவது அனைத்துமே ஆங்கில ஊடகங்களில் டேபிளைச் சுற்றி உட்கார்ந்து விவாதிப்பார்களே அந்த ரக மேட்டர்கள்தான். அதனால் மனம் பதறி பிபி எகிறி, வாசிக்க வேண்டியதில்லை. லைட்டாக வாசியுங்கள். அவ்வளவுதான். இதில் எப்போதும்போல அவர் இளைஞர்களுக்கு முக்கிய பிரச்னைகளாக முன்வைக்கும் ஊழல், லஞ்சம், வாக்குரிமை, அரசியல்வாதிகளின் போலி முகமூடித்தனம் ஆகியவற்றைப் பற்றிப் பேசுகிறார்.
இதில் இஸ்லாமியர்கள், மத அடிப்படை வாதம் பற்றி சேட்டன் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேநேரம் பாஜகவை புகழ்பாடும் கட்டுரைகளும் உண்டு. அதில் ஒன்றுதான், மோடி எப்படி தேர்தலில் வென்றார் என்ற கட்டுரை.
அனைத்து கட்சிக்காரர்களுக்கும் உதவும்படி பாஜக, காங்கிரஸ் என பாரபட்சமின்றி சில கட்டுரைகளை எழுதியுள்ளார். மொத்தத்தில் சேட்டன் சில டிவி, ஊடகங்களில் வரும் பிரச்னைகளை கையில் எடுத்துக்கொண்டு புத்தகத்தை ரெடி செய்திருக்கிறார். இவற்றை தீர்த்தால் இந்தியா பளபளவென வல்லரசு நாடு ஆகிவிடுமா என்றெல்லாம் ஆசிரியரை கிண்டல் செய்யத் தோன்றலாம். அதெல்லாம் கூடாது. அவருக்கு என்ன தெரியுமோ அதை வைத்து டைம்ஸ் ஆப் இந்தியாவில் கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் தேறியவற்றை நூலாக்கியிருக்கிறார்.
கோமாளிமேடை டீம்