துரோகத்திற்கு ரத்தம் சதையுமான தண்டனை - கான் கேர்ள்!




Image result for gone girl movie




கான் கேர்ள்

டேவிட் ஃபின்ச்சர்

கதை - திரைக்கதை ஜிலியன் ஃபிளைன்



உளவியல் பூர்வமான படம் என்பதால், கவனமாக பார்க்கவேண்டும். ஏனெனில் இது டேவிட் பின்ச்சரின் படமும் கூட. படத்தில் ரத்தமும், வன்முறையும் படம் முடிந்தபின்னும் நமக்கு இயல்பாக தோன்றவில்லை.

தன் நம்பிக்கையை கொன்ற கணவனுக்கு மனைவி பாடம் புகட்டும் கதை. அதை எப்படி செய்கிறார் என்பதுதான் படமாக விரிகிறது.

நிக், கல்லூரியில் ஆசிரியராக இருப்பவர். ஏமி, குழந்தைகள் நூல் எழுதுபவர். இருவருக்கும் பொருளாதார மந்த நிலையில் வேலை பறிபோகிறது. பிரச்னை அதன்பிறகு முளைவிடுகிறது. நிக் அடுத்த வேலைக்கு வேகமாக நகருவதில்லை. இதனால் மனைவி கோபப்பட, நிக் அசைந்து கொடுக்காமல் அக்காவின் பாருக்குப் போய் தண்ணியைப் போட்டு சாய்கிறார்.

அதோடு கல்லூரியில் அறிமுகமான பெண்ணுடன் கசமுசா சமாச்சாரமும் உண்டு. கணவரை வெறித்தனமாக விரும்பும் பெண் இதனை எப்படி ஏற்பார்? இதற்காக அவர் போடும் திட்டம்தான் காணாமல் போகும் நாடகம்.

சும்மாயில்லை. அவ்வளவு நேர்த்தியான திட்டம். போலீஸ் நிக்கின் வீட்டைச் சுற்றி வந்து ஆதாரங்களை சேகரித்து அவரை குற்றவாளி என அறிவிக்கும் நிலை ஆகிறது. அப்போது நிக், டிவியில் பேட்டி கொடுத்து மனைவியிடம் தன் தவறுகளைச் சொல்லி மன்னிப்பு கேட்கிறார்.

அதுதானே மனைவிக்கு வேண்டும்?  ஏமி அதனை எதிர்பார்த்து காத்திருக்கும்போது அவருக்கு இடம் கொடுத்து காதலிக்கிறேன் என்கிறார் முன்னாள் காதலர்.

அவரிடமிருந்து தப்பித்து வருவது போல பிளான் செய்து கணவரிடம் வந்து சேர்கிறார். இதற்கான முயற்சிகள் என்னவென படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

கணவர் மீது விருப்பம் கொண்ட பெண்ணின் வன்மம் ரோசாமண்ட் பைக்கின் கண்ணில்,உடலில் கொப்பளிக்கிறது. படம் பார்த்த வெகுநேரம் எங்களாலே தூங்க முடியவில்லை.  அப்போதுதான் இவரின் தி கேர்ள் வித் டிராகன் டாட்டூ நினைவுக்கு வந்தது. அதிலும் புரட்சிகர பெண்ணின் குணம் இப்படித்தான் இருக்கும். தீ போல ஆசையோ, அன்போ இரண்டுமே அவர் இதேபோல வெளிக்காட்டுவார். அந்தப் படத்தையும் பார்த்திருந்தால் பாதகமில்லை. இது வேறு மாதிரியான படம்.

படம் முழுக்க பென் அஃப்ளெக்கிற்கு திகைத்து நிற்பதுதான் வேலை. மற்ற வேலைகளை ரோசா செய்கிறார். எனவே படம் முழுக்க நிற்பதே ரோசாவின் உழைப்பில்தான். படம் தொடங்குவதும் முடிவதும் ஒரே காட்சியில்தான்.

சிறந்த த்ரில்லர் படம் வேண்டுமா, தாராளமாக இந்தப் படத்தை நீங்கள் பார்க்கலாம்.

கோமாளிமேடை டீம்





பிரபலமான இடுகைகள்