குழந்தைகளுக்கு ஏற்படும் அலர்ஜி! - பாதிப்புகளை எப்படி குறைப்பது?
இன்று குழந்தைகளுக்கு ஆறுமாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக கொடுக்கும் பழக்கம் பின்பற்றப்படுவதில்லை. கிராமம், நகரம் இரண்டிலும் அதிகரித்துள்ள பொருளாதார தேவை, குழந்தை வளர்ப்பையும் பாதித்துள்ளது. இதனால் குழந்தைகளுக்கு ஆறுமாதங்களுக்கு உள்ளாக தாய்ப்பால் புகட்டுவதை தவிர்த்து திட உணவுகளை தரத் தொடங்குகின்றனர்.
இதனால் குழந்தைகளின் உடல், மன வளர்ச்சியை பாதிக்கும் குறைபாடுகள், நோய்கள் ஏற்படுகின்றன. இதில் முக்கியமானது ஒவ்வாமை. இன்று பல்வேறு உணவுகளில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் காரணமாக ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இப்பிரச்னை குழந்தைகளுக்கும் ஏற்படுகிறது. எக்சிமா என்பது இதில் முக்கியமான பாதிப்பு. இதனை குணப்படுத்த முடியாது. கட்டுப்படுத்த மட்டுமே முடியும். ஆங்கில மருத்துவமுறையில் ஆயின்மென்டுகள் மூலம் தீர்ப்பதாக கூறினாலும், அது இருக்கின்ற இடத்தில் அதனை உள்ளே அழுத்தி மறைப்பதே..
ஒவ்வாமை ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாக இருப்பவை பால் பொருட்கள், வேர்க்கடலை, பாதாம் பருப்பு உள்ளிட்டவை.
இவற்றை நேரடியாக எடுத்துக்கொண்டாலும் அல்லது உணவின் பகுதிப் பொருட்களாக இருந்தாலும் ஒவ்வாமை பாதிப்பு ஏற்படுவதாக குழந்தை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பால், வேர்க்கடலை போன்ற பொருட்களை விளைவிக்க பயன்படுத்தும் பல்வேறு வேதிப்பொருட்கள் இன்று பெரியவர்களின் உடல்களிலேயே பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதில் குழந்தைகள் என்ன செய்வார்கள்? இதனால் உலக சுகாதார நிறுவனம் 2001ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு ஆறுமாதங்களுக்கு தாய்ப்பாலை மட்டும் உணவாக தரவேண்டும் என தாய்மார்களை வலியுறுத்தியது.
மரபணு சார்ந்த உணவுகளை சாப்பிடலாமா என ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளைச் செய்து வருகின்றனர். இந்நிலையில் குழந்தைகள் ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகளுக்கு பதிலாக தங்களுக்குப் பொருந்தும் உணவுகளை பெற்றோர் தருவது அவர்களைக் காக்கும்.
நன்றி - நியூ சயின்டிஸ்ட்