முதல் மனிதர்களை சந்திப்போம்!
இந்தியாவில் அனைத்து விஷயங்களும் சாதி, மதம், நிறம், மொழி சார்ந்தே தீர்மானிக்கப்படுகிறது. காரணம், நிலப்பிரபுத்துவ மனநிலை, பாரம்பரியம். இதையெல்லாம் தாண்டி சமத்துவம், சகோதரத்துவம், சாதனைகளை நிறைய இந்தியர்கள் இந்தியாவிலும் , இந்தியா கடந்தும் செய்கிறார்கள். அப்படி முதன்முதலாக சாதித்த மனிதர்களை சந்திப்போம் வாருங்கள்.
கரிமா அரோரா -33
மிச்சலின் ஸ்டார் அங்கீகாரம் பெற்ற முதல் இந்தியப்பெண்.
இந்தியாவில் மருத்துவர், பொறியாளர் ஆக காட்டும் ஆர்வத்தை பிற துறைகளில் காட்டுவதில்லை. அதிலும் சமையலை அவர்கள் அவமானகரமான ஒன்றாக கருதுகிறார்கள். நான் இத்துறையில் சாதித்துள்ளேன். ஆனால் இத்துறையில் நானே முதலாகவும் கடைசியாகவும் இருக்கமாட்டேன் என்பது உறுதி என தெம்பாக பேசுகிறார் கரிமா. பாங்காங்கில் கா எனும் இந்திய உணவகத்தைத் தொடங்கினார். தொடங்கி பதினெட்டு மாதங்களில் மிச்சலின் ஸ்டார் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். தற்போது வணிகநோக்கமின்றி, பழங்குடிகளின் உணவு வகைகளை சமைத்து மக்களுக்கு பரிமாற உள்ளார். இந்திய உணவுகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்வதே இவரின் இலக்கு.
அருணிமா சின்கா -30
எவரெஸ்ட் ஏறிய மாற்றுத்திறனாளி
2011ஆம் ஆண்டு ரயிலில் செல்லும்போது, கொள்ளைக்கார ர்களுடன் சண்டையிட்டார் அருணிமா. அவர்கள் பிடித்து தள்ளியதில் ரயிலில் இருந்து கீழே விழுந்து சக்கரங்களில் வலது காலை பலி கொடுத்தார். ஆனாலும் உயிர் பிழைத்தார். அதனால்தான் எவரெஸ்ட், எல்ப்ரஸ், மவுண்ட் வின்சன் என பல்வேறு மலைத்தொடர்களுக்கு சென்று ஏறி வருகிறார். எவரெஸ்டில் ஏறும்போது 28 மணிநேரம் ஓய்வே எடுக்காமல் ஏறியிருக்கிறார். பயணத்தின்போது கழிவறை செல்ல வசதியில்லை. செயற்கைக்கால் ஒத்துழைக்கவில்லை. முட்டியில் ரத்தம் வழியத்தொடங்கினாலும் மன உறுதியோடு மலைத்தொடரை தொட்டுவிட்டார். நான் கால்களை இழந்தபோது, உறுப்புகள் இல்லாதவர்கள் போல கீழே உட்கார்ந்து அடுத்தவரின் கருணையை எதிர்பார்க்க விரும்பவில்லை. எனவே நான் எவரெஸ்டில் ஏறத்தொடங்கினேன். எனக்கு நிதியுதவி செய்பவர்கள் கிடைத்தால் மவுண்ட் வின்சனில் ஏறுவேன் என்கிறார் நம்பிக்கையாக.
யது கிருஷ்ணா 24
தலித் பூசாரியாக திருவாங்கூர் தேவசம் போர்டில் பணிபுரிகிறார்.
யது கிருஷ்ணா, ஆறு வயதிலிருந்து கோவில் பூஜைகளில் ஆர்வம் காட்டினார். தன் வீட்டிற்கு அருகிலுள்ள கோவில்களில் பூஜை செயல்பாடுகளுக்கு உதவி வந்தார். பின்னர் திருவாங்கூர் தேவசம் போர்டு பணியிடங்களுக்கான தேர்வு எழுதினார். அதில் 62 பேர்களில் நான்காவது இடம் பிடித்தார். புலையர் இனத்தைச் சேர்ந்தவரான இவர், முதல் பணியாக மணப்புரம் மகாதேவா கோவிலில் பணியாற்றினார். தேவசம் போர்டில் 1200 கோவில்கள் உள்ளன. இதில் மாற்றி மாற்றி பூசாரிகள் பணியாற்ற வேண்டும். தற்போது அய்யப்ப சுவாமி கோவிலில் பூசாரியாக பணியாற்றி வருகிறார் யது. பணி கிடைக்கும் முன்பு திருச்சூரிலுள்ள வீட்டிலிருந்து ஐம்பது கி.மீ தள்ளியுள்ள கல்வி நிலையத்தில் சமஸ்கிருதம் கற்று வந்தார். பூசாரியானபிறகு அதனை நிறுத்திவிட்டார். தற்போது அப்படிப்பை மீண்டும் தொடங்க உள்ளார்.
நீங்கள் தலித் என்று தெரிந்தபிறகு பிரச்னைகள் உருவாகி இருக்குமே என்றோம். மேல்சாதிக்கார ர்கள் பிரச்னை செய்தார்கள். ஆனால் அதனை தேவசம் போர்டு ஏற்கவில்லை என்றார். தன் அனுபவம் மூலம் ஏதாவது கோவிலுக்கு தலைமை பூசாரியாக மாறும் வாய்ப்பும் இவருக்கு இருக்கிறது.
நன்றி - டைம்ஸ் - சோனம் ஜோஷி, ஜெயகிருஷ்ணன் நாயர் , சோபிதா தர்.