பெருநிறுவன சமூகப் பொறுப்பு!
optimy wiki |
அத்தியாயம் 1
பெருநிறுவன சமூகப் பொறுப்பு!
தற்போது உலகம் முழுக்க இயங்கி வரும் பெருநிறுவனங்கள், அங்கு பல்வேறு சமூகத்திட்டங்களைச் செய்து வருகின்றன. இதற்கென தங்களது நிகர லாபத்தில் குறிப்பிட்ட அளவை ஒதுக்கி வருகின்றன. இந்தியாவில் சமூகப் பொறுப்புத் திட்டங்களுக்கான நிதியை வரையறை செய்து, அதனைச் செலவழிக்க அரசு விதிமுறைகளை வகுத்துள்ளது.
சமூகப்பொறுப்பு பற்றிய சிந்தனை 1930 ஆண்டு முதலாக தொடங்கிவிட்டது. அக்காலகட்டத்தில் செஸ்டர் பர்னார்டு எழுதிய, தி பங்க்ஷன் ஆஃப் தி எக்சிகியூட்டிவ் (1938), தியோடர் கிரெப் எழுதிய மெசர்மென்ட் ஆஃப் தி சோசியல் பர்ஃபாமன்ஸ் ஆஃப் பிசினஸ் (1940) ஆகிய நூல்கள் இந்த சிந்தனையை மக்களுக்குத் தூண்டின.
பின்னர் 1950 இல், சமூக பொறுப்புணர்வு என்று இந்த நோக்கம் சுருக்கமாக குறிப்பிடப்பட்டது.
1953 ஆம்ஆண்டு ஹோவர்ட் போவன் என்ற எழுத்தாளர் ஒரு நூலைப் பிரசுரித்தார். சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டிஸ் ஆஃப் தி பிசினஸ்மேன் எனும் அந்த நூல்தான், பெருநிறுவன சமூகப் பொறுப்பு என்ற வார்த்தையை உலகிற்கு முதன்முதலாக அறிமுகப்படுத்தியது. இதனால் ஹோவர்ட் போவன் சமூக பொறுப்புணர்வின் தந்தை என்று புகழப்படுகிறார். ”சமூகத்தின் வரம்புகளுக்கு உட்பட்டு அதனை மதித்து அதனை உயர்த்த செய்யும் செயற்பாடுகள்” என சமூக பொறுப்புணர்வை போவன் வரையறை செய்கிறார் . ”சமூகத்திலுள்ள வளங்களைப் பயன்படுத்தி தொழில் மூலம் லாபம் சம்பாதிப்பவர்கள், இதனைத் தம் கடமையாக கருதவேண்டும் ”என்று ஹோவர்ட் கூறினார்.
1956-60 காலகட்டத்தில் சமூகப் பொறுப்புணர்வைப் பற்றி சில நூல்கள் வெளிவந்தன. தொழிலதிபர்கள் தங்கள் சமூக அந்தஸ்திற்கு ஏற்ப சமூகத்திற்கான திட்டங்களை செயல்படுத்தவேண்டும் என்று ஒரே குரலில் இக்கால எழுத்தாளர்கள் கூறினர். 1967 ஆம் ஆண்டு சமூக பொறுப்புணர்வு திட்டங்களில் வந்த மாற்றம், அதனை தன்னார்வலர்கள் ஏற்று செய்யலாம் என்பதுதான்.
1984 ஆம் ஆண்டு பீட்டர் டிரக்கர் என்பவர், நிறுவனங்களின் சமூகபொறுப்பு பற்றி தெளிவாக விளக்கி கலிஃபோர்னியா மேனேஜ்மென்ட் ரிவ்யூ இதழில் எழுதினார். இதனையொட்டி 1989ஆம்ஆண்டு ஐஸ்க்ரீம் தயாரிப்பாளர்களான பென் அண்ட் ஜெர்ரி முதன்முறையாக சமூக பொறுப்புணர்வு திட்ட அறிக்கையை வெளியிட்டனர். இத்திட்டங்களை பொருளாதாரம், சூழல், சமூகம் என மூன்று வகைகளையும் நிலையாக கொண்டு நிறுவனங்கள் செய்வதை ஐக்கிய நாடுகளின் தொழில் மேம்பாட்டு அமைப்பு வரையறுக்கிறது. இதன்மூலம் நிறுவனங்கள் தம் வணிக பிராண்டை வளர்த்துக்கொண்டு மக்களின் நம்பிக்கையையும் பெற முடியும்.
தொகுப்பு - அரசு கார்த்திக்
நன்றி - தினமலர் பட்டம்