ஆன்டிபயாட்டிக் ஆபத்து!
unsplash |
ஆபத்தை ஏற்படுத்தும் ஆன்டிபயாடிக் மருந்துகள்!
ஆன்டிபயாடிக் மருந்துகளை இந்தியர்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. 2050இல் உலகமெங்கும் இப்பாதிப்பிற்கு பலியாகும் மக்களின் எண்ணிக்கை பத்து லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நைஜீரியா, ஜாம்பியா போன்ற நாடுகளில் ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின்றி வாங்கி உண்ணுகிறார்கள். இதன் விளைவாக , அவர்களின் உடலில் நோய்களுக்கு எதிராக ஆன்டிபயாடிக் மருந்துகளின் செயல்பாட்டுத் திறன் குன்றுகிறது. இதுபற்றி பற்றிய தகவல்களைக் கொண்ட மருந்து பாதுகாப்பு பட்டியல் (DRI) தயாரிக்கப்பட்டது. இதனை சிடிடிஇபி, வாஷிங்டன் மற்றும் ரோலின்ஸ் சுகாதாரப் பள்ளி, ஜார்ஜியாவிலுள்ள இமோரி பல்கலைக்கழகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ளனர். இதில் தெரிய வந்துள்ள உண்மை, இந்தியா ஆன்டிபயாடிக் மருந்துகளைக் கையாளுவதில் மிக மோசமான நிலையில் உள்ளது என்பதுதான்.
இதுபற்றி லான்சட் இதழ் 2017ஆம் ஆண்டு ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், 2002 முதல் 2012 வரையில் ஆன்டிபயாடிக் மருந்துகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியச் சந்தையில் விற்கப்படும் 118 ஆன்டிபயாடிக் மருந்துகளில் 43 மட்டுமே அரசு அனுமதி பெற்றவை என்பது வேதனையான உண்மை. ”2016ஆம் ஆண்டு இந்திய அரசு பல்வேறு தடைகளை விதித்தது. ஆனால் இத்துறை அத்தடையை எளிதாக கடந்துவிட்டது” என்கிறார் க்வின் மேரி பல்கலைக்கழக மருந்தக ஆய்வாளர் பாட்ரிசியா மெக்கெட்டிகன்.
தாம் சாப்பிடுவது எப்படிப்பட்ட மருந்து என்ற விழிப்புணர்வு மக்களுக்கு இன்னும் ஏற்படவில்லை. இதற்கான விலையை அவர்கள் தம் உயிராக கொடுக்க வேண்டியிருக்கும் என்பது கசப்பான உண்மை. பத்து பேரில் ஒருவர் மருத்துவரின் பரிந்துரை இன்றி மருந்துகளை சுயமாக வாங்கி உண்ணுவதாக கரன்ட் சயின்ஸ் எனும் இதழ் மே, 2018 இல் கட்டுரை வெளியிட்டிருந்தது.
உலகளவில் பண்ணை விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றுக்கு ஆன்டி பயாட்டிக் மருந்துகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஆன்டிபயாடிக் பயன்பாடு 74 சதவீதத்திற்கும் அதிகம்.
சீனாவில் எழுபது சதவீத ஆன்டிபயாட்டிக் பயன்பாடு பண்ணை விலங்குகளுக்கானது. உலகளவில் சீனா 2013ஆம் ஆண்டில் 1,62,000 ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்தியுள்ளது. அதீத பயன்பாட்டால் நீர்நிலைகள், மண் ஆகியவற்றில் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் படிந்து, மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. வங்கதேசம, கென்யா, பாகிஸ்தான், நைஜீரியா, கானா ஆகிய நாடுகளில் இப்பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. 2014ஆம் ஆண்டு தொடங்கி இந்தியாவில் ஆன்டிபயாட்டிக் மருந்து பாதிப்பு கொண்ட நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது என்கிறார் ஆராய்ச்சியாளர் ஸ்டான்லி ப்ரௌன்லி ஆய்வக ஆய்வாளர் மல்லிகா லாவணியா. அரசு இதுதொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.
தகவல்:DE