மயிலாப்பூர் டைம்ஸ்!- 2 கோயில்சூழ் வாழ்வு



Image result for mylapore illustration



மயிலாப்பூர் டைம்ஸ்!- 2

குடித்தனமும், கோயில் வாசமும்

மயிலாப்பூரில் குறைந்த சம்பளம் வாங்கிக்கொண்டு காலம் தள்ளுவது மிக சிரமமான ஒன்று. இந்த சிரமங்களை தாங்கிக்கொண்டும் இங்கு தங்கியிருக்க காரணம் போக்குவரத்து வசதிகளும், கூடக்குறைய இருக்கும் மரங்களும்தான். பறவைகள் உட்கார ஒரு மரம் கூட இல்லாமல் இருக்கும் இடத்தில் எப்படி வசிப்பது? ரயில், பஸ்களின் பேரிரைச்சல்கள் மனதை ராஜீவ் ரவியில் கேமரா கோணங்கள் போல திகைப்புக்குள்ளாக்கி விடும். சிலர் இதனை வர்க்கம் சார்ந்த பிரச்னையாக பார்க்கிறார்கள். தனக்கான சுயநலம் என்றால் கூட அதற்கு பிறரையும் சம்மதிக்க வைத்து ஏதேனும் செய்கிறார்களே என்று சந்தோஷப்படவேண்டியதுதான்.

கபாலி கோயில் வெளிநாட்டு வருகையாளர்களால் பரபரப்பானாலும் ஆசுவாசம் தர ஆதிகேசவ பெருமாள், மாதவப்பெருமாள் குறையாத புன்னகையுடன் வரவேற்கிறார்கள். போகும் வழியில் முண்டக்கண்ணியம்மன் தன் தாய்மடியை ஆறுதல் தேடிப்போகும் உங்கள் நீட்டுகிறாள். அப்புறமென்ன? பேருந்துக்கு போட்டியாக ரயில்வே இன்று மக்களை இணைக்கிறது. முண்டக்கண்ணியம்மன் ஸ்டேஷன் தொடங்கப்பட்டதிலிருந்து பெரும் மக்கள் கூட்டம் குறைந்த காசில் நகருக்குள் பயணிக்கிறது. அதென்னமோ பெருமாள் கோயிலுக்கு போகும்போது மாட்டுத்தீவனங்களை மட்டுமே உண்ணும் மாடுகளின் சாணம் எப்படியேனும் காணக்கிடைத்து விடுகிறது. டீஷர்ட்டும் வெள்ளை வேட்டியும் உடுத்தி பேப்பர்கையோடு சிலர் நடைபோடும்போது கோயில் அருகேயுள்ளது என தெரிந்துகொள்ளலாம்.


சேட்டா (எ) ஜெகன்னாதன் கடையில் அவரின் உளுந்தவடை மார்க்கெட்டிங் விளம்பரங்களை சிரிப்பால் சமாளித்து டீ குடித்து முண்டக்கண்ணியம்மன் கோயில் தெருவில் நடந்தால் முதலில் வருவது அங்காளம்மன் கோயில். தலைமுறையாக கோயிலை பராமரிக்கும் பூசாரி, பரபரவென நைஜீரிய மரபு தலைமுடியோடு சேரில் உட்கார்ந்திருப்பார். பக்கத்திலேயே ஆரம்ப சுகாதார நிலையம். அதற்கு எதிரில் திருநெல்வேலி நாடாரின் அய்யா வழி மளிகை. யாருக்கும் தெரியக்கூடாது என அமைதியாக அரசு நடத்திவருகிறது. கோயிலைத்தாண்டியவுடன் சற்று உள்தள்ளி அமைந்துள்ளது. இந்த ஜங்ஷனில் நான்கு சாலைகள் பிரியும். அதிக டீனேஜ் பெண்கள் இச்சாலையைப் பயன்படுத்தி கச்சேரிசாலையை அடைகிறார்கள் என்பது கோமாளிமேடையின் அண்மைய ஆய்வு முடிவு.  இதைக்கடந்து வலதுபுறம் கல்லுக்காரன் தெருவில் நுழைந்து சாணங்களை மிதிக்காமல் நடந்து இடதுபுறம் திரும்பி மீண்டும் இடது சென்றால் வீரபத்திரர் கோயில் முதலில் வரும். வணங்கி, முகம் நிமிர்த்தினால் மாதவப்பெருமாள் புன்னகைப்பார். பெருமாள் கோயிலில் உள்ளே செல்வது பிரச்னையில்லை. ஆழ்வார்கள் மிக மெதுவாக அனைத்தையும் செ்ய்கிறார்கள். அதிர்ஷ்டம் இருந்தால் அமிர்தவல்லித்தாயாரின் பின்புறம் புல்லாங்குழல் வாசிப்பவரின் இசையைக் கேட்கும் வாய்ப்பை கேட்கலாம். மற்றபடி கோயில் கொஞ்சம் என்கூட அமரேன் என அமைதியாக இறைஞ்சும். இறைவனை வணங்குவதை விட அங்கு அமர்ந்து சிலரை கவனிப்பது எனது வழக்கம். பொய்யாமொழி நாளிதழ் கடைக்காரர், கெட்டவார்த்தையில் வசைபாடியபடி கோயிலை பெருக்கும் ஆள், பேச்சேயின்றி சிரத்தையாக கோயிலைக்கூட்டும் வாலிபி, கொடிமரத்தின் கீழே தேதியை தவறாக கோலமாவில் எழுதும் இளம்பெண், கோயிலை தன்னுடைய சொத்துபோல பாவிக்கும் கல்யாணமண்டப நிர்வாகி என வித்தியாசமான பல்வேறு மனிதர்களை நீங்கள் இ்ங்கு சந்திக்கலாம். நிதானமும், பரபரப்பும் மயிலாப்பூரின்  பிரிக்கமுடியாத பகுதியானதை பெருமாள் புன்னகையுடன் பார்த்து ஆசிர்வாதம் செய்வதை இ்ங்கு மட்டுமே காணலாம்.
-ஏகாங்கி