சீனாவில் உருவாகிறது புதிய சினிமா சந்தை!
சீனாவில் இந்தியக்கொடி பறக்குது!-
ச.அன்பரசு
சீனாவின் பெய்ஜிங் நகரிலுள்ள புகழ்பெற்ற சினிமா
தியேட்டர். திரையில் ஓடிய படத்தில் கண்ணிமைக்கக்கூட மறந்து
லயித்து போயிருந்தனர் சீன இளைஞர்கள். காம்போ ஆஃபரில் வாங்கிய
பாப்கார்னைக்கூட படத்தின் சுவாரசியத்தில் சாப்பிடத் தோன்றவில்லை. அதிசய மிருகங்களால் உலகுக்கு ஆபத்து, ரேஸ் கார்கள்,
சூப்பர் கதாநாயகர்கள், ரத்தம் தெறிக்கும் வரலாற்றுப்படம்
என்றெல்லாம் ஹாலிட் படங்களோடு அந்தப்படத்தை ஒப்பிட முடியாது. கிராபிக்ஸ் கலப்படங்கள் இல்லாத சிம்பிளான கதை. தந்தை
தன் இரு மகள்களை மல்யுத்த வீரர்களாக்கும் உணர்ச்சிப்பூர்வமான மொழிமாற்றுப்படத்தில்
ஒன்றிப்போய் நெஞ்சம் நெகிழ்ந்துபோய் கண்கள் கசிய பார்த்துக்கொண்டிருந்தனர் சீனர்கள்.
ஆம். 2016 ஆம் ஆண்டு
நிதிஷ் திவாரியின் இயக்கத்தில் அமீர்கானின் அட்டகாச நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி
உலகமெங்கும் பாராட்டுக்களையும் கரன்சியையும் குவித்த 'தங்கல்'
படம்தான் அது. ஏறத்தாழ சீனாவில் மட்டும் படம் வெளியான
இரண்டே மாதங்களில் பத்தொன்பது கோடி ரூபாய் சம்பாதித்து தந்திருக்கிறது. "பலருக்கும் நம்பமுடியாத ஆச்சரியம்தான். இவை சீனாவில்
டிரெண்ட்செட்டர் படங்கள் என்பதே நிஜம்" என்கிறார் வெரைட்டி
இதழின் ஆசிய வணிக ஆசிரியர் பேட்ரிக் ஃபிராடர்.
காது புடைப்பாக ஆள் கட்டையாக தங்களைப்போலவே இருக்கிறார்
என்பதால் அமீர்கானை சீனர்கள் ஆதரிக்கிறார்களா? இல்லவே இல்லை.
சல்மான் கானின் பைரங்கி பாய்ஜான் படமும் செம டப்பு பார்த்திருக்கிறது.
தற்போது இந்தி திரைப்பட இயக்குநர்கள் பார்வை சீனாவின் பக்கம் திரும்பியுள்ளது.
தற்போது பாலிவுட் திரைப்பட நிறுவனமான ஈரோஸ் சீனா திரைப்பட தயாரிப்பு
நிறுவனங்களோடு படங்களை தயாரிக்க அக்ரிமெண்ட் செய்துகொண்டுள்ளது இந்த தெம்பில்தான்.
முதன்முதலில் சீனாவில் வெளியாகி வெற்றி கண்ட இந்திய
திரைப்படம் அமீர்கானின் த்ரீ இடியட்ஸ். பின்னர் பிகே
தொடங்கி தற்போது ரிலீசுக்கு காத்திருக்கும் பாகுபலி 2, இந்தி
மீடியம் படங்கள் வரை தங்களுக்கான புதிய சந்தையை பாலிவுட் படங்கள் சீனாவில் உருவாக்கியுள்ளன.
என்ன காரணம்? 2000 ஆம் ஆண்டில் வெளியான ஆங்க் லீயின்
'பாயும் புலி, பதுங்கும் நாகம்', ஸாங் யிமொவின் தி கிரேட் வால் ஆகிய படங்களைத் தவிர்த்து சீனச்சந்தை பெரியளவு
விரிவாகவில்லை. சீனாவில் ஹிட் அடிக்கும் படங்களும் பிறநாடுகளில்
போணியாகும் தரத்தில் இல்லை. "சீனாவில் சினிமாக்களின் தயாரிப்பை
தீர்மானிப்பது பணம் படைத்த சிலர்தான். பெரிய நடிகர்கள்,
கிராபிக்ஸ் என்பதைக் கடந்து திடமான கதையை அவர்கள் யோசிப்பதேயில்லை எனும்போது
சீன சினிமாத்துறை எப்படி வளரும்?" என்கிறார் பீகாக் மௌண்டைன்
சினிமா நிறுவனத்தின் துணைத்தலைவரான கு வாங்சங்.
"சீனர்களின் தன்னம்பிக்கையை விட பாலிவுட்
இயக்குநர்கள் மிகவும் தன்னம்பிக்கையுடன் தங்கள் படங்களை சிறந்த கதை அமைப்பு கொண்டது
என அறிமுகப்படுத்தி திரையிட்டு வெல்கிறார்கள்" என்று உற்சாகமாக
பேசும் கு வாங்சங், இந்திய- சீன கூட்டுத்தயாரிப்பில்
படங்களை உருவாக்க முயற்சித்து வருகிறார்.
அமெரிக்கா, இங்கிலாந்து,
தெற்கு ஆசியா என விரிவடைந்த பாலிவுட் படங்களுக்கான இன்றைய சந்தை மதிப்பு
15 ஆயிரத்து 600 கோடி. தற்போது
சீனாவிலும் இந்தியப்படங்களுக்கான சந்தை கிடைத்திருப்பதை உறுதி செய்தது 'தங்கல்' படத்தின் மெகா வெற்றிதான். டப் செய்து வெளியிடப்பட்ட த்ரீ இடியட்ஸ், பிகே,
தங்கல் என பிளாக்பஸ்டர் படங்கள் மூலம் நடிகர் அமீர்கான் இந்திய சினிமாக்களின்
தனித்துவமான முகமாக சீனாவில் அறிமுகமாகியுள்ளார். அமீர்கான் கௌரவ
வேடத்தில் நடித்த சீக்ரெட் சூப்பர்ஸ்டார் இந்தியாவில் ஒரு கோடி ரூபாய் வசூலிக்கவே நாக்கு
தள்ளிவிட்டது. ஆனால் சீனாவில் அடித்து நகர்த்திய வசூல் மழை ரூ.
117 கோடி என்றால் பிரமிப்பு ஏற்படத்தானே செய்யும்? தைவான், ஹாங்காங், சீனா ஆகிய இடங்களிலுள்ள தியேட்டர்களில்
மக்களின் கரகோஷத்துடன் பாலிவுட் படங்கள் தற்போது சக்கைபோடு போடுகின்றன.
இந்தியப்படங்களுக்கு மட்டுமல்ல; தாய்லாந்து படமான Bad Genius, ஸ்பானிய படமான
Contratiempo ஆகிய படங்களும் சீனாவில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன.
இந்தியப்படங்கள் சினிமா பந்தயத்தில் முந்துவது எப்படி? கலாசாரரீதியிலான உறவு, நெஞ்சுக்கு நெருக்கமான கதை சொல்லும்
முறைதான் காரணம். சீனாவில் மக்கள்தொகைக்கு ஏற்ப அங்கு உள்ள திரையரங்குகளின்
எண்ணிக்கை 50 ஆயிரம், 2011 இல் இதன் எண்ணிக்கை
9 ஆயிரம் மட்டுமே.
சீனாவுக்கும் இந்தியாவிற்குமான டோக்லாம் எல்லைக்கோடு
பிரச்னையால் இரு நாட்டிற்கும் இடையே திகுதிகு நெருக்கடி நிலவிவருகிறது. இச்சூழலில் அங்கு வெளியாகும் இந்தியப் படங்களுக்கு பெருகும் வரவேற்பை சீன அரசு
எப்படி பொறுக்கும்? கலாசாரரீதியிலான தாக்குதல் என கணக்குப்போட்ட
நிரந்தர அதிபர் ஜின்பிங், தன் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்கள் மூலம்
இந்தியாவைப் பற்றிய பிளஸ் பாய்ன்டுகளை விட்டுவிட்டு ஜாதி கட்டமைப்பு, பெண்ணடிமை ஆகிய விஷயங்களை அடிக்கடி ஒளிபரப்பி மக்களிடம் இந்திய வெறுப்பை தூண்டிவிட்டு
வருகிறார். இதன் விளைவாக, இந்தியா மோசமான
அழுக்கான நாடு என புரிந்துகொள்ளும் மக்கள், டூருக்கு கூட
லங்கா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும்படி
அரசு அவர்களின் மனநிலையை மாற்ற முயற்சித்து வருகிறது. அரசியல்
நம்மை பிரித்தாலும் திரைப்படங்களாவது மக்களின் மனங்களை இணைக்கட்டுமே!
பட்டாசு கிளப்பிய படங்கள்
தங்கல் - 84.4 கோடி(இந்தியா), 193 கோடி(சீனா),
310 கோடி(உலகெங்கும்)
சீக்ரெட் சூப்பர்ஸ்டார் - 1
கோடி(இந்தியா), 117 கோடி(சீனா), 130 கோடி(உலகெங்கும்)
பிகே - 53 கோடி(இந்தியா), 17 கோடி(சீனா),
125 கோடி(உலகமெங்கும்)
பஜ்ரங்கி பாய்ஜான் -
48 கோடி(இந்தியா), 30 கோடி(சீனா), 116 கோடி(உலகமெங்கும்)
த்ரீ இடியட்ஸ் - 59 கோடி(இந்தியா), 3.5 கோடி(சீனா),
80 கோடி(உலகமெங்கும்)