தொழில்துறை சூப்பர்ஸ்டார் தனிமையில் ஜெயித்தது எப்படி?
தனிமையில் தலைவன்: ஜெயித்தது எப்படி? - ச.அன்பரசு
அந்த புகழ்பெற்ற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனருக்கு இரவில் அடுத்தடுத்து போன் அழைப்புகள்,
குறுஞ்செய்திகள் வந்தன. "நான் தனியாக இருக்கிறேன். இன்றிரவு உன் வீட்டில் தங்க அனுமதி கிடைக்குமா?" என்பதுதான் அந்த செய்தி. செய்தியைப் படித்துவிட்டு அழைப்பு எண்ணைப் பார்த்தவர் எந்த பதிலும் அனுப்பாமல் புன்னகையுடன் தூங்கச் சென்றுவிட்டார். இதுபோல மாதத்திற்கு பலமுறை அழைப்பும் குறுஞ்செய்திகளும் வருவது அவருக்கு பழகிவிட்டது. விடாக்கண்டனாக அழைப்பவரும் அதேபோல்தான். அழைத்தவர் நவீன தொழில்துறையின் சூப்பர் ஸ்டாரான எலன்மஸ்க்,
செய்திகளைப் பெற்றவர் அவரின் நண்பரான கூகுளின் லாரிபேஜ்.
தன்
எட்டு நிறுவனங்களின் மூலம் ஒரு கோடியே
37 லட்சம் கோடி ரூபாய்களுக்கு சொந்தக்காரான எலன் மஸ்க், இன்றைய ஸ்டார்ட்அப் இளைஞர்கள் மனதில் வெற்றிவேட்கையை அள்ளி ஊட்டும் மந்திரச்சொல். எட்டு சொகுசு வீடுகளை வைத்திருந்தும் அங்கு தங்காமல் இரவில் நண்பரின் வீட்டில் எலன்மஸ்க் தங்க நினைப்பதன் காரணம் என்ன? மீட்கமுடியாத தனிமையில் இழந்துபோன பால்யம்தான்.
இன்றும்
அவர் தன்னை ஆப்பிளின் ஸ்டீவ்ஜாப்ஸ், மார்வெல் காமிக்ஸின் டோனி ஸ்டார்க்,
தன் அப்பா எரல் மஸ்க் ஆகியோருடன் ஊடகங்கள் ஒப்பிடுவதை கடுமையாக வெறுக்கிறார். குறிப்பாக, தென் ஆப்பிரிக்காவில் பொறியாளராக பணியாற்றும் தந்தை எரல் மஸ்க்கை.
கனடா நாட்டைச் சேர்ந்த மாடல் அழகியும்,
டயட்டீசியனுமான மாயா மஸ்க், தென் ஆப்பிரிக்காவின் எஞ்சினியர் எரல் மஸ்க் ஆகியோரின் காதல் பரிசாக பிறந்தார் எலன் மஸ்க். பெற்றோரின் தொழிலா இயல்பா என்று தெரியாதபடி எட்டு ஆண்டுகள் பெற்றோரின் அரவணைப்பில் வளர்ந்தாலும் தனக்கென தனியாக புத்தகங்களால் உலகை அமைத்துக்கொண்டார் எலன்.
துயரங்களால் மனம் துவண்டபோதெல்லாம் அதிதீவிரமாக நூல்களை வாசிக்கத்தொடங்கினார்; தன் ஒன்பது வயதிலேயே பிரிட்டானிகா தகவல்களஞ்சியங்களின் முழுதொகுப்பையும் வாசித்த இந்த ஜீனியஸ்,
தன் பனிரெண்டாவது வயதில் பிளாஸ்டர் எனும் வீடியோகேமுக்கு கோடிங் எழுதி சம்பாதித்த தொகையை நீங்கள் நம்பவே முடியாது. சுளையாக 32 ஆயிரம் ரூபாய். படிப்பில் பின்னி எடுத்தாலும், பள்ளியில் உயரம் குறைவாய் பொடிசாய் இருந்ததால் பள்ளியில் முரட்டு மாணவர்களிடம் அடி, உதை வாங்குவது எலனின் தினசரி வழக்கம்.
சிலமுறை மருத்துவமனையில் சேரும்படியும்
மூர்க்கமாக தாக்கப்பட்டுள்ளார் எலன்.
இதிலிருந்து மீண்டுவரும்போது மற்றுமொரு பூகம்பமாக பெற்றோரின் விவகாரத்து வெடித்தது.
தம்பி, தங்கை அம்மாவிடம் சேர, அப்பா எரல் மஸ்கின் வீட்டில் தங்கி வளர்ந்தார் எலன். பின்னாளைய பேட்டிகளில் "நான் செய்த பெருந்தவறு அது. என் தந்தை எரல் மஸ்க், ஒரு மனிதப்பிறவியே கிடையாது" என ஆவேசப்பட்டார் எலன். ஆனால் தனக்கு ஏற்பட்ட துக்கத்தினாலும் வலியினாலும் மது, மாது, போதை என
மடைமாறி தடுமாறவில்லை என்பதுதான் எலனின் தனித்துவம்.
அத்தனை சோகத்தையும், தவிப்பையும் படிப்புக்கு உரமாக்கினார். தன் பதினேழு வயதில் கனடாவுக்கு சென்று அம்மா மாயாவின் குடியுரிமையின்
உதவியுடன் கல்லூரியில் சேர்ந்தார். இயற்பியல்,
பொருளாதாரம் படிப்புகளை நிறைவு செய்தவர் 1995 ஆம்
ஆண்டு தன் சகோதரர் கிம்பலுடன் தொடங்கிய ஜிப்2 எனும் நிறுவனம்தான்
அவரின் பிஸினஸ் சாம்ராஜ்யத்தின் முதல் படி. பின் அந்த நிறுவனத்தில்
எலனின் பங்குகளை காம்பேக் நிறுவனம், 2 கோடி ரூபாய்க்கு வாங்கிக்கொள்ள,
அடுத்தடுத்து எக்ஸ்.காம், பேபால் என தொடங்கி இன்று ஸ்பேஸ்எக்ஸ் வரை எட்டு நிறுவனங்களைத் தொடங்கி,
"என் ஐம்பதாவது வயதில் நான் செவ்வாயில் வசிப்பேன்"
என தன் கனவை மக்களிடம் கூறியிருக்கிறார் எலன் மஸ்க். சிறுபிள்ளைக் கனவு போல தோன்றினாலும் பால்யத்திலிருந்து சந்தித்த துயரங்களும்
தனிமையும் எலனை எஃகு போல உறுதியாக்கி வாழ்வில் உயர்த்தியுள்ளதே நிஜம்.
2009 ஆம் ஆண்டு பேபால் நிறுவனம் ஊடகங்களில் மிகமோசமான
வணிக முயற்சி என்று விமர்சிக்கப்பட்டது, பின் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்
விண்ணில் செலுத்தியபோது வெடித்து சிதறியது, டெஸ்லா கார்களின்
பேட்டரி திறன் குறித்த சர்ச்சைகள், மூன்று திருமண முறிவுகள் ஏன்
அண்மையில் நடிகை ஆம்பர் ஹியர்டுடன் உறவு முறிந்தபோதும், தாய்
மாயா தவிர அனைவரும் எலனின் ஐடியாக்கள் மீது நம்பிக்கை இழந்தபோது எலன் அவை 'துயரமான நேரங்கள்' என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
ஆனால் அப்படியே தாடி வளர்த்து சரக்கடித்து திரியாமல், தன் ஆபீஸ் சென்று பணியாளர்களுடன் அடுத்தடுத்த திட்டங்களை பேசி புத்துயிர் பெற்று
மேலும் ஒளிவேகத்தில் வேலையில் இறங்கி தூள் கிளப்பி சாதிப்பார். நாமும் அவரைப்பற்றி கட்டுரை எழுதுவோம். பலரும் வெறுக்கும்
துக்கங்களையும் தனிமையையும் தன் வெற்றிக்கான சூத்திரங்களாக்கியது எலனின் நம்பவே முடியாத
வெற்றி ரகசியம்.
"எலனுடன் வேலை பார்ப்பது மிக சிரமம்.
ஏனெனில் அவரை எளிதில் திருப்தி செய்யமுடியாது. ஆனால் அதேநேரத்தில் அவருடன் வேலை செய்த பணியின் ரிசல்ட்டை கவனித்தீர்கள் என்றால்,
உங்களுடைய ஒவ்வொரு சொட்டு வியர்வைக்குமான மதிப்பு இருக்கும்"
என பெருமையாக பேசுகிறார் ஸ்பேஸ்எக்ஸ் அதிகாரி டோனா சிங். உலகை வாழ்வதற்கான சிறந்த இடமாக மாற்றுவதே லட்சியம் என்பது பூமியில் பிறந்த
தொழிலதிபர்களின் மாறாத வாக்கு. ஆனால் எலன் மஸ்க், ஒரு கனவிலிருந்து ஒரு கனவு என முடிவில்லாத கனவுக்கு தப்பித்து செல்கிறார் என்றுதான்
கூறவேண்டும். எலக்ட்ரிக் கார்களுக்கான மார்க்கெட் இல்லாதபோது
டெஸ்லாவை தொடங்கியது, பேட்டரிகளுக்காக தொழிற்சாலைகளையும்,
கார்களுக்கான சார்ஜ் மையங்களையும் நிறுவியது, ஸ்பேஸ்எக்ஸில்
நிறுவனத்தில் ரீயூசபிள் ஃபால்கன் ராக்கெட்டைப் பயன்படுத்தி டெஸ்லா காரை பூமியின் சுற்றுப்பாதையில்
பறக்கவிட்டது என தொடங்கும்போது சிறுபிள்ளைத்தனம் போல தெரிந்தாலும் அத்தனையிலும் நம்பிக்கை
குறையாமல் முத்திரை பதித்து வென்று கரன்சி பார்த்திருப்பதுதான் எலன் மஸ்கிடம் நாம்
கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.
"மனிதர்களுடன் உறவை பராமரிப்பது கடினமாக உள்ளது. நான்
எனது வீட்டுக்குள் நுழையும்போது, வெறுமையான ஆட்களற்ற வீட்டில்
எனது காலடியோசை எதிரொலிக்கிறது. காலையில் எழும்போது எனது அருகில்
யாருமில்லை. வாழ்நாள் முழுக்க நீடிக்கும் தொடரும் உறவைத் தேடிக்கொண்டிருக்கிறேன்"
என்று தனது புதிய காரின் அறிமுகவிழாவில் கூறினார். தனிமை உடலுக்கும் மனதுக்கும் கேடு என்கிறார்கள். ஆனால்
தனிமையிலிருந்தே தன்னை தானே உளியெடுத்து செதுக்கி வளர்த்து சாதித்த எலன் மஸ்கை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.
நீங்கள் துயரத்தில், தனிமையில் இல்லை; எலன் மஸ்க் உங்களுடனேயே இருக்கிறார். வெற்றிக்கான சீக்ரெட்ஸ்களை பிஸினஸ் வழிகளில் மட்டுமல்ல, வெற்றியாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தேடுவது சமூகத்திலும் மனதிலும் நம்மீதான தன்னம்பிக்கையை வளர்க்கும் வழி. சக்கைப் போடு போடுவோம்
வாங்க!
நன்றி: குங்குமம்