மக்களின் வீடற்ற நிலைக்கு அரசுதான் காரணம் - ஜோக்கின் அற்புதம்
பசுமை
பேச்சாளர்கள்
ஜோக்கின்
அற்புதம்
ச.அன்பரசு
1963 ஆம் ஆண்டிலிருந்து மும்பையின் குடிசைப்பகுதியில் வசித்து வரும் ஜோக்கின்
அற்புதம், தேசிய குடிசைவாசிகளின் சங்கத்தின் தலைவராகவும்
செயல்பட்டு அங்கு ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க தளர்வுறாமல் செயல்பட்டுவருகிறார்.
வறுமை, அரசியல் சமச்சீரின்மை ஆகியவற்றால் 2030
ஆம் ஆண்டு குடிசைவாழ் மக்களின் அளவு 2 பில்லியன்
அளவுக்கு அதிகரிக்கும் என தகவல் தெரிவிக்கிறார் ஜோக்கின் அற்புதம்.
1947 ஆம் ஆண்டு கர்நாடாகவிலுள்ள கோலாரில் தமிழ்நாட்டுப் பெற்றோருக்கு பிறந்த
ஜோக்கின் அற்புதம், கார்பென்டராகவும், பின்னர்
பணி ஒப்பந்ததாரராகவும் பணியாற்றினார். தாங்கள் வாழ்ந்த ஜனதா
காலனியை அரசு அகற்ற முயற்சித்தபோது அதற்கு எதிராக போராடியதுதான் ஜோக்கின்
அற்புதத்தின் முதல் போராட்டம். பின்னர் குடிசைவாழ்
மக்களுக்கான நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக போராடியவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட முறை
காவல்துறையால் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
"நாங்கள் வாழ்வது
குடிசைப்பகுதி என்பதாலேயே, எங்கள் மீது திருடன், ஒழுக்கமில்லாதவன் என அரசு உள்பட பல்வேறு அமைப்புகள் முத்திரை
குத்துகிறார்கள். பிற மக்கள்போல கௌரவமான வாழ்க்கையை வாழ்வதே
எங்கள் நோக்கம்" என தீர்க்கமாக பேசுகிறார் ஜோக்கின்
அற்புதம். இந்தியாவில் குடிசைப்பகுதி மக்களுக்கான சுகாதார
வசதிகளை அமைத்துதரும் பணியில் பதினான்கு நகரங்களில் பணியாற்றியுள்ளார் அற்புதம்.
ஏழைமக்களுக்காக பாடுபடும் உலகளாவிய அமைப்புகளுடன் பணியாற்றியுள்ள
அற்புதம், நிலவுரிமைக்கான தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவர்.
2000 ஆம் ஆண்டில் ராமன் மகசசே விருது வென்றவர், 2011 ஆம் ஆண்டு இந்திய
அரசின் நான்காவது பெருமைக்குரிய விருதான பத்ம பெற்றிருக்கிறார்.
"தாராவியில் எதற்கு சிறப்பு பொருளாதார மண்டலம்? அப்படித்தானே நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இங்கு
தயாராகும் இட்லிகள் மும்பையெங்கும் மலிவான விற்கப்படுவதே இதற்கு உதாரணம். இங்குள்ள மக்கள் அனைவரும் கடுமையாக உழைக்கிறார்கள். யாருடைய
கருணைப்பார்வைக்கும் இவர்கள் ஏங்கிகிடக்கவில்லை" என
காரம் தூக்கலாக பேசுகிறார் அற்புதம். இவரின் அலுவலகத்தில்
தன்னார்வலர்களாக வேலைசெய்பவர்கள் அனைவரும் பெண்கள்தான். "கணவனும் மனைவியும் சிறிய திரை கூட இன்றி தெருவில் உறங்குகிறார்கள்.
அவர்களை இந்நிலையில் தெருவில் கிடத்தியது யார் அரசுதானே?"
என்னும் ஜோக்கின் அற்புதம் குடிசைபகுதி மக்களும் நிம்மதியாக
உறங்குவதற்கான வீடு, குடிநீர், சுகாதார
வசதிகளுக்காக இன்றும் உழைத்து வருகிறார்.