ஜெர்மனை பசுமையாக்கிய ஹெர்மன் ஷீர்!


Hermann ScheerThe Right Livelihood Award



பசுமை பேச்சாளர்கள்
ஹெர்மன் ஷீர்
.அன்பரசு

ஜெர்மனியின் சமூக ஜனநாயக கட்சி உறுப்பினராக செயல்பட்டு மறைந்த ஹெர்மன் ஷீர்(1944-2010), அணுஉலைகளுக்கு மாற்றாக புதுப்பிக்கும் ஆற்றல்முறைகளை அரசு கைக்கொள்ளவேண்டும் என்று பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்ட சூழல் ஆளுமை.

தற்போது மூன்று சதவிகிதத்திற்கும் அதிகமாக மின்சாரம் சூரியனிலிருந்து பெறப்பட்டு வருவதற்கும், மக்களிடமிருந்து தனியார் மின்சார நிறுவனங்கள் மார்க்கெட் விலையில் மின்சாரத்தை வாங்குவதற்கும் ஹெர்மன் ஷீர் எடுத்த முயற்சிகள் முக்கியமானவை. போர்ச்சுக்கல், ஸ்பெயின், க்ரீஸ், பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் ஹெர்மனின் ஆற்றல் கொள்கையை பின்பற்றும் முயற்சியைத் தொடங்கியுள்ளன. 1999 ஆம் ஆண்டு ஹெர்மன் ஏற்படுத்திய German feed-in tariffs என்ற திட்டம் பின்னாளில் புதுப்பிக்கும் ஆற்றல் ஆதாரங்களில் அரசு முதலீடு செய்வதற்கான நிர்பந்தத்தை ஏற்படுத்தியது.

தன் ராணுவப்பணியை நிறைவு செய்த ஹெர்மன் 1965 ஆம் ஆண்டு சமூக ஜனநாயக கட்சியில் இணைந்தார்ஹெய்டல்பெர்க் பல்கலையில் பொருளாதாரமும் சட்டமும் படித்த ஹெர்மன், அரசியல் அறிவியலில் டாக்டர் பட்டம் வென்றவர். உலகளவில் பாராட்டு பெற்றாலும் தான் சார்ந்த கட்சியில் இவரது கொள்கைகள் பாராட்டப்படவில்லை என்பதுதான் சோகம்.
 
The Energy Imperative: 100 Percent Renewable Now (2011), Energy Autonomy, The Economic, Social and Technological Case for Renewable Energy(2006)
A Solar Manifesto(2005) ஆகியவை இவர் எழுதிய சூழல் தொடர்பான முக்கியமான நூல்கள். யூரோசோலார் நிறுவனத்தில் தலைவராக செயல்பட்டு வந்த ஹெர்மன் ஷீர், மாரடைப்பால் திடீரென இறந்துபோனார். "அணுவாற்றல், கரிம எரிபொருட்களுக்கு மாற்றாக புதுப்பிக்கும் ஆற்றலின் மூலம் மின்சாரம் என்பது பேராசையல்ல; இங்குள்ள தனியார் நிறுவனங்கள் சூழல் என்பதைக் கடந்து தம் சுயநலத்தை மட்டும் பார்ப்பதால் புதுப்பிக்கும் ஆற்றல்துறையின் வளர்ச்சியை தடுக்கின்றன" என்று பேசிய ஹெர்மன், சோலார் மின்னாற்றலுக்கான சரியான விலையைப் பெறுவதற்கான திட்டங்களை செயல்படுத்தி வெற்றிகண்டவர்.

பசுமை திட்டங்களின் மூலம் நாட்டை ஆயில் நாடுகளிடம் எரிபொருட்களுக்காக கையேந்தி நிற்காமல் பொருளாதாரத்தையும் பாதுகாக்க முனைந்த ஹெர்மனின் முயற்சி அசாதாரணமானது.


பிரபலமான இடுகைகள்