இயற்கையைவிட இன்ஸ்பிரேஷன் வேறென்ன இருக்கிறது? - கென்யாங்
பசுமை பேச்சாளர்கள்
கென் யாங்
ச.அன்பரசு
உலகின் புகழ்பெற்ற பசுமை கட்டிட பொறியாளரான கென்யாங், தன்
கட்டுமானத்தில் 30 சதவிகித ஆற்றலை சேமிக்கும்படி கட்டிடங்களை
திட்டமிட்டு கட்டி வருகிறார். அதிநுட்ப காற்றுவசதி, சன்ஷேடுகள், தாவர சுவர்கள் என பயன்படுத்தி கட்டிடங்களை
அழகோடு அலங்கரிக்கும் வழக்கம் கொண்டவர் இவர். "உலகில் இயற்கையைவிட
எனக்கு வேறு எதுவும் இன்ஸ்பிரேஷனே கிடையாது" என்பவர் ஈகோ
டிசைன் என்ற வார்த்தையை கட்டுமானத்துறையில் பிரபலமாக்கினார்.
மலேசியாவின் பினாங்கில் 1948
ஆம் ஆண்டு பிறந்த கென் யாங், 1971 ஆம் ஆண்டிலிருந்து
பசுமை கட்டிடங்களை கட்டி வருகிறார். மலேசியா, லண்டன், சீனா ஆகிய இடங்களில் கென் தனது கட்டுமான நிறுவன
அலுவலகங்களை திறந்துள்ளார். பினாங்கு ஃப்ரீ ஸ்கூலில் படித்து,
பின்னர் செல்ட்டன்ஹாம் கல்லூரியில் பட்டம் பெற்றார். லண்டன் ஆர்க்கிடெக்ச்சர் கல்லூரியில் வடிவமைப்பு பட்டம் வென்ற கென்,
உலகிலுள்ள 12 உயரமான கட்டிடங்களை கட்டியுள்ளதோடு,
முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களிலும் உரையாற்றியுள்ளார்.
எ.கா. இலினாய்ஸ்,
ஷெப்பீல்ட், ஹவாய் ஆகிய பல்கலைக்கழகங்கள்.
சிங்கப்பூர் தேசிய நூலகம், ரூஃப் ஹவுஸ், ஸ்பையர் எட்ஜ் டவர் ஆகியவை இவரது கட்டுமானத்திற்கு
சான்று. கட்டுமானங்களை இயற்கையான தன்மையோடு அமைக்க அப்பகுதிக்கான
தாவரங்களை தேர்ந்தெடுப்பது, காற்றோட்ட வசதி என கட்டமைத்த கென்னுக்கு
தனிப்பெருமை கிடைத்தது. மற்றொரு பெருமையாக, சக கட்டுமான கலைஞர்களே கென் ஸ்டைலை பின்பற்றத்தொடங்கிவிட்டனர். "நான் சூழலியலாளன் பிறகுதான் கட்டிட வடிவமைப்பாளன். கட்டிடங்களை
தனிப்பொருளாக நான் கருதுவதில்லை. வீடோ, அலுவலகமோ அங்கு மனிதர்கள் வசிக்கிறார்கள். கட்டிடத்தோடு
மறைமுகமான உறவு உருவாகிறது. அந்த உறவை நான் முக்கியமானதாக கருதுகிறேன்."
என புன்னகைக்கிறார் கென் யாங். 2020 ஆம் ஆண்டுக்குள்
கட்டிடங்களில் பசுமை பெருகும் என நம்பிக்கை கொண்டிருக்கிறார்.
"பசுமை கட்டிடங்கள் மட்டுமல்ல நமது மக்களின் வாழ்க்கையும் பசுமையை நோக்கியதாக
மாறவேண்டும். அப்போது அரசு, போக்குவரத்து,
வணிகம் என அனைத்தும் இயற்கை நோக்கிய திரும்பியதாக மாறும். எதிர்காலம் இப்படி அமையவே விரும்புகிறேன்" என கண்களில்
ஆர்வம் பெருக பேசுகிறார் கென் யாங்.